Friday, March 2, 2018

வங்கி மோசடி: தீர்வு என்ன?

By எஸ். கோபாலகிருஷ்ணன் | Published on : 02nd March 2018 01:30 AM |

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நேர்ந்த ரூ.11,500/ கோடி மோசடி நாட்டையே உலுக்கிவிட்டது. யாரைப் பார்த்தாலும், விஜய் மல்லையா விவகாரம் முடிவதற்குள், இப்படி ஒரு மோசடியா? என்று அதிர்ச்சி தெரிவித்தனர். இந்நிலையில், அரசு முதல் சாதாரண குடிமகன் வரை, இந்த தொடர் மோசடிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அவசர அவசியம் என்று கருதுவதில் வியப்பில்லை. அதேநேரம், 'வங்கிகளைத் தனியார் மயமாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்று பலரும் கூறுகின்றனர். அதாவது, இந்த பயங்கரமான நிதி மோசடிகளுக்கெல்லாம் வங்கிகள் அரசின் உடைமையாக இருப்பதுதான் காரணம் என்பது அவர்களது கூற்றாக உள்ளது. இது எந்த அளவு உண்மை?

1969-ஆம் ஆண்டு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 1970களிலோ, 1980களிலோ அல்லது 1990களிலோ இதுபோன்ற பெரும் நிதி மோசடிகள் வங்கிகளில் நிகழவில்லை என்பது நிதர்சனம். இந்திய வங்கிகள் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த பெரிய அளவிலான வங்கி மோசடி 1992-ஆம் அண்டு, ஷர்ஷத் மேத்தா என்னும் பங்குச் சந்தை தரகர் பாரத ஸ்டேட் வங்கியில் அரங்கேற்றியதுதான். தொகை ரூ.4,900 கோடி. பிறகு, அதேபோன்ற மற்றொரு மோசடி 2001-ஆம் ஆண்டு, கேதன் பாரேக் என்னும் பங்குத் தரகர் ரூ.1,200 கோடி வங்கி மோசடி செய்தார்.

1991-92ல் அறிமுகமான தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் சித்தாந்தங்கள் செயல்படுத்தப்பட்ட நேரத்தில் 'புதிய தலைமுறைத் தனியார் வங்கிகள்' தொடங்கப்பட்டன. அந்த சமயம் நிறுவப்பட்ட 'குளோபல் டிரஸ்ட் வங்கி' என்னும் தனியார் வங்கி, தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, பல்வேறு மோசடிகளினால் திவால் ஆனது.ஆக, வங்கி மோசடிகளுக்கும் வங்கிகள் நாட்டுடமையாக இருப்பதற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

மாறாக, வங்கி மோசடிகளுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. எந்த ஆட்சி நடந்தாலும் சரி, பொதுவாக அரசியல் செல்வாக்கு, சில வங்கித் தலைவர்கள் உள்ளிட்ட மேல்நிலை அதிகாரிகளின் வளைந்து கொடுக்கும் போக்கு, பேராசை, அதிகாரிகளுக்கு கண்காணிப்புத் திறமை இன்மை, கடன் வழங்கும் கலையில் தேர்ச்சி இன்மை ஆகியவையே மோசடிக்கான காரணங்கள். இவை தவிர, நிர்வாக இயலின் பால பாடங்களைக் கூட கடைப்பிடிக்கத் தவறியதும் தற்போதைய அவலநிலைக்கு காரணம்.

