Friday, March 2, 2018

மக்களின் மடாதிபதி

Added : மார் 01, 2018 20:38

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாமான்ய மக்களின் மடாதிபதியாக திகழ்ந்தார். அனைத்து தரப்பினரிடமும் அன்போடு பழகினார். ஆன்மிகத்தில் மட்டுமல்லாமல் மதநல்லிணக்கம், கல்வி சேவை, சமுதாய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியாக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1994ல் பொறுப்பேற்றார். சர்வ தீர்த்தக்குளக் கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், இளம் சன்னியாசியை தனியாக அழைத்து சென்ற, மகா பெரியவர், அவருக்கு 'ஜெயேந்திர சரஸ்வதி'என்ற பெயரை சூட்டி, மஹா வாக்கியத்தை உபதேசித்தார். அதன் பிறகு காஞ்சி காம கோடி பீடத்தின் இளைய பீடாதிபதியாக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை, மகா பெரியவர் நியமித்தார்.24 ஆண்டுகள் மடத்தை சிறப்பாக வழிநடத்தினார். தனது 82வது வயதில் முக்தி அடைந்தார். இவரது காலத்தில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்தார்.




அயோத்திக்கு தீர்வு:

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் அமைக்கும் விவகாரத்தில், நீதிமன்றத்துக்கு வெளியே அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேசி, சுமூக முடிவு எட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீவிரமாக செயல்பட்டார். முஸ்லிம் தலைவர்களையும் சந்தித்து பேசி கருத்தொற்றுமை ஏற்படுத்தினார். முஸ்லிம்களின் ஒத்துழைப்போடு அயோத்தியில், ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் என்பது இறுதியான நிலையில், பார்லிமென்ட்டுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் அப்போதைக்கு இந்த முடிவை அறிவித்து, அரசியலாக்க வேண்டாமென வாஜ்பாய் முடிவு செய்தார். இதனால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. 2004 தேர்தலில், காங்., ஆட்சிக்கு வந்ததால், இவரது சமரச முயற்சி கைகூடாமல் போனது.

மதமாற்றம் தடுப்பு:

நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த 280 குடும்பங்கள்,1981 பிப்., முஸ்லிம் மதத்துக்கு மாறினர். தீண்டாமையின் காரணமாக அவர்கள் மதம் மாறியதாகவும்,ஒரு லட்சம் தலித்துகள், மதம் மாற தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போது, மீனாட்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுடன் இணைந்து, இளைய பீடாதிபதியாக இருந்த காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்று, மக்களை சந்தித்து ஆறுதலையும், தன்னம்பிக்கையையும் ஊட்டி மதம் மாறாமல் தடுத்தார்.

அதேபோல், குமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரத்தின்போது, கலவரத்தை கட்டுப்படுத்த இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட துறவியர் பாதயாத்திரையில் இவர், கலந்துகொண்டு கலவரத்தை கட்டுப்படுத்த பெரும் முயற்சி எடுத்தார்.

'செயல் வீரர்':

காஞ்சி பெரியவர் தன்னை 'இச்சா சக்தி' என்றும், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை 'கிரியா சக்தி' என்று வர்ணித்திருக்கிறார். மனதில் உண்டாகும் எண்ணம், விருப்பம், இச்சையை குறிப்பது இச்சா சக்தி. அதை செயல்படுத்தும் ஆற்றலை 'கிரியா சக்தி' என குறிப்பிடுவர். இவர் பீடாதிபதியாக இருந்த காலத்தில் காஞ்சிப்பெரியவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் தரும் செயல்வீரராக திகழ்ந்தார்.

கண் சிகிச்சை முகாம்:

'ஜன கல்யாண்' அமைப்பு மூலம் ஏழைகளுக்கு மாதம் தோறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினார் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். சுமார் 1.5 லட்சம் பேருக்கு கண்புரை நீக்க அறுவை சிகிச்சை செய்து இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது. நாட்டின் பல மாநிலங்களில், கண் மருத்துவமனைகளை திறந்து லட்சக்கணக்கானோருக்கு பார்வை கிடைக்க வழி செய்தார்.

தமிழ் ஆர்வம்:

தமிழ் மொழி வளர்ச்சிக்கு சங்கர மடத்தின் மூலம் பல்வேறு பணிகளை காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்தார். திருப்பாவை, -திருவெம்பாவை மாநாடுகள், திருஞானசம்பந்தரைப் போற்றி அவதார இல்லம் திறப்பு, கோயில் ஓதுவார்களை ஆண்டு தோறும் கவுரவித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார். இந்து சமய மன்றம் சார்பில் தேவாரப் பாடசாலைகள் நடத்தப்பட்டன. தமிழ்ப் புலவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்தார்.

ஜன கல்யாண்:

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பீடாதிபதியாக பொறுப்பேற்றதும், மடம் சார்பில் பல அமைப்புகளை தொடங்கினார். இதில் முக்கியமானது ஜன கல்யாண். இவர் பட்டமேற்று 50வது ஆண்டு விழா 2003ல் 'பீடாரோஹன ஸ்வர்ண ஜெயந்தி' விழாவாக கொண்டாடப்பட்டது. அப்போது கனகாபிஷேகம் செய்யப்பட்டது. எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக 'ஜன்கல்யாண்', 'ஜன்ஜாகரன்'அமைப்புகளை தொடங்கினார்.

