ஏழைகளின் முதல்வருக்கு பிரியாவிடை!
By வ.மு. முரளி | Published on : 06th March 2018 01:35 AM |
'நம்ப முடியவில்லை!'
இருபது ஆண்டுகளாக திரிபுராவில் முதல்வராக இருந்த மாணிக் சர்க்காரின் ஆட்சி அண்மையில் நடந்த தேர்தலில் முடிவுக்கு வந்தபோது, பலரும் கூறிய வார்த்தைகள் இவை.
தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், மார்க்சிஸ்ட் ஆட்சி கண்டிப்பாக மறுபடி அமையும் என்றார் அவர். ஆனால், இதுவரை திரிபுராவில் எந்த ஓர் அடித்தளமும் இல்லாதிருந்த பாஜகவிடம் அவர் தோற்றுவிட்டார்!
நாட்டிலுள்ள மாநில முதல்வர்களில் மிகவும் வசதி குறைந்தவர் மாணிக் சர்க்கார். முதல்வர் என்ற முறையில் கிடைத்த அரசு ஊதியத்தையும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வழங்கிவிட்டு, தனது தேவைக்காக சுமார் ரூ. 10,000 மட்டும் கட்சியிடம் பெற்றுக்கொண்டு அவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.
தனது முன்னோர் வசித்த சிறிய வீட்டில்தான் வசிக்கிறார். அரசு படாடோபங்களை வெறுத்தவர்; காட்சிக்கு மட்டுமல்ல, அணுகவும் எளியவர்; நேர்மையானவர்; சுயநலமற்றவர். இதனை அவரது அரசியல் எதிரிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.
தையல் தொழிலாளியான தந்தைக்கும் அரசு ஊழியரான தாய்க்கும் மகனாக 1949-இல் பிறந்த மாணிக் சர்க்கார், கல்லூரி மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளரானார். அன்றைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தினார். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார். தனது 31-வது வயதில் அகர்தலா தொகுதியின் எம்.எல்.ஏ. ஆனார்.
1993-இல் மார்க்சிஸ்ட் கட்சி திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தபோது அவர் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆனார். 1998-இல் அப்போதைய முதல்வர் தசரத் தேவ் காலமானபோது திரிபுராவின் முதல்வராகவும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் சர்க்கார் தேர்வானார். கடந்த 20 ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி திரிபுராவில் தொடர்ந்து வெல்லவும் அவரே காரணமாக இருந்தார்.
சிந்தித்துப் பாருங்கள். ஒரு சாதாரண வார்டு உறுப்பினர்கூட சில ஆண்டுகளில் திடீர் கோடீஸ்வரர் ஆகிவிடுவதை நாம் கண்டுவருகிறோம். மாணிக் சர்க்காரோ, கட்சியிலும் ஆட்சியிலும் உயரிய நிலையில் பல்லாண்டுகள் இருந்தபோதும் பணத்தின் பின்னால் செல்லவில்லை.
இத்தனை சிறப்புப் பெற்ற மாணிக் சர்க்காரை திரிபுரா மக்கள் நிராகரித்திருப்பதை அவரது ஆதரவாளர்களால் நம்ப முடியவில்லை. பெரும்பாலும் இடதுசாரிகள் மிகுந்த ஊடக உலகமும்கூட சர்க்காரின் வீழ்ச்சியைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. ஆனால், இதுவே தேர்தல் ஜனநாயகத்தின் இயல்பு என்பதை உணர்ந்த எவரும், இந்த முடிவால் அதிர்ச்சியோ, வியப்போ அடைய மாட்டார்கள்.
மக்களின் வாக்குகளால் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. எனவே, இந்தத் தேர்தல் முடிவுகளுக்காக, சமூக ஊடகங்களில் இப்போது அரங்கேறியுள்ள திரிபுரா மக்கள் மீதான வசை பாடலோ, பாஜகவின் வெற்றியை சந்தேகப்படுவதோ முறையல்ல. குறிப்பாக, தொடர்ந்து 4 முறை ஆட்சி அமைத்த மார்க்சிஸ்ட் கட்சி அவ்வாறு கூற இயலாது.
உண்மையில் இந்தத் தோல்வி மாணிக் சர்க்காரின் தோல்வி அல்ல; அவர் சார்ந்திருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோல்வி இது. எந்த ஒரு கட்சியும் நீண்ட நாள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் ஏற்படும் அதிகார மமதை மார்க்சிஸ்ட் கட்சியை அரித்ததே, மக்கள் அக்கட்சியை நிராகரிக்கக் காரணம். கடந்த பல ஆண்டுகளாகவே மார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் எதேச்சாதிகாரத்துடன் செயல்பட்டு வந்தார்கள். முதல்வர் எளியவராக இருந்தாலும், அவரது கட்சியினர் குட்டி அரசர்களாகிவிட்டார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் மிரட்டப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸால் மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகப் போராட முடியாத நிலையில், அந்த வெற்றிடத்தை பாஜக நிரப்பியது. பாஜகவினர் பல இன்னல்களுக்கு ஆளாயினர். கடந்த ஓராண்டில் மட்டும் பாஜக தலைவர்கள் மூவர் மார்க்சிஸ்ட் கட்சியினரால் கொல்லப்பட்டனர். இவை மாணிக் சர்க்காருக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது.
மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. ஆசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு, ரோஸ்வேலி நிதிநிறுவன மோசடி, சாரதா நிதி நிறுவன மோசடி, உள்கட்டமைப்புத் திட்டங்களில் நிதி சுருட்டல், மருத்துவமனைக்கு மருந்து கொள்முதலில் லஞ்சம், தேசிய சுகாதாரத் திட்டத்தில் ஊழல் என மார்க்சிஸ்ட் கட்சியினர் முறைகேடுகளில் திளைத்தனர். கட்சிப் பற்று காரணமாக இவற்றை முதல்வர் கண்டும் காணாமல் இருந்தார். அதன் விளைவையே இப்போது அறுவடை செய்திருக்கிறார்.
இடதுசாரிகள் ஆதிக்கம் காரணமாக தொழிற்சாலைகள் பல மூடப்பட்ட நிலையில், அரசுப் பணிகள் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கே கிடைத்து வந்ததும் அதிருப்தியை ஊதிப் பெருக்கியது. இளம் தலைமுறையினர் அரசுக்கு எதிராகத் திரண்டனர். அதை பாஜக திறமையாகப் பயன்படுத்திக்கொண்டு, வெற்றிக்கனியைப் பறித்தது.
மாநிலத்தின் பொருளாதார நிலை தேக்கம் அடைந்ததும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு தொடர்ந்து புறக்கணித்ததும், தொழில்வளம் பெருகாததும், ஆட்சி மீதான அதிருப்தியாக மாறின.
மாணிக் சர்க்கார் நல்லவர்தான். ஆனால், அவரது கண்களுக்கு இந்த பாதிப்புகள் புலப்படவில்லை என்பது ஓர் அரசியல் தலைவர் என்ற முறையில் பலவீனமே. மக்களின் அதிருப்தியை உணர இயலாத வகையில் கட்சி சார்ந்தே அவர் இயங்கினார்.
அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் தனது கட்சியினரின் பலவீனத்தால் அவர் தோல்வி அடைந்தாலும், எளிமை என்ற அம்சத்தில் அவர் அனைவருக்கும் முன்மாதிரியே. அவருக்கு பிரியாவிடை அளிப்பது, நமது நல்ல அம்சங்களை நாமே பாராட்டிக் கொள்வது போன்றது!
No comments:
Post a Comment