உதாரணமாக, வங்கி அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. பெரும்பாலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இடமாற்றம் செய்வார்கள். இதன் மூலிலம் அவர்களுக்குப் பணிப் பயிற்சியும் அனுபவ ஆற்றலும் அதிகரிக்கும். அதேநேரம், சில அதிகாரிகளுக்கு முறைகேடுகளில் ஈடுபடும் மனப்பான்மை இருக்குமேயானால், இடமாற்றங்கள் ஒரு தடுப்பணையாக அமையும். இதை 'ஜாப் ரொடேஷன்' என்பார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியில் சம்பந்தப்பட்ட நபர் 6 ஆண்டுகளாக ஒரே பணியில், ஒரே இடத்தில் இருந்துள்ளார்.
அதேபோல், ஒரு அலுவலர் வருடக்கணக்கில் ஒருநாள்கூட விடுமுறை எடுக்காமல் இருந்தால், அவரது நடவடிக்கை கண்காணிக்கப்பட வேண்டும். அவர் எதையோ மறைக்கிறார், அவர் ஈடுபட்டுள்ள முறைகேடுகளை, வேறு ஒருவர் தன் பணியை மேற்கொண்டால், கண்டுபிடித்துவிடுவார் என்ற அச்சத்தினால் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருபவர்களும் உண்டு.
ரிசர்வ் வங்கியின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று, வங்கிகளின் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான பணிகளைக் கண்காணிப்பதாகும். இந்தப் பணியை மேற்கொள்வதில் ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது தவறிவிடுகிறது. போதிய மனிதவளம் -ஊழியர்கள்- இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. ரிசர்வ் வங்கியின் முக்கியமான பணிகளை மேற்கொள்ள ஆள் பற்றாக்குறை என்பதை ஒரு காரணமாக ஏற்க முடியாது.

அதுமட்டும் அல்ல. ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவி இடம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், அதாவது 7 மாதங்களுக்கு மேல், நிரப்பப்படாமல் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
தொழில்நுட்ப மேம்பாடு எவ்வளவுக்கெவ்வளவு உதவியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்துகளையும் உருவாக்க வல்லது. அத்தகைய ஆபத்துகளை அடையாளம் கண்டு, அவற்றை முறியடிப்பதற்கு ஏற்ப அலுவலர்களுக்குப் பயிற்சியும் விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் வில்லனாக அமைந்தது SWIFT இயந்திரம் தான். Society for Worldwide Inter-Bank Financial Telecommunication என்பதன் சுருக்கம்தான் SWIFT . இது சர்வதேச அளவிலான வங்கிகளுக்கு இடையேயான நிதி தொடர்பான தகவல் பரிமாற்ற சாதனம். ரகசிய 'பாஸ்வேர்டு' லிமூலம்தான் இதனை இயக்க முடியும். வங்கி அலுவலகத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு சிலரிடமே 'பாஸ்வேர்டு' ஒப்படைக்கப்படும். அந்த பாஸ்வேர்டு வைத்திருந்த நபரே கடந்த பல ஆண்டுகளாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஒரே பணியில் ஒரே இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், சிபிஎஸ் என்கிற நடைமுறை. ஒரு வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் இடையேயான தகவல்கள் எல்லாக் கிளைகளிலும் கிடைக்கும் விதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு வங்கியின் ஒரு கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் வேறு எந்த கிளையில் வேண்டுமானாலும் தனக்கு தேவையான சேவையை பெற முடியும். இந்த நடைமுறையைத்தான் சிபிஎஸ் (Core Banking Solution)என்கிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியின் சம்பந்தப்பட்ட SWIFT சாதனமும் சிபிஎஸ்ஸும் இணைக்கப்படவில்லை. இதனால் தான் மோசடிகள் பல ஆண்டுகள் வெளிவராமல் இருந்துள்ளன.
மேலும் வங்கிகளில் தற்போது நடைமுறையில் உள்ள கேஒய்சி (அதாவது 'உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்') என்கிற சர்வதேச நியதிகள் அடிப்படையில் வாடிக்கையாளர் பற்றிய பின்னணித் தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. இதன் லிமூலம் பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வரும்பட்சத்தில் அதை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்.

அதேபோல் வங்கி அலுவலர்கள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுப்பதற்கு கேஒய்இ (அதாவது 'உங்கள் ஊழியர்களை அறிந்து கொள்ளுங்கள்') என்கிற உலக அளவிலான நடைமுறையை இயன்ற அளவு (ஊழியர்களுக்குத் தேவையில்லா இன்னல்கள் தராத அளவு) பின்பற்றுவது குறித்துப் பரிசீலனை செய்யலாம்.