தாழ்த்தப்பட்ட மக்களிடம் பக்தி உணர்வை பரப்ப 'சக்தி ரதத்தை' உலா வரச் செய்தார். ஏழை, எளிய மக்களுக்கு பல வகைகளிலும் சேவை செய்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, அவர்களிடமும் ஆன்மிக உணர்வை பரப்பினார். அவர்கள் சுய காலில் நிற்க சுயதொழில் பயிற்சிகள் பெற ஏற்பாடுகள் செய்தார். பலருக்கு வங்கி கடன் உதவிக்கு ஏற்பாடு செய்து, தொழில் தொடங்க வழி செய்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக்கல்வி நிலையங்களை ஏற்படுத்தி, அவர்களின் திறனை அதிகரிக்க உதவினார்.

சீனாவில் வரவேற்பு:

நேபாளத்துக்கு 1988ல் இவர் சென்றபோது, 'உலகின் ஒரு இந்து தேசம் உங்களை வரவேற்கிறது' என்று அலங்கார வளைவு அமைக்கப்பட்டது. ஆதிசங்கரருக்குப் பின், கைலாஷ் மான சரோவருக்கு சென்ற ஒரே சங்கராச்சாரியார் இவரே. அங்கு ஆதிசங்கரரின் சிலையையும் நிறுவினார். இவர் சீனா சென்றபோது, அவருக்கு சீன அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது. புத்தமதம் சாராத பிறமத சன்னியாசி ஒருவருக்கு சீனா, சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது, இவருக்கு மட்டும் தான்.

சோகத்தில் இருள்நீக்கி:

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள இருள்நீக்கி கிராமத்தில் பிறந்தார். இந்த ஊர் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் உள்ளது. ஜெயேந்திர சரஸ்வதி, மடாதிபதியான பின்பும், தான் பிறந்த சொந்த கிராமத்து மக்கள் மீதும், கிராமத்தின் வளர்ச்சி குறித்தும் அக்கறை கொண்டிருந்தார். இந்த கிராமத்துக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பள்ளிக் கட்டடங்களை கட்டிக் கொடுத்தார். பெண்களுக்கு தையல் பயிற்சி, நுால் நுாற்பு நிலையத்தை தொடங்கினார்.

இங்குள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார். மருத்துவமனை ஒன்றை நிறுவினார். இவரது மறைவு செய்தி கேட்ட, அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அவர் பிறந்த வீட்டின் முன்பு, உருவபடத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

உலகளவில் சீடர்கள்:

பிரதமர்கள், ஜனாதிபதிகள் இவரை வந்து சந்தித்து தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். எப்போதும் இன்முகத்துடன் இருப்பதும், சிரத்தையுடன் சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அருளாசி வழங்குவதும் இவரது தனிச்சிறப்பு.வெளிநாட்டு துாதர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அலுவலர்கள் என பல தரப்பிலும் இவருக்கு சீடர்கள் உள்ளனர்.பஜனைப் பாடல்கள் : பஜனைப் பாடல்கள் பாட ஊக்குவித்ததோடு, இசைக்கருவிகள், தாளக்கருவிகளை வழங்கி கிராமங்களிலும் நாம சங்கீர்த்தனம் பரவ காரணமாய் இருந்தார்.

கடைசி நிமிடங்கள்...

மாசி 16 - பிப் 28, 2018

அதிகாலை 5:30 மணி:
வழக்கம் போல் விடிந்தது அதிகாலை. காஞ்சி மடம் செயல்பட துவங்கியது. முதல் நாள் இரவு குதிரை வாகனத்தில் வந்த காமாட்சியை ஊர்வலத்தில் வந்து சேவித்துவிட்டு, வழக்கம் போல் குருவை வணங்க, மகா பெரியவரின் சமாதிக்கு வந்தார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். பின், குளிக்க சென்றார்.

காலை 7:30 மணி:
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நிலை கொஞ்சம் தளர்ச்சியாக இருந்தது பற்றி டாக்டர் ராமச்சந்திர ஐயர் மற்றும் மடத்து ஊழியர்கள் பேசினர். குளியல் முடித்து வெளியே வரும் சமயத்தில் மீண்டும் உடலில் பாதிப்பை உணர்கிறார்.

காலை 7:45 மணி:
மருத்துவர்கள் கவனிக்கிறார்கள். விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துளசி தீர்த்தம் அளிக்கிறார். அதனை மட்டும் பருகியவரை, காமாட்சி கோயில் அருகில் உள்ள ABCD மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

காலை 9:00 மணி:
மருத்துவர்கள் இதய துடிப்பை சீராக்க முயற்சி எடுக்கின்றனர். கடும் மூச்சு திணறலால் நினைவு இழந்தவருக்கு இதயத்துடிப்பு குறைகிறது. உடனடியாக ECG எடுத்த மருத்துவர்கள், காலை 9:05 மணிக்கு, ஹேவிளம்பி (2018) ஆண்டு, மாசி 16, சுக்ல பக் ஷ திரயோதசி திதியில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்ததாக அறிவிக்கின்றனர்.

கடைசி பூஜை - தன் குருவிற்கு
கடைசி பயணம் - தன் குருவின் சமாதிக்கு
கடைசி உணவு - தன் சிஷ்யரின் கையிலிருந்து துளசி தீர்த்தம்
கடைசியாக அருளியது - எல்லோரும் க்ஷேமமா இருங்கோ!

கடைசியாக இருப்பது - தன் குருவின் சமாதி அருகிலேயே, காமாட்சி அம்மனை நோக்கியபடி நித்திய வாசம்.

No comments:

Post a Comment

Dual seat allotments cause vacancies in PG med counselling

Dual seat allotments cause vacancies in PG med counselling  TIMES NEWS NETWORK  30.11.2024 Chennai : At least 50 candidates in Tamil Nadu we...