Friday, November 16, 2018


45 ஆண்டு கால 'பென்ஷனை வட்டியுடன் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Added : நவ 16, 2018 04:55


சென்னை: விடுதலை போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் ' தொகையை, 45ஆண்டுகளுக்கு கணக்கிட்டு, தியாகியின் மனைவிக்கு வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 ஆண்டுகளாக விண்ணப்பத்தை பரிசீலிக்காத மத்திய அரசுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகையும், உயர் நீதிமன்றம் விதித்தது.உடனடியாக, வழக்கை பைசல் செய்யாததற்காக, உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர், லட்சுமண தேவர்; நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் படையினரால் பிடிக்கப்பட்டு, மலேஷியாவில், 1945 ஆகஸ்ட் முதல், 1946 பிப்ரவரி வரை, ஆறு மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் கேட்டு, மத்திய - மாநில அரசிடம் விண்ணப்பித்துள்ளார்.
மனுக்கள் பரிசீலிக்கப்படுவதற்கு முன், 1969 ஏப்ரலில், லட்சுமண தேவர் காலமானார்.பின், தமிழக அரசின் பென்ஷன் கேட்டு, லட்சுமண தேவரின் மனைவி, காத்தாயி அம்மாள் விண்ணப்பித்தார். 1970ல், மாநில அரசு, பென்ஷனுக்கு ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, 1973ல், மத்திய அரசின் பென்ஷன் கேட்டு, காத்தாயி அம்மாள் விண்ணப்பித்தார். தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பித்தும், விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை.1998, 2,000, 2002௨ம் ஆண்டில், மத்திய அரசுக்கு, மனுக்கள் அனுப்பினார்.

மலேஷிய சிறையில், லட்சுமண தேவர் இருந்ததற்கு ஆதாரமாக, ஆவணங்கள் சமர்ப்பிக்க வில்லை எனக் கூறி, விண்ணப்பத்தை, 2003ல், மத்திய அரசு நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், காத்தாயி அம்மாள் மனு தாக்கல் செய்தார்.மனுவை, நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். 

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், ஆர்.என்.கோதண்டராமன் ஆஜரானார்.நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:மலேஷிய சிறையில் ஆறு மாதங்கள் இருந்ததற்கு, லட்சுமண தேவருடன் இருந்த, சக சிறைவாசிகள் இருவர், சான்றிதழ் அளித்துள்ளனர். சான்றிதழ் அளித்த இருவருக்கும், ௧௯௭௭ல், மத்திய அரசு பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, அதே காலகட்டத்தில் சிறையில் இருந்த, லட்சுமண தேவருக்கு, பென்ஷன்நிராகரிக்கப் பட்டு உள்ளது.

நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் விதத்தில், மத்திய - மாநில அரசுகள், பென்ஷன் திட்டங்களை அமல்படுத்தியது.இதை, ஒரு நன்கொடையாக கருத முடியாது. மாநில அரசு பென்ஷன் வழங்குகிறது என்பதற்காக, மத்திய அரசும், அதை பின்பற்ற தேவையில்லை என்கிற, காரணம் கூறப்பட்டது.இத்தகைய காரணம், நியாயமற்றது. 

ஏனென்றால், சுதந்திர போராட்ட வீரர்கள், ஒவ்வொருவருக்காகவும் தான் பாடுபட்டுள்ளனர். அது, மத்திய அரசாக இருந்தாலும் சரி; மாநில அரசாக இருந்தாலும் சரி. அவர்களின் சேவையை, மத்திய - மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும்.பென்ஷன் கோரிய விண்ணப்பம், 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்துள்ளது. கால தாமதமாக பரிசீலனை செய்ததற்கு, காரணங்கள் கூறப்படவில்லை.இதற்கு காரணமான அதிகாரிகளுக்கு, இந்த நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது. 

மனுதாரரின் விண்ணப்பத்தை, 1983ல், முடிவு செய்திருந்தால், பென்ஷன் பலனைமுழுமையாக அனுபவித்திருப்பார்.அரசின் கொள்கைகளை, நிர்வாகத்தில் இருப்போர் அமல்படுத்தினால் தான், மக்களுக்கு பலன் போய் சேரும். 30 ஆண்டுகளாக விண்ணப்பத்தை நிலுவையில் வைத்ததற்காக, சம்பந்தப்பட்டோர் மீது, இந்த நீதிமன்றம் அதிருப்தி தெரிவிக்கிறது.
இந்த வழக்கு, 2003ல் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை உடனடியாக, பைசல் செய்ய முடியாத தற்காகவும், தாமதம் ஏற்பட்டதற்காகவும், இந்த நீதிமன்றம் வருத்தம் தெரிவிக்கிறது. பென்ஷன் நிராகரித்த, மத்திய அரசின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.விண்ணப்பித்த தேதியான,1983 செப்டம்பரில் இருந்து, பென்ஷன் தொகையை கணக்கிட்டு, மத்திய அரசு வழங்க வேண்டும். ஆண்டுக்கு, 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும்.மத்திய அரசுக்கு,10ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. பென்ஷன் பாக்கி உடன், இதையும் சேர்த்து, மனுதாரருக்கு, இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024