Tuesday, November 6, 2018

மாவட்ட செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் திடீர் ஆய்வு






சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பதிவு: நவம்பர் 06, 2018 04:15 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அவர் சேலம் மாவட்டத்தில் இதுவரை டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்கள் குறித்தும், காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் ரோகிணி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், சிறப்பு வார்டில் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து டாக்டர்களிடம் தாரேஸ் அகமது கேட்டறிந்தார்.

இதன்பிறகு தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுவரை 180 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரைகள் தேவையான அளவில் இருப்பு வைப்பதற்கு அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி காய்ச்சல் அறிகுறி வந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தாரேஸ் அகமது கூறினார்.

முன்னதாக டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், கண்காணிப்பாளர் தனபால், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மாநகர நகர்நல அலுவலர் பார்த்திபன் மற்றும் டாக்டர்களுடன் தேசிய சுகாதார குழுமத்தின் இயக்குனர் தாரேஸ் அகமது ஆலோசனை நடத்தினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024