Saturday, March 13, 2021

சொல் நாகரிகம்: அவரல்லவோ பெருந்தலைவர்



சொல் நாகரிகம்: அவரல்லவோ பெருந்தலைவர்

Added : மார் 13, 2021 00:14

திருப்பூர் ராயபுரத்தில், முக்கோண பார்க் அருகேயுள்ள மைதானம். அப்போது, அது பெரிய மைதானம். இப்போது, அங்கே பிள்ளையார் கோவில் வந்து விட்டது. அந்தக் காலத்தில், தேர்தல் கூட்டங்கள் எல்லாம், அந்த மைதானத்தில் தான் நடக்கும்.தேர்தல்களம் சூடு பிடித்துக் கொண்டிருந்தது. அன்று மாலை, அங்கு பெருந்தலைவர் காமராஜ் பேசப்போகிறார் என்ற செய்தி, எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. காமராஜ் பேச்சைக் கேட்க, பெருந்திரளான மக்கள் அங்கே கூடியிருந்தனர். நான், திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில், பி.ஏ., தமிழ் இளங்கலை படித்துக் கொண்டிருந்தேன். மாணவர்கள் மத்தியில், காமராஜுக்கு அளவற்ற செல்வாக்கிருந்த காலகட்டம் அது.ஏராளமான மாணவர்கள், கூட்டத்தினரிடையே நெருக்கியடித்து அமர்ந்திருந்தோம்.

நானும், நண்பர்களும் வெகுநேரத்திற்கு முன்னரே, அங்கு போய் இடம்பிடித்து, முன்வரிசையில் தரையில் அமர்ந்திருந்தோம்.தமிழக அரசியல் வானில், நல்லவர்கள் மதிக்கும் நட்சத்திரமாக, காமராஜ் ஒளி வீசிக் கொண்டிருந்தார். தீபம் நா.பார்த்தசாரதி, 'கல்கி' வார இதழில், காமராஜையே, ராமராஜ் என்ற பெயரில் ஒரு பாத்திரமாக்கி, 'சத்தியவெள்ளம்' என்ற நாவலை தொடராக எழுதிக் கொண்டிருந்தார். காமராஜ் வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்ட நாவல் அது.நா.பா., ஜெயகாந்தன், சோ, குமரி அனந்தன் என பலர், காமராஜ் அணியில் மேடைகளில் பேசிக் கொண்டிருந்தனர். அன்று காமராஜும், அவருக்கு முன்பாக குமரி அனந்தனும் பேசுவதாக ஏற்பாடு.காமராஜ் இன்னும் வரவில்லை. ஆனால், குமரி அனந்தன் வந்து மேடையேறி விட்டார்; பின், பேசத் தொடங்கினார். காமராஜுக்காகக் காத்திருந்த கூட்டம், குமரி அனந்தனின் சொக்க வைக்கும் சுந்தரத் தமிழில் மயங்கி, அவர் பேச்சை ஊன்றிக் கேட்டுக் கொண்டிருந்தது.