இன்றைய சூழலில் அலுவலர்களுக்குத் தேவை, திறமை மட்டும் அல்ல, ÷நேர்மையும் கூட. இதை உறுதிப்படுத்தும் வகையில், கேஒய்இ நடைமுறை பயன்படக் கூடும். இதை எப்படி அலுவலர்களுக்கு சிரமம் இல்லாமல் செயல்படுத்தலாம் என்பதற்கு ஆய்வு மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.
மேற்கூறிய நிகழ்வில் தணிக்கை முறை படுமோசமாகத் தவறி உள்ளது. வங்கிகளில் தற்போது மூலின்று அடுக்கு தணிக்கை முறை உள்ளது. வங்கியைச் சேர்ந்த தணிக்கையாளர்கள் (இன்டர்னல் ஆடிட்டர்கள்), வங்கி சாராத வெளித் தணிக்கையாளர்கள் (எக்ஸ்டர்னல் ஆடிட்டர்கள்) மற்றும் ரிசர்வ் வங்கியால் சட்டப்படி நியமிக்கப்படும் தணிக்கையாளர்கள் (ஸ்டாச்சூட்டரி ஆடிட்டர்கள்) ஆகியவர்கள் ஆண்டு முழுவதும் ஒருவர் மாற்றி ஒருவர் என வங்கி செயல்பாடுகளைத் தணிக்கை செய்து, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்வார்கள். இதுவும் பஞ்சாப் நேஷனல் விஷயத்தில் தோல்வி அடைந்துள்ளது.

தற்போது நடந்துள்ள பெரும் பண மோசடிகளுக்கு, மேற்கூறியவை போன்ற பல்வேறு காரணங்கள் இருந்துள்ளன என்பது தெளிவு. இந்தக் கடும் குறைகளைக் களைவதே நாம் மேற்கொள்ள வேண்டிய முதல் பணியாக இருத்தல் வேண்டும்.

மாறாக, வங்கிகளைத் தனியார்மயமாக்குதல்தான் தீர்வு என்றும், அதற்கான தருணம் வந்துவிட்டது என்றும் தனியார் தரப்பிலும் அரசு தரப்பிலும் கூறப்படுகிறது. விருப்பு, வெறுப்பின்றி யோசித்தால் அது கடிகாரத்தின் முள்ளைப் பின்னோக்கி நகர்த்துவதாகத்தான் அமையும் என்பது புலப்படும். அதனால் வங்கிகளின் பணியில் திறன் மேம்பாடும், தொழில்நுட்ப முன்னேற்றமும் வசப்படுமா என்பது கேள்விக்குறியே.
அரசுடைமை வங்கிகளில் விவசாயக் கடன் மற்றும் சிறுதொழில் கடனுக்கு ஒட்டுமொத்தக் கடன் அளிப்பில் 40 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதுவும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது தனியார் வங்கிகளில் சாத்தியமா? அரசுடைமை வங்கிகளில் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் குக்கிராமங்களிலும் கிளைகள் திறக்கப்படுகின்றன. தனியார் வங்கிகளில் அதுபோன்று கிராமக் கிளைகள் திறக்கப்படுமா? பிரதமரின் ஜன்தன் திட்டத்துக்கு ஏதுவாக தனியார் வங்கிக் கிளைகள் கிராமங்களில் செயல்படுமா?

கடந்த 11 ஆண்டுகளில், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் மற்றும் அருண் ஜேட்லி ஆகிய மூலின்று நிதிஅமைச்சர்கள், பொதுத்துறை வங்கிகளுக்கு மூலிலதனத் தேவையான ரூ.2.6 லட்சம் கோடியை செலுத்தியிருக்கிறார்கள். இது பட்ஜெட் மூலிலம் செலுத்தப்பட்ட தொகை என்பதால், வரிகள் வடிவத்தில் இறுதியாக இந்தச் சுமை மக்கள் தலையில்தான் விழும் என்பதையும் மறக்க முடியாது. எனவே, வங்கிகளில் ÷நேரும் மோசடிகளை எப்பாடுபட்டாவது ஒழிக்க வேண்டியதுதான் உடனடித் தேவை.

அதற்கேற்ப, பொதுமக்களுக்கோ, பொதுத்துறை வங்கிகளுக்கோ, வங்கி வாடிக்கையாளர்களுக்கோ, சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வங்கிகளில் நிதி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதே அவசியமும் அவசரமும் ஆகும்.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...