Sunday, March 11, 2018

ஒருவரின் டிக்கெட்டில் வேறொருவர் பயணிக்கலாம் 'ஓகே!' 24 மணி நேரத்தில் பெயர் மாற்றிக் கொள்ள வசதி
புதுடில்லி : ரயில்களில், ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டில், வேறொருவர் பயணிக்கும் வசதி அறிவிக்கப்பட்டு உள்ளது; இதன்படி, ரயில் புறப்படுவதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், பெயரை மாற்றிக் கொள்ளலாம். இது தொடர்பாக, ஏற்கனவே உள்ள சில நிபந்தனைகள், தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.



தற்போது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் பயணம் செய்ய முடியாத போது, டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிஉள்ளது. டிக்கெட் ரத்து செய்யப்படும் நேரத்தை அடிப்படையாக வைத்து, கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.

கடந்த, 1990ல், அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்வே விதிமுறைகளில், 1997 மற்றும், 2002ல், திருத்தங்கள் செய்யப்பட்டு, முன்பதிவு டிக்கெட்டை, குடும்ப உறுப்பினருக்கு மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது; ஆனால், இந்த வசதி பொதுமக்களை சென்றடையவில்லை.

புதிய வழிமுறை

இந்நிலையில், ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டில், அவருக்கு பதிலாக வேறு ஒருவர் பயணம் செய்வது தொடர்பான, சில புதிய வழிமுறைகளை, ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:டிக்கெட் முன்பதிவு செய்த தனிநபருக்கு பதில்,


அவரது தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மனைவி அல்லது கணவன், குழந்தைகள் என, குடும்ப உறுப்பினர்கள் பயணிக்கலாம்.

இந்த வசதியை பெற, ரயில் புறப்படுவதற்கு, 24 மணி நேரத்திற்கு முன், தன் டிக்கெட்டில் பயணிக்கப் போகும் நபர் குறித்த விபரங்களுடன், முக்கிய ரயில் நிலைய தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, போதிய சான்றிதழ்களை சமர்ப் பிக்க வேண்டும்.

அதே போல், திருமண கோஷ்டியாக செல்வோர், அவர்களை தலைமையேற்று அழைத்துச் செல்பவரின் அனுமதி கடிதத்துடன், புதிதாக செல்பவர்களின் பெயர், விபரங்களை தெரிவிக்க வேண்டும்.

அனுமதி கடிதம்

அதற்கேற்ப டிக்கெட், வேறு ஒருவரது பெயரில் மாற்றித் தரப்படும்.அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து, குழுவாக சுற்றுலா செல்லும் மாணவர்களில் மாற்றம் இருந்தால், கல்வி நிறுவன தலைவரின் அனுமதியுடன், வேறு மாணவருக்கு டிக்கெட்டை மாற்ற, 48 மணி நேரத்துக்கு முன், விண்ணப்பிக்க வேண்டும்.

அப்படி விண்ணப்பித்தால், அதே கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த, வேறு மாணவருக்கு டிக்கெட் மாற்றி வழங்கப்படும். பணி நிமித்தமாகச் செல்லும் அரசு ஊழியர், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை அனுப்ப, மேலதிகாரியின் ஒப்புதல் கடிதத்துடன், தனக்கு பதிலாகச் செல்லும் ஊழியரின் பெயருக்கு டிக்கெட்டை மாற்றலாம்.

தேசிய மாணவர் படை மாணவர்கள், அரசு ஊழியர்கள் என, குழுவாகச் செல்பவர்களில் மாற்றம் இருந்தால்,

சம்பந்தப்பட்ட துறை அதிகாரியின் அனுமதி கடிதத்துடன், ரயில் புறப்படுவதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், விண்ணப்பிக்க வேண்டும்.

முன்பதிவு டிக்கெட், ஒரு முறை மட்டுமே வேறு நபர்களுக்கு மாற்றி வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம், சில வசதிகளை செய்து கொடுத்தாலும், அதை மக்கள் மத்தியில் சென்று சேரும் வகையில் விளம்பரப்படுத்துவதில்லை; அதிகாரிகளும் அதில் கவனம் செலுத்துவதில்லை. முன்பதிவு மையங்களில் டிக்கெட்டை ரத்து செய்து, தனக்கு பதிலாக வேறு ஒருவருக்கு, அதே தேதியில் டிக்கெட் பதிவு செய்ய வருவோருக்கு, இந்த வசதி இருப்பதை, ரயில்வே ஊழியர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

- ஆர்.கிரி தஞ்சாவூர் மாவட்ட ரயில் பயணியர் சங்க செயலர் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது தொடர்பான விஷயத்தில், சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன; அவற்றை முறையாகச் செயல்படுத்த வேண்டும். மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் ஏஜன்டுகள், இந்த வசதியை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. அதனால், டிக்கெட் மாற்றம் கோரும் பயணியரின் ஆவணங்களை சரிபார்த்து வழங்க வேண்டும்.
- கே.பிரம்மநாயகம் துாத்துக்குடி மாவட்ட ரயில் பயணியர் சங்க செயலர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024