Tuesday, November 6, 2018

தலையங்கம்

முட்டையின் விலை ரூ.15 ஆகிவிடுமா?





சமீபத்தில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 06 2018, 03:30

எந்தவொரு புதிய கோழிப்பண்ணை தொடங்கப்பட்டாலும் கூண்டுகளை உபயோகிக்காமல் இருப்பதை மத்திய அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோழிப்பண்ணைகளில் முட்டை கோழிகளை கூண்டுகளில் அடைத்து வளர்க்க தடைசெய்யப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது கோழிப்பண்ணை தொடங்கி, அதன்மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஏராளமான வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் இன்றுகூட வீட்டின் முட்டை தேவைக்காக கோழிவளர்ப்பவர்கள் வீடுகளில் கோழிக்கூண்டு வைத்திருப்பார்கள். அந்தக்கூண்டிலிருந்து காலையில் கோழிகளை வெளியே திறந்துவிட்டால், அருகிலுள்ள இடங்களில் மேய்ந்தபிறகு மாலையில் அதுவே கூண்டுக்கு வந்துவிடும். இல்லையென்றால், வீட்டில் உள்ளவர்களே கோழிகளை விரட்டி கூண்டுக்குள் அடைத்துவிடுவார்கள்.

வீடுகளில் மட்டுமே வளர்க்கப்பட்டு வந்த கோழிவளர்ப்பு, வியாபார ரீதியில் பண்ணை முறையில் நடத்தப்படும் தொழிலாக வளர்ந்துவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள 11 கோடியே 73 லட்சம் கோழிகளின் எண்ணிக்கையில், 10 கோடியே 34 லட்சம் கோழிகள் கோழிப்பண்ணைகளில் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தினமும் 4 கோடி முட்டைகள் இந்தப்பண்ணைகளில் இருந்து கிடைக்கிறது. தமிழக அரசும் கோழிப்பண்ணை தொடங்குபவர்களுக்கு மானியம் கொடுத்து ஊக்குவிக்கிறது. 5 ஆயிரம் கோழிகள் கொண்ட கறிக்கோழி பண்ணை ஒரு குடும்பத்தினுடைய உழைப்பை மட்டுமே கொண்டு லாபகரமாக செயல்படும். இந்தத்திட்டத்தின்கீழ் மாநில அரசின் 25 சதவீத மானியமாக ரூ.2 லட்சத்து 68,750 ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்படுகிறது. மேலும் நாட்டுக்கோழி வளர்த்தால் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 கோழிகளை வளர்ப்பதற்கு 25 சதவீத தமிழக அரசின் மானியமாக ரூ.38,750 வழங்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், தமிழக அரசு ஏழை குடும்பங்களுக்கு 50 நாட்டுக்கோழி குஞ்சுகள் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கும், கோழிமுட்டைக்கும் நல்லகிராக்கி இருப்பதால், கோழிவளர்ப்பு தொழிலை எல்லா மாநிலங்களும் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் நிலையில், புதிதாக கோழிப்பண்ணை தொடங்குபவர்கள் கூண்டில் வைத்து வளர்க்கக்கூடாது. திறந்தவெளியில்தான் வளர்க்கவேண்டும் என்றால் நிச்சயமாக நடைமுறையில் சாத்தியமில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் ஆயிரம் கோழிகளை வேண்டுமானால் திறந்தவெளியில் வளர்க்கமுடியும். ஆனால், அதற்கு தீவனம் போடுவது, தண்ணீர் வைப்பது, முட்டைகளை உடையாமல் எடுப்பது என்பதெல்லாம் மிகவும் கஷ்டமான ஒன்றாகும். மேலும் அரசின் மானியத்தைப்பெற்று கோழிப்பண்ணைகளை தொடங்கும் வேலையில்லா பட்டதாரிகள் எல்லாருக்கும், ஏக்கர்கணக்கில் நிலம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. இந்தநிலையில், இதுபோன்ற தடைகளை விதித்தால் யாரும் கோழிப்பண்ணைகளை தொடங்க முடியாது. சுப்ரீம்கோர்ட்டு விதித்துள்ள இடைக்காலத்தடை நீடிக்கும் பட்சத்தில் ஒரு முட்டையின் விலை ரூ.15 ஆக உயரும் என்று தமிழ்நாடு முட்டைக்கோழி சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியுள்ளார். எப்படி பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தவுடன், தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனுதாக்கல் செய்ததோ, அதுபோல இந்தவழக்கிலும் உடனடியாக சீராய்வு மனுதாக்கல் செய்யவேண்டும். முட்டைக்கோழி பண்ணையாளர்களும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்யவேண்டும். கோழிகளை கூண்டில் வளர்க்க தடைவிதிப்பதை சுப்ரீம்கோர்ட்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024