Monday, November 19, 2018

மாவட்ட செய்திகள்

ஊதிய உயர்வு கோரி அரசு டாக்டர்கள் 22-ந்தேதி தர்ணா போராட்டம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பேட்டி



ஊதிய உயர்வு கோரி அரசு டாக்டர்கள் வருகிற 22-ந்தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பதிவு: நவம்பர் 19, 2018 03:45 AM
சேலம்,

ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். மாநில செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கேசவன், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராஜசேகர் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 26 வகையான அலவன்ஸ் வழங்க வேண்டும், என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபடுவது என்ற தீர்மானமும் நிறைவேறியது.

இதில் மாவட்ட துணை தலைவர் சுரேஷ்பாபு, துணை செயலாளர் கீர்த்திவாசன் மற்றும் பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் 3 மாதமாக சம்பள உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனாலும் எந்தவிதமான சம்பள உயர்வும் கொடுக்கப்படவில்லை. பிற மாநிலங்களில் டாக்டர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு போல் வழங்க கோரி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

அதன்படி வருகிற 22-ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடைபெறும். 26-ந்தேதி சென்னையில் ஆயிரம் டாக்டர்களுடன் போராட்டம் நடைபெறும். இன்று (திங்கட்கிழமை) முதல் கோரிக்கைகள் குறித்து டாக்டர்களிடம் கையெழுத்து பெற்று 29-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனுவாக கொடுக்க உள்ளோம். மேலும் அன்று அவசரமில்லா அறுவை சிகிச்சை தவிர்த்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். டாக்டர்களின் மாத சம்பளத்தில் ரூ.500 பிடித்தம் செய்து இளம்வயதில் இறக்கும் டாக்டர்களுக்கு ரூ.1½ கோடி வழங்க வேண்டும். மேலும் நேற்று எங்களுடைய கோரிக் கை குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்தோம். இந்த மனுவை பரிசீலனை செய்வதாக முதல்-அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024