Thursday, March 15, 2018

‘ரங்கம்மா பாட்டி’ வாய்ப்புக் கிடைக்கவில்லை எனத் தற்கொலைக்கு முயலும் நடிகர், நடிகைகளுக்குச் சிறந்த பாடம்!

By சரோஜினி | Published on : 14th March 2018 01:30 PM


வடிவேலுவின் டிரேட் மார்க் காமெடிகளில் ‘ந்தா அந்த நாயக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ’ என்று மாவாட்டிக் கொண்டே சொல்லும் பாட்டியை நினைவிருக்கிறதா?

அவரை நீங்கள் பல திரைப்படங்களில் கண்டிருக்கலாம், ஆனால் எத்தனை பேருக்கு அவரது பெயர் தெரிந்திருக்கக் கூடுமெனத் தெரியவில்லை. இப்படித்தான் சில ஜீவன்களைப் பல திரைப்படங்களில் நாம் காண நேர்ந்திருந்த போதும் அவர்களைப் பற்றிய அடையாளமெதுவும் நமக்கு நினைவிருப்பதே இல்லை. இப்படித் தமிழ் சினிமாவில் பெயரற்றுப் போய் வெறும் காட்சிப் பதிவாக நமது நினைவில் நிற்பவர்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரே இந்த ரங்கம்மா பாட்டி.

ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா 3, சரத் குமாருடன் ஏய், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என மூத்த ஸ்டார் நடிகர்களுடன் எல்லாம் சில படங்களில் நடித்திருந்த போதும் இந்தப் பாட்டியை நாம் நிறைவாக அடையாளம் கண்டு கொண்டது வடிவேலு காமெடிக் காட்சிகளில் தான் அதிகம் எனலாம். ரஜினி, கமல் மட்டுமல்ல எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதாவுடன் கூட இந்தப் பாட்டி நடித்திருக்கிறாராம்.

தற்போது 86 வயதாகும் இந்த ரங்கம்மா பாட்டிக்கு நடிப்பு தான் உயிர்மூச்சு. ஆனால் நடிப்பை மட்டுமே நம்பியிருந்திருந்தால், சமயங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்காத நேரங்களில் எல்லாம் தனது 12 பிள்ளைகளை எப்படி வளர்த்திருக்க முடியும்?! எனவே கையோடு ஒரு பையை வைத்துக் கொண்டு சோப்பு, சீப்பு, கவரிங் நகைகள், மினி பேட்டரி, என்று சிறு, சிறு பொருட்களையும் தேவைப்படுவோருக்கு விற்பனை செய்து வருகிறார். இது ஆரம்பம் முதலே இவருக்கிருந்த வழக்கமாம். நடிப்பதற்காக படப்பிடிப்புக்குச் செல்வதாக இருந்தாலும் இந்தப் பை பாட்டியோடு தான் இருக்கும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் தனது மினி ஸ்டோரைக் கடைபரப்பி தேவைப்படுவோருக்கு விற்பனை செய்வது இவரது வாடிக்கை. படப்பிடிப்புத் தளங்களில் மட்டுமல்ல, மெரினா பீச்சிலும் இந்தப் பாட்டி வியாபாரம் செய்து வருகிறார். வாடிக்கையாளர்கள் எவரேனும் இவரை அடையாளம் கண்டுகொண்டு விசாரிப்பது சர்வசாதாரணம். அப்படி ஒருமுறை பாட்டி பீச்சில் இப்படி துண்டு, துக்கடா பொருட்களை விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டவர்களில் எவரோ ஒருவர்;

வடிவேலுவுடன் காமெடிக் காட்சிகளில் இணைந்து நடித்த பாட்டியை குடும்பத்தினர் கைவிட்டுவிட்டதால், பாட்டி மெரீனாவில் பிச்சையெடுத்து வருகிறார் என சமூக ஊடகங்களில் கொளுத்திப் போட அதில் பாட்டிக்கு ரொம்பவே மன வருத்தம்.

