Monday, November 19, 2018


சென்னை ஹோட்டல்களுக்கு கொண்டு வரப்பட்ட நாய் இறைச்சி? எழும்பூர் ரயில் நிலையத்தில் 2,000 கிலோ பறிமுதல்

Published : 17 Nov 2018 17:36 IST




கைப்பற்றப்பட்ட இறைச்சியை சோதிக்கும் அதிகாரிகள்

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சென்னை ஹோட்டல்களுக்கு கொண்டு வரப்பட்ட நான்கு நாட்கள் ஆன இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை நாய் இறைச்சியைப் போல உள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையில் லட்சக்கணக்கான வெளிமாநில, வெளிமாவட்ட இளைஞர்கள் தங்கி வேலை பார்க்கின்றனர், படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹோட்டலில்தான் சாப்பிடுகின்றனர். மேலும், ஹோட்டல்களில் சாப்பிடும் மோகம் சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வருகிறது.

அதிலும் அசைவப் பிரியர்கள் அதிக எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர். விரைவு உணவு, ரெஸ்டாரன்டுகள், மல்டி குசின்கள், பஃபே உணவகங்கள், பிரியாணி சென்டர்கள் என பல பேர்களில் பல வடிவங்களில் அசைவ உணவுகள், பிரியாணிகள் சென்னையில் விற்கப்படுகிறது.

சாதாரண மக்கள் சாலையோர உணவகங்களுக்கும், ஓரளவு பொருளாதாரம் உள்ளவர்கள் அதற்கென உள்ள ஹோட்டல்களுக்கும் செல்கின்றனர். இவர்களுக்கு தரமான உணவு கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே?

சாதாரண வருமானம் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை நம்பி இயங்கும் உணவகங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவுவது வடமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் பதப்படுத்தப்படாத, கெட்டுப்போன, கன்றுக்குட்டி, நாய் உள்ளிட்ட செத்துப்போன விலங்குகளின் இறைச்சியே.

சென்னைக்கு ரயில் மூலம், கண்டெய்னர் மூலம் வரும் இறைச்சி எப்போதாவது கைப்பற்றப்பட்டு அழிக்கப்படுகிறது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. இதனால் இந்தச் செயல் மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் இதேபோன்றதொரு சோதனையில் 2000 கிலோ நாள்பட்ட இறைச்சியை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சென்னைக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து எழும்பூர் வந்து இங்கிருந்து மன்னார்குடி செல்லும் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் இன்று காலை 10.45 மணிக்கு 5-வது நடைமேடைக்கு வந்தது. அப்போது அங்கு சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்ய அனுப்பப்பட்டிருந்த 20 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர்.

உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி எந்த ஒரு பொருளையும் நேரடியாக குளிர்வித்து பயன்படுத்தவோ, எடுத்துச் செல்லவோ கூடாது. ஆனால் 20 பெட்டிகளிலும் நாட்பட்ட இறைச்சிகளில் ஐஸ் கட்டிகளைப் போட்டு தெர்மோகோல் பெட்டிகளில் அடைத்து அனுப்பப்பட்டிருந்தது.

ஜோத்பூரிலிருந்து கடந்த 14-ம் தேதி அனுப்பப்பட்ட இறைச்சி 3 நாட்களாக பயணித்து 4-ம் நாள் சென்னைக்கு வந்துள்ளது. இவை பயன்படுத்த உகந்ததல்ல என்பதும், மோசமாகப் பராமரிக்கப்பட்டதால் கெட்டுப்போயிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்தனர். அவை ஒவ்வொரு பெட்டியிலும் தோல் உரிக்கப்பட்ட, இரண்டு மூன்று துண்டுகளாக வெட்டப்பட்ட நாய் இறைச்சி போன்று இருந்தது. உடனடியாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.


இறைச்சியைச் சோதிக்க கால்நடைத்துறை மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டனர். முதற்கட்ட சோதனையில் அவை ஆட்டின் இறைச்சி போல் இல்லை எனத் தெரியவந்தது. ஆட்டின் தொடைகள் அகலம், நாய்களின் தொடைகளின் அகலமும் வேறுபடும். அதேபோன்று ஆட்டுக்கு வால் சிறியதாக இருக்கும். ஆனால் கைப்பற்றப்பட்ட அனைத்து இறைச்சியிலும் வால் ஒரு அடி நீளத்துக்கும் மேல் உள்ளது. ஆகவே இவை நாய்களின் இறைச்சியாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

அடுத்தகட்ட சோதனைக்காக இறைச்சியின் மாதிரியை கால்நடை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். பின்னர் 2 ஆயிரம் கிலோ இறைச்சியைக் கைப்பற்றிய மாந்கராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவற்றை கொடுங்கையூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு சென்று பினாயில் ஊற்றி பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டிப் புதைத்தனர்.

இறைச்சியை சென்னைக்கு யார் அனுப்பியது, யாருக்கு அனுப்பபட்டது என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. ஜோத்பூரில் யார் இறைச்சியை அனுப்பியது என்பது குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இதுபோன்று கொண்டுவரப்படும் கெட்டுப்போன இறைச்சியைக் கட்டுப்படுத்தி உரிய சட்டம் மூலம் இவை தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024