Tuesday, September 18, 2018


தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்க வேண்டும்: ராஜிவுடன் தன் மனைவியை பறிகொடுத்தவர் கண்ணீர்

Added : செப் 17, 2018 23:42




''ராஜிவ் கொலையாளி களுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை நிறைவேற்றி இருந்தால், இந்த நிலை ஏற்பட்டு இருக்காது,'' என, தன் மனைவியான பெண் போலீசை பறிகொடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடன் வாழும், மணி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாருக்கு, தேர்தல் பிரசாரத்திற்காக வந்த, முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991 மே, 21ல், விடுதலை புலிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன், 14 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர், காஞ்சிபுரம் தாலுகா போலீசில், முதல் நிலை காவலராக பணியாற்றிய சந்திரா.

சந்திராவின் கணவர் மணி கூறியதாவது: நான் சிவில் சப்ளை துறையில், இளநிலை உதவியாளராக பணியாற்றினேன். மனைவிக்கு காஞ்சிபுரத்தில் வேலை என்பதால், அங்கேயே வாடகை வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, ஹேமாவதி என, என் மனைவி பெயர் சூட்டி மகிழ்ந்தார். குழந்தை வளர்ப்பிலும், என் மீதும், அளவு கடந்த அன்பு செலுத்தினார்.

'தேர்தல் பிரசாரத்திற்காக, முன்னாள் பிரதமர் ராஜிவ், ஸ்ரீபெரும்புதுார் வருகிறார். எனக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டுள்ளது' என்று, சந்திரா கூறினார். 'போகத்தான் வேண்டுமா' என, நான் கேட்டேன். 'உயர் அதிகாரிகள் உத்தரவு; மறுக்க முடியாது' என்றார். அப்போது தான், அவரை நான் கடைசியாக பார்த்தேன். அதன்பின், தற்கொலை படை தாக்குதலில் பலியான ராஜிவுடன், உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் தான், என் மனைவியை பார்க்க முடிந்தது. அந்த நாளை நினைத்து பார்க்கவே, நெஞ்சு பதறுகிறது. சந்திரா இறக்கும் போது, மகள் ஹேமாவதிக்கு இரண்டரை வயது. குழந்தையை வளர்க்க வேண்டுமே என, வேலையை உதறினேன்.

விபரம் தெரிய வந்ததும், 'அம்மா எங்கேப்பா?' என, ஹேமாவதியும் கேட்க துவங்கினார். அவருக்கு, கண்ணீரையே பதிலாக தர முடிந்தது. நாட்கள் உருண்டோடின.ஹேமாவதியை, வாலாஜாவில் உள்ள, மகளிர் கல்லுாரியில், பி.எஸ்சி., நிலவியல் படிக்க வைத்தேன். ஆனால், அம்மா இல்லாத ஏக்கத்தால், என் மகளுக்கு மனநலம் பாதித்து விட்டது. தற்போது, 29 வயதாகிறது; திருமணம் ஆகவில்லை. மனைவியை பறிகொடுத்ததால், காவல் துறையில், கருணை அடிப்படையில், அமைச்சு பணியாளராக வேலை கிடைத்து, ஓய்வு பெற்று விட்டேன். ஆனால், மகள் படுத்த படுக்கையாக இருப்பது வேதனை அளிக்கிறது. அவளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க, போதிய வசதிகள் இல்லை.

ராஜிவ், ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர். அவரை கொன்றது மன்னிக்க முடியாத குற்றம். ராஜிவ் கொலையாளிகளுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதே, அதை, நிறைவேற்றி இருந்தால், தற்போது, விடுதலை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. பருவ நிலை மாற்றம் என்பது போல, அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, துாக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 'கொலையாளிகளை மன்னித்து விடலாம்' என, ராஜிவ் குடும்பத்தார் தெரிவித்த கருத்துகளை, 'அவர்களே கூறிவிட்டனர்' என, காரணம் தெரிவித்து, கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என, சில அரசியல் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

குற்றத்தின் தன்மையை பார்க்க வேண்டுமே தவிர, தண்டனை பெற்ற நாட்களை அல்ல. ராஜிவ் கொலையாளிகளுக்காக குரல் கொடுப்போர், அவருடன் பலியான, 14 பேரின் குடும்பத்தாரை என்றைக்காவது சந்தித்து இருப்பார்களா; நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்தால், அது ராஜிவ் மற்றும் அவருடன் பலியான, 14 பேருக்கு செய்யும் அவமரியாதை. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...