இந்த 86 வயதிலும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்று மன உறுதியோடு நான் எனது நடிப்போடு சேர்த்து இந்த வேலையையும் கைவிடாமல் இருந்தால், இப்படியா புரிந்து கொள்ளாமல் வதந்தி பரப்புவது?! என்று வருந்துகிறார். எம்ஜிஅர் திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கையில் அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு ரங்கம்மாவுக்கு கிடைத்ததால் எம்ஜிஆரும், ஜானகியும் இவருக்குப் பொருளுதவு செய்ததுண்டாம். ரஜினியுடன் நடிக்கையில் அவரும், சரத்குமாருடன் நடிக்கையில் அவரும் கூட சிறிதளவு பொருளுதவி செய்திருக்கிறார்கள் என்று கூறும் ரங்கம்மா பாட்டி, தான் யாரிடமும் இதுவரை எனக்கு உதவி செய்யுங்கள் என்று போய் நின்றதில்லை என்கிறார். அவர்களாக என்னை அழைத்து; என் வயதை உத்தேசித்து ஏதாவது உதவி செய்திருக்கிறார்கள். அவ்வளவு தான். நான் எம்ஜிஆரிடம் வளர்ந்த பெண் என்பதால், அவரது ‘உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே’ எனும் கொள்கையில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்கிறார்.

தொடர்ந்து இப்போதும் திரைப்படங்களில் நடித்து வரும் ரங்கம்மா பாட்டிக்கு, திரைப்படங்களில் தனக்கு எந்த விதமான காட்சிகள் கிடைத்தாலும் சரி. தான் நடித்துக் கொண்டே இருந்தால் போதும் என்ற மனநிலை தான் எப்போதும் வாய்த்திருக்கிறதாம். வசனமே இல்லாமல் சும்மா தெருவைக் கடக்கும் ரோல் என்றாலும் கூட தனக்கு ஆட்சேபணையோ, மனவருத்தமோ இருந்ததில்லை என்கிறார். இந்தப் பாட்டியைப் பார்க்கையில், தற்போது தொடர்ந்து திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் சரிவரக் கிடைக்காத காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் இளம்தலைமுறை நடிகர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

நடிப்பு மட்டுமே தொழில் இல்லை. நடிக்க வாய்ப்புக் கிடைக்காத நேரங்களில் நமது செலவுகளைச் சமாளிக்க வேறு ஏதேனும் தொழிலைக் கற்றுக் கொள்வதை விட்டுவிட்டு மன உளைச்சலால் உயிரையே மாய்த்துக் கொள்வதைக் காட்டிலும் இந்தப் பாட்டி போல பீச்சில் பொருட்கள் விற்பது எந்தவிதத்திலும் தரக்குறைவு அல்ல!

வாய்ப்புக் கிடைக்கவில்லை எனத் தற்கொலை செய்வதானால் தமிழ்த்திரையுலகில் முதலில் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டியவர் நடிகை சச்சு தான் என்று சிவகுமார் தனது சுயசரிதையான ‘ராஜ பாட்டையில்’ குறிப்பிட்டிருப்பார். அதாவது ஆரம்ப காலப் படங்களில் நடிகை ‘சச்சு’ அறிமுகமானது கதாநாயகியாகத்தான். ரோஜா மலரே, ராஜகுமாரி, செந்தமிழ்த் தேன்மொழியாள் உள்ளிட்ட பாடல்களை மறக்க முடியுமா? ஆனால்... என்ன செய்ய? காலம் மாறியதில் சச்சு காமெடி நடிகையாகி விட்டார். அதற்காக அவர் மனமொடிந்து போகவில்லை. தனது திரைவாழ்வில் கிட்டத்தட்ட எதிர்நீச்சலிட்டு காமெடியிலும் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக் கொண்டார். சினிமா வாழ்வைப் பொறுத்தவரை கதாநாயகிகளை விட காமெடி நாயகிகளுக்கு திரைவாழ்வில் ஆயுள் அதிகம். இதோ, சச்சுவுடன் நடித்தவர்கள் எல்லாம் காலாவதியாகி விட அவர் இப்போதும் பிஸியாக நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு வெட்டியாக இல்லாமல், செய்வதற்கு வேலை இருந்தால் போதும். அந்த வேலையில் தங்களுக்கான கெளரவத்தை மிகத் திறமையாகத் தேடிக் கொண்டு மிளிர்கிறார்கள்.

தங்களுக்கு நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என இவர்கள் எப்போதும் தற்கொலை செய்து கொள்ள நினைக்கவேயில்லை என்பதை இன்றைய தலைமுறையின் இளம் நடிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தாங்கள் விரும்பிய வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பையே தங்களுக்கான வெற்றி வாய்ப்புகளாக இவர்கள் மாற்றிக் கொண்டார்கள் என்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது!

No comments:

Post a Comment

Union minister lands at wrong lounge at airport, probe ordered

Union minister lands at wrong lounge at airport, probe ordered Oppili.P@timesofindia.com 31.10.2024 Chennai : An inquiry has been ordered af...