Wednesday, March 7, 2018



தமிழகத்தில் கூடுதலாக 56 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு அனுமதி

By DIN | Published on : 07th March 2018 02:24 AM |

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 56 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்துள்ளது. 2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இந்த இடங்களுக்கு சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறைக்கு 5 இடங்கள், பொது மருத்துவத் துறைக்கு 8 இடங்கள், கதிர்வீச்சு பரிசோதனைத் துறைக்கு 3 இடங்கள், முடநீக்கியல் துறைக்கு 3 இடங்கள் என மொத்தம் 19 இடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறைக்கு 6 இடங்கள், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறைக்கு 2 இடங்கள், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் பொது மருத்துவத் துறைக்கு 6 இடங்கள், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் துறைக்கு 4 இடங்கள் என மொத்தம் 10 இடங்கள், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் துறைக்கு 5 இடங்கள், கண் மருத்துவத் துறைக்கு 2 இடங்கள் என மொத்தம் 7 இடங்கள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் துறைக்கு 3 இடங்கள், குழந்தைகள் நலத் துறைக்கு 4 இடங்கள், முடநீக்கியல் துறைக்கு 5 இடங்கள் என மொத்தம் 12 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மொத்தம் 56 கூடுதல் இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. தமிழகத்தில் கூடுதலாக 101 முதுநிலை இடங்களுக்கும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக 32 இடங்களுக்கும் அண்மையில் இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழகத்தின் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 1,641-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024