'ஏழைகளின் இல்லங்களை தேடி நடக்கும் கால்கள் எவருடைய கால்கள்? அவை பெருந்தலைவரின் கால்கள்! ஏழைகளின் துயரத்தை மாற்றக் குரல் கொடுக்கும் வாய் யாருடைய வாய்? அது, பெருந்தலைவரின் வாய்!' என்றெல்லாம், குமரி அனந்தன் அடுக்கினார்.கணீரென்ற குரல்; திருத்தமான உச்சரிப்பு; உணர்வு பூர்வமான பேச்சு. அவரது ஒவ்வொரு வாக்கியத்திற்கும், கைதட்டல் விண்ணைப் பிளந்தது.அப்போது, காமராஜ் காரில் அங்கு வந்து சேர்ந்தார். மக்கள் வெள்ளம், 'பெருந்தலைவர் வாழ்க!' என, உரத்துக் குரல்கொடுக்க, அவர் மேடையேறினார். கறுப்பு நிறம்; ஒளிவீசும் விழிகள்; முழங்கால் வரை நீண்ட கைகள். அவரிடம் மக்கள் மனங்களை அள்ளிக் கொள்ளும் ஏதோ ஒரு மாய வசீகரம் இருந்தது. அவர் மேடையில் அமர்ந்ததும், அனைவரும் அவரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.காமராஜின் வருகையை ஒட்டி, சிறிய இடைவேளை விட்ட குமரி அனந்தன், மீண்டும் பேச்சை தொடர்ந்தார்: 'ஏழைகளின் துயரத்தை கண்டு கண்ணீர் சிந்தும் கண்கள் எவருடைய கண்கள்? அவை பெருந்தலைவரின் கண்கள்!...'காமராஜ் நடுவே குறுக்கிட்டு, 'போதும்ணேன்' என்றார். தன்னை புகழ்வதைக் கேட்க அவருக்குப் பிடிக்கவில்லை. அத்தகைய பண்பாடு அவருடையது.தலைவரின் ஆணைக்கு உடனடியாகக் கட்டுப்படுவதை, உயர்ந்த கலாசாரமாகக் கொண்டிருந்த குமரி அனந்தன், உடனே பேச்சை முடித்து அமர்ந்தார். அடுத்து காமராஜ் பேச எழுந்தார்.

உட்கார்ந்திருந்த போதே, உயரமாகத் தெரிந்த அவர், எழுந்து நின்ற போது, இன்னும் உயரமாகத் தெரிந்தார். அவர் மிக உயர்ந்த மனிதர் என்பது உண்மை தான் என்பதை, அவர் பேச்சும் நிரூபித்தது.அடுக்கு மொழியில்லை; அலங்கார வார்த்தைகள் இல்லை. எதிர் கட்சியினரை திட்டி ஒரு சொல் கிடையாது. ஒரு கிராமத்து மனிதர் உரையாடுவது போல பேசினார். உதட்டிலிருந்து பேசாமல், இதயத்திலிருந்து பேசினார். நெஞ்சைத் தொடும் பனியன்களை தயாரிக்கும், திருப்பூர் மக்களின் நெஞ்சைத் தொட்ட பேச்சு அது.தங்கள் கட்சி என்னென்ன செய்வதாகச் சொல்கிறது என்பதை விவரித்தார். எதிர்க் கட்சியினர் சொல்வதையும், தாங்கள் சொல்வதையும் ஒப்பிட்டுச் சீர்துாக்கிப் பார்க்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார். எந்தக் கட்சி, நாட்டுக்கு நல்லது செய்யும் என்று தோன்றுகிறதோ, அதற்கே ஓட்டளிக்கும்படி கூறினார். தன் கட்சிக்கு ஓட்டளியுங்கள் என, நேரடியாக அவர் கேட்கவே இல்லை.'எதிர்க்கட்சிக் காரங்க, என்ன வெள்ளைக்காரங்களா? அவங்களும் நம்ம இந்தியர்கள் தானேண்ணேன்.

யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் நல்லாருக்கணும். அதுதான் முக்கியம்ணேன்! அவங்கவங்க மனச்சாட்சிப் படித்தான் எல்லோரும் எப்பவும் இயங்கணும்!' என்று சொல்லி, கைகூப்பி விடைபெற்றார். அவருக்குப், 'பெருந்தலைவர்' என்ற பட்டம்தான், எவ்வளவு பொருத்தமானது!அனைவரும் பிரமிப்போடு, அவரையே பார்த்துக் கொண்டிருக்க மக்களில் ஒருவராக மேடையேறிய அவர், மக்களில் ஒருவராகவே மேடையிலிருந்து இறங்கி காரில் ஏறிச் சென்றார்.சொல் நாகரிகம் என்றால், அவருடையதல்லவா சொல் நாகரிகம்! மாற்றுக் கட்சியினரை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும் இன்றைய மேடைப் பேச்சுகளை கேட்கும் போது, அன்றைய காமராஜின் பேச்சு நெஞ்சில் நிழலாடுகிறது. காமராஜின் உயரம், காலம் செல்லச் செல்ல அதிகமாகிக் கொண்டே போகிறது.திருப்பூர் கிருஷ்ணன் -ஆசிரியர், அமுதசுரபி மாத இதழ்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024