Wednesday, March 7, 2018

'அவுட்சோர்சிங்' முறையில் பணி: பல்கலை நிதி கோடி கணக்கில் விரயம்

Added : மார் 07, 2018 02:23

சேலம்: பெரியார் பல்கலையில், 'அவுட்சோர்சிங்' முறையில், தனியாரிடம் தேர்வுப்பணி ஒப்படைக்கப்படுகிறது. இதில், பார்கோடு ஒதுக்கும் பணிக்கு, மூன்று ஆண்டுகளில், பல கோடி ரூபாய் வரை வீணடிக்கப்பட்டுள்ளது.
சேலம், பெரியார் பல்கலையில், 101 இணைவு பெற்ற கல்லுாரிகளில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்தேர்வுக்கும், 10 லட்சம் விடைத்தாள்கள் அச்சிடப்படுகின்றன. 2014 முதல், விடைத்தாள்களில் பார்கோடு அச்சிடும் முறையை, பல்கலை அமல்படுத்தியது. இப்பணியை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் விபரங்களை, பல்கலை சேகரித்து, தனியார் நிறுவனத்திடம் வழங்கும். அவர்கள், ஒவ்வொருவருக்கும் பார்கோடு கொண்ட முகப்பு பக்கத்தை உருவாக்கி தருவர். அவற்றை, பல்கலை அச்சிட்டு, விடைத்தாளில் இணைத்துக் கொள்ளும். அதை மதிப்பீடு செய்த பின், ஒவ்வொன்றின் மதிப்பெண்ணையும் பதிவு செய்து, அந்நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். அவர்கள், தேர்வு முடிவை, 'சிடி'யில் பதிவு செய்து வழங்குவர். இப்பணிக்கு, பல்கலையில் இருந்து, ஒவ்வொரு பருவத்தேர்வுக்கும், 45 முதல், 90 லட்சம் ரூபாய் வரை, தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலையில், ஏராளமான உபரி பணியாளர்கள் இருக்கும் நிலையில், தேர்வுப்பணிகளை அவுட்சோர்சிங் முறையில் கொடுத்தது, அதற்காக, பல கோடி ரூபாய் செலவிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: பார்கோடு உருவாக்குவதற்கான மென்பொருள் வாங்கி, பல்கலையில் இப்பணியை செய்து முடித்திருக்கலாம். இதனால், பல கோடி ரூபாய் மீதமாகியிருக்கும். மூன்றாண்டுகளாக, ஒரே தனியார் நிறுவனமே, இதை மேற்கொள்கிறது. இதனால், நிதி வீணாவதுடன், மாணவர்களின் விபரங்கள், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
துணைவேந்தர் குழந்தைவேல் கூறுகையில், ''நான் பதவியேற்ற போதே, பருவத்தேர்வு பணிகள் துவங்கி விட்டன. இதனால், அதில் மாற்றம் செய்ய முடியவில்லை. அடுத்த தேர்வில் இருந்து, பெரியார் பல்கலையிலேயே, தேர்வு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...