Friday, March 2, 2018


ஏர்செல் திவால் அறிவிப்பு: பி.எஸ்.என்.எல். மையங்களில் குவிந்த வாடிக்கையாளர்கள்
By DIN | Published on : 02nd March 2018 02:49 AM


ஏர்செல் நிறுவனத்தின் திவால் அறிவிப்பு காரணமாக, சென்னையில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவை மையங்களில் வியாழக்கிழமை வாடிக்கையாளர்கள் திரளானோர் குவிந்தனர்.
ஏர்செல் திவாலாகிவிட்டது என்று அறிவிக்குமாறு தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்தில் அந்த நிறுவனம் புதன்கிழமை தெரிவித்தது. இந்த அறிவிப்பால், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த நிறுவனத்தின் சேவையில் இருந்து மற்ற நிறுவனங்களின் சேவைக்கு மாற முடிவு செய்து, அதற்காக முயற்சியில் இறங்கினர்.

அதிலும், பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். சேவையை பெற வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சென்னையில் உள்ள 42 பி.எஸ்.என்.எல். சேவை மையங்களில் வியாழக்கிழமை காலை முதலே வாடிக்கையாளர்கள் குவிந்தனர். ஏர்செல் நிறுவனத்தில் இருந்து பெற்ற யுபிசி எண்ணுடன் வந்து, பி.எஸ்.என்.எல். சேவையைப் பெற்று சென்றனர். வியாழக்கிழமை அன்று மட்டும் மொத்தம் 4,000 பேர் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளராக இணைந்தனர். கடந்த 22-ஆம் தேதி முதல் மார்ச் 1-ஆம் தேதி மொத்தம் 12 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். புதிதாக ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் அதிகளவில் இணைந்துள்ளனர். போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர் கணிசமாக பதிவு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏர்செல் நிறுவனத்தின் இருந்து வந்து, சேவையை பெற்றுள்ளனர். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் கூறியது: சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல். மையங்களுக்கு வியாழக்கிழமை அன்று 6 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு துரித சேவை அளிக்க கூடுதல் பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர். தொடர்ந்து, புதிய சேவையில் இணைய தேவையான உதவி அளிக்கப்படுகிறது என்றனர் அவர்கள்.
வாடிக்கையாளர்கள் தவிப்பு:

ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் சேவையை மாற்ற தொடங்கினர். ஆரம்பத்தில் 'போர்ட்' என்று டைப் செய்து, இடைவேளை விட்டு பயன்படுத்தும் ஏர்செல் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு '1900' என்ற எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதிலிருந்து யுபிசி எண் கிடைக்கும். அதை வைத்து, சேவை மையத்தை அணுகி, பி.எஸ்.என்.எல். சேவையை பெற்று வந்தனர். அதன்பிறகு, ஐவிஆர்எஸ் முறையில் உள்ளூர் வாடிக்கையாளர்கள் 9841012345 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும், வெளியூர் வாடிக்கையாளர்கள் 9842012345 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் யுபிசி எண் பெற்று பி.எஸ்.என்.எல். சேவையை பெற்றனர்.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஏர்செல்லின் யுபிசி எண் பெற முடியாமல் வாடிக்கையாளர்கள் தவித்தனர். ஐ.வி.ஆர்.எஸ் முறையில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்ட போது, அவர்களுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. ஒரே நேரத்தில் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிற்பகலுக்கு பின்பு, இந்தப் பிரச்னை சரியானது. அதன்பிறகு, ஐ.வி.ஆர்.எஸ். முறையில் யுபிசி எண்ணை பெற்று, தங்களுக்கு விருப்பமான தொலைத் தொடர்பு நிறுவன சேவையில் இணைந்தனர்.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...