Tuesday, November 6, 2018

மாவட்ட செய்திகள்

கூடுவாஞ்சேரி சினிமா தியேட்டரில் ‘சர்கார்’ படத்துக்கு டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி





கூடுவாஞ்சேரியில் சினிமா தியேட்டரில் ‘சர்கார்’ படத்துக்கு டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

பதிவு: நவம்பர் 06, 2018 04:00 AM

காஞ்சீபுரம்


கூடுவாஞ்சேரியில் சினிமா தியேட்டரில் ‘சர்கார்’ படத்துக்கு டிக்கெட் வாங்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.


நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் இன்று(செவ்வாய்க்கிழமை) தீபாவளிக்கு தமிழக முழுவதும் வெளியாகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள வெங்கடேஸ்வரா தியோட்டரிலும் ‘சர்கார்’ படம் வெளியிடப்படுகிறது.

  இன்று திரையிடப்படும் அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் நேற்று காலை 10 மணிக்கு வழங்கப்படும் தியேட்டர் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நேற்று காலை 9 மணி முதலே வெங்கடேஸ்வரா தியேட்டரில் டிக்கெட் வாங்குவதற்காக விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

ரசிகர்களின் கூட்டத்தை தியேட்டர் ஊழியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் காலை 10 மணிக்கு டிக்கெட் வழங்குவதாக இருந்த டிக்கெட்டுகளை 9.30 மணிக்கே தியேட்டர் ஊழியர்கள் வழங்க தொடங்கினர். ஆனால் ரசிகர்கள் ஒழுங்காக வரிசையில் நின்று டிக்கெட் வாங்கவில்லை. ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்க முயன்றனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒரே நேரத்தில் பல பேர் டிக்கெட் கவுண்ட்டருக்குள் கையை விட்டு டிக்கெட் வாங்க முயன்றனர். டிக்கெட் வழங்க முடியாமல் ஊழியர்கள் திணறினர்.

ஒரு சில ரசிகர்கள் தங்களுக்கு 5 டிக்கெட் வழங்கவேண்டும். நாங்கள் உள்ளூர்க்காரர்கள் என்று டிக்கெட் வழங்கும் ஊழியரிடம் தகராறு செய்தனர். அப்போது சில ரசிகர்கள், டிக்கெட் கவுண்ட்டரின் கண்ணாடியை திடீரென உடைத்தனர். இதனால் தியேட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் பயந்து போன தியேட்டர் ஊழியர்கள், உடனே கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திலீப்குமார், டிக்கெட் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தார்.

ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து கலாட்டா செய்துக்கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சப்–இன்ஸ்பெக்டர் திலீப்குமார் திடீரென தனது கையில் வைத்திருந்த லத்தியால் விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தார். தடியடிக்கு பயந்து ரசிகர்கள், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். ஒரு சில ரசிகர்கள், தியேட்டர் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடினார்கள்.

இதையடுத்து டிக்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டு, கவுண்ட்டரும் மூடப்பட்டது. இதனால் விஜய் படத்தை முதல் நாளில் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் வந்த பொதுமக்கள் சிலர் டிக்கெட் வாங்க முடியாமல் நீண்ட நேரமாக தியேட்டார் வாசலில் காத்திருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024