Monday, March 1, 2021

தமிழ்மொழியை கற்கவில்லையே என பிரதமர் மோடி... உருக்கம்!


தமிழ்மொழியை கற்கவில்லையே என பிரதமர் மோடி... உருக்கம்!

Updated : மார் 01, 2021 00:02 

'உலகின் மிகப் பழமையான மற்றும் பிரபல மொழியான தமிழை கற்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, உருக்கமாக பேசினார்.

ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிறு அன்று, 'மன் கீ பாத்' என்ற பெயரில், வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதை, பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாக வைத்துஉள்ளார்.

நம் நாட்டின் ஆன்மா

நேற்றைய 'மன் கீ பாத்' உரையில், பிரதமர் மோடி பேசியதாவது:மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த ஒருவர், எனக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், 'மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டம், இந்த அரசின் கொள்கை முடிவு மட்டுமல்ல; அது நம் நாட்டின் ஆன்மா' என குறிப்பிட்டு இருந்தார்; அது, 100 சதவீதம் உண்மை.

சுயசார்பு இந்தியா திட்டம் குறித்து, ஒவ்வோர் இந்தியனும் பெருமை அடைய வேண்டும். இது நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் மட்டுமல்ல. நம் நாட்டின் ஆன்மாவாகவும் கருதப்படுகிறது.


தலை நிமிரல்

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, தேஜஸ் போர் விமானம், பீரங்கிகள், ஏவுகணைகள் நம் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன.நாம் தயாரித்த, 'மெட்ரோ' ரயில் பெட்டிகள், வளர்ந்த நாடுகளில் ஓடுவதை காணும் போதும், நம் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளை சென்றடைவதை காணும் போதும், நம்மை தலை நிமிர செய்கின்றன.

சுயசார்பு இந்தியா திட்டம், நாட்டில் பல்வேறு கிராமங்களையும் சென்றடைந்துள்ளது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த எளிய மக்கள், சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை துவங்கி வருவதை காண்பது, உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.மனித குலத்தின் வளர்ச்சிக்கு, தண்ணீர் இன்றியமையாதது. அதை பாதுகாக்கும் பொறுப்புணர்வு நம் அனைவருக்குமே உள்ளது.

நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த சில மாதங்களில் மழை காலம் துவங்குகிறது. அதன் அடிப்படையில், மழை நீரை சேகரிக்கும் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும், 100 நாள் பிரசாரத்திற்கு, மத்திய அரசு திட்டமிட்டுஉள்ளது. இந்த பிரசாரத்தை, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் விரைவில் துவக்க உள்ளது. ஏற்கனவே உள்ள மழை நீர் சேகரிப்பு வசதிகளை, நாம் பழுது பார்த்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். கிராமங்களில் உள்ள குளங்கள், ஏரிகளை துார் வார உறுதி ஏற்க வேண்டும்.

பாராட்டு

தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து, அப்பகுதியில் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத கிணறுகள் மற்றும் இதர நீர் நிலைகளை கண்டறிந்து, அதை துார் வாரும் அவசியம் குறித்து, தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.

'நான் குஜராத் முதல்வராக பதவி வகித்தது முதல், தற்போது பிரதமராக பதவி வகித்து வரும் இன்றைய காலகட்டம் வரை, செய்ய தவறியதாக நினைத்து வருத்தப்படுவது எது' என, ஐதராபாதைச் சேர்ந்த, அபர்ணா ரெட்டி என்பவர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார்.அதற்கு நான் இப்போது பதில் தர விரும்புகிறேன்.

உலகின் மிகப் பழமையான மற்றும் பிரபலமான மொழியான தமிழை கற்காமல் தவறவிட்டு விட்டோமே என்ற வருத்தம் எனக்கு உண்டு.தமிழ் மிகவும் அழகான மொழி. உலகம் முழுதும் பிரசித்தி பெற்ற மொழி. தமிழ் இலக்கியத்தின் மேன்மை மற்றும் கவிதை வரிகளில் உள்ள ஆழம் குறித்து, பலரும் என்னிடம் சிலாகித்து கூறியுள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.

ம.பி., பெண் அசத்தல்

மத்திய பிரதேசத்தின், சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள, அக்ரவுதா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், பபிதா ராஜ்புத். இந்த கிராமத்தில் மிகப் பெரிய ஏரி உள்ளது. குறைவான மழை காரணமாக, இந்த கிராமத்தில், 2018ல், மிகப் பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதையடுத்து, ஏரியை புனரமைக்க பபிதா ராஜ்புத் திட்டமிட்டார்.

கிராமத்தைச் சேர்ந்த இதர பெண்களை திரட்டி, ஏரியில் மழை நீர் வந்து விழும்படி கால்வாய் வெட்டினார். கடந்த ஆண்டு இரண்டு முறை பெய்த மழையில், அந்த ஏரி தற்போது நிரம்பி உள்ளது. ம.பி., பெண்ணின் முயற்சிக்கு, நேற்றைய நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

கைவினைக் கலைஞரை பாராட்டிய பிரதமர்

வாழை நாரில் இருந்து, பல்வேறு கைவினைப் பொருட்களை தயாரித்து வரும், மதுரை மேலக்கால் கைவினைக் கலைஞர் முருகேசனை, 52, பிரதமர் மோடி, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பாராட்டினார். பிரதமர் கூறியதாவது:

மதுரை அருகேயுள்ள, ஒரு கிராமத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் முருகேசன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, வாழைக் கழிவில் இருந்து, பல பொருட்களை தயாரிக்கிறார். இது, நல்ல தொழில், அனைத்து மாநிலங்களிலும், இதை நடைமுறைப்படுத்தலாம். நாட்டில், இவர் தான், முதல் முறை இம்முயற்சியை செய்துள்ளார்.இவ்வாறு, பிரதமர் கூறினார்.

இதைக்கேட்டு நெகிழ்ச்சியுற்ற முருகேசன் கூறியதாவது: வாழை அறுவடை முடிந்ததும், அதிலிருந்து வரும் கழிவுகளை சேகரித்து, கயிறு திரிக்கத் துவங்கினேன். இதற்காக, ஒரு இயந்திரத்தையும் நானே கண்டு பிடித்து, காப்புரிமை பெற்றுள்ளேன். வாழை கயிறுகளில் இருந்து, டேபிள் மேட், ஜன்னல் ஸ்கிரீன், கூடை, நைட் லேம்ப் உள்ளிட்ட, பல்வேறு பொருட்களை தயாரிக்கிறேன்.

மேலக்கால் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, 350 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து, வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறேன். இவர்களுக்கு, மத்திய அரசின் கைவினைக் கலைஞர்கள் என்ற, அடையாள அட்டை பெற்று கொடுத்துள்ளேன்.பிரதமரின் பாராட்டை, என், எட்டு ஆண்டு கால உழைப்பிற்கு கிடைத்த, பெரிய விருதாக நினைக்கிறேன். இதனால் நான் அடைந்த நெகிழ்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை என்றார்.

- இவரை வாழ்த்த 93605 97884.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024