Thursday, March 15, 2018

பரபரப்பான அரசியல் சூழலில் பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது; தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்- புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

Published : 15 Mar 2018 07:35 IST

சென்னை



பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை (நிதி நிலை அறிக்கை) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம் பேரவையில் தாக்கல் செய்கிறார். இதில் புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதே நேரத்தில் காவிரி விவகாரம், சட்டம் - ஒழுங்கு, குரங்கணி தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பேரவையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அரசின் திட்டச் செயல்பாடு களுக்கு நிதி ஒதுக்கவும் புதிய திட்டங்களுக்காகவும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஆண்டுதோறும் மார்ச் மாதத்துக் குள் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன்படி, 2018-19 நிதியாண்டுக்கான பட் ஜெட் தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 10.30 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். துணை முதல்வரான பின் அவர் தாக்கல் செய்யும் முதல் பட் ஜெட் இதுவாகும். அதேநேரம், முதல்வர் கே.பழனிசாமி அரசின் 2-வது பட்ஜெட் இது.

அலுவல் ஆய்வுக் குழு

பட்ஜெட் தாக்கலுக்குப்பின், பேரவைத்தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர். பேரவையை எத்தனை நாட் கள் நடத்துவது, பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும். மார்ச் 21-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர, காவிரி மேலாண் மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க பிரதமரை வலியுறுத்துவது தொடர் பான அரசின் சிறப்புத் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக சிறப்பு அமர் வை நடத்துவது குறித்தும் அலு வல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும். பட்ஜெட்டைத் தொடர்ந்து துறைவாரியான மானி யக் கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதா அல்லது அதை பின்னர் தனியாக நடத்துவதா என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக் குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.

சட்ட மசோதாக்கள்

ஐடி பெண் ஊழியர் லாவண்யா மீதான தாக்குதல், கல்லூரி மாணவி அஸ்வினி கொலை சம்பவங்களைத் தொடர்ந்து பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனவே, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான சட்டத் திருத்தம், வனப்பகுதிகளில் மலையேற்றம் மேற்கொள்வோருக்கான புதிய விதிமுறைகள் தொடர்பான சட்ட மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட லாம் என்று பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஆண் டின் மொத்த செலவில், 45 சதவீதம் செலவிடப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின் தமிழகத்துக்கான வரி வருவாய் குறைந்துள்ளது. பதி வுத் துறை, டாஸ்மாக் வருமானமும் குறைந்துள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கான ஊதி யம் உயர்ந்தால், நிதிச்சுமையும் அதிகரித்துள்ளது.

எனவே, இந்த ஆண்டும் நிதிப் பற்றாக்குறையும் கடனும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவற்றை சமாளிக்கும் விதத்தில் பட்ஜெட் டில் புதிய வரிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் உள்ளாட்சித் தேர்தலும் நடக்க உள்ளதால் அதை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சிகள் திட்டம்

அதே நேரத்தில் காவிரி விவகாரம், குரங்கணி தீ விபத்து, சட்டம்- ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை பேரவையில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக, காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளை எப்படி சமாளிப் பது என்பது குறித்து ஆளும் கட்சியும் ஆலோசித்து வருகிறது. அதிமுகவும் திமுகவும் இன்று மாலை தங்கள் கட்சி எம்எல்ஏ-க் கள் கூட்டத்தை கூட்டியுள்ளன. இதில், பேரவையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கப்பட உள்ளது.

தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கிலும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு வை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. இதுபோன்ற பரபரப்பான சூழலில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024