Tuesday, November 6, 2018

தேசிய செய்திகள்
 
சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் போலீஸ் குவிப்பு சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு

சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் போலீஸ் குவிப்பு சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு
 
சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 
 
திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில், ஐப்பசி மாத வழிபாட்டுக்காக கடந்த மாதம் 17–ந்தேதி முதல் 22–ந் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த இளம்பெண்களை அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அந்த பெண்கள் திரும்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாக பதற்றம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம், வன்முறையில் ஈடுபட்டதாக 3,731 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் ஆகியோர் கோவில் நடையை திறந்தனர்.

அய்யப்ப தர்மசேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர் நேற்று சன்னிதானத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.

10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் யாரும் வராததால், அசம்பாவிதம் எதுவும் இன்றி நேற்று கோவிலில் பூஜை அமைதியாக நடைபெற்றது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவது என்று தீர்மானித்துள்ள முதல்–மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அரசு, பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முறையும் போராட்டங்கள் நடைபெறலாம் என்று கருதி சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறது. 

பாதுகாப்புக்காக கோவில் சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதிரடிப்படை கமாண்டோ வீரர்கள் 20 பேர் மற்றும் கலவர தடுப்பு போலீசார் உள்பட 2,300–க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணிக்கு கேரள அரசு நியமித்து உள்ளது. 

சன்னிதானம் பகுதியில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் போலீசார் 15 பேர் நிறுத்தப்பட்டு உள்ளனர். சபரிமலை கோவிலில் பெண் போலீசார் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

செல்போன் சேவையை முடக்குவதற்காக, கோவிலில் தந்திரி கண்டரரு ராஜீவரு அறையின் முன்பும் மற்றும் சில இடங்களிலும் ‘ஜாமர்’ கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன. பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு தந்திரிக்கு போலீசார் தடை விதித்து உள்ளனர். கோவில் வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலை பகுதியில் 3 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நிலக்கல்லில் இருந்து பம்பை செல்லும் வழி முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

எருமேலிக்கு நேற்று முன்தினம் மாலை வந்து சேர்ந்த பக்தர்கள் சிலர் அங்கேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பைக்கு செல்ல தங்களை அனுமதிக்கவேண்டும் என்று அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று காலை அவர்கள், அய்யப்ப சரணம் கோ‌ஷங்களை முழங்கியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காலை 10 மணி அளவில் அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வாகனங்களில் வந்த பக்தர்களை நிலக்கல்லில் போலீசார் தடுத்து நிறுத்தி, அரசு பஸ்களில் பம்பைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். பஸ்கள் கிடைக்காததால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பம்பைக்கு நடந்து சென்றனர். பலத்த சோதனைக்கு பின்னரே பக்தர்களை போலீசார் அனுமதித்தனர்.

கோவிலுக்கு செல்ல போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதாகவும், நிலக்கல்லில் இருந்து 

பம்பைக்கு செல்ல அரசு போதிய பஸ் வசதி செய்து கொடுக்கவில்லை என்றும் கூறி கேரளாவில் பல இடங்களில் பாரதீய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தினார்கள். அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பும் போராட்டங்கள் நடைபெற்றன.

சபரிமலைக்கு செய்தி சேகரிப்பதற்காக பெண் பத்திரிகையாளர்களை அனுப்பி வைக்க வேண்டாம் என்று ஊடகங்களை சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு ஏற்கனவே கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தி சேகரிப்பதற்காக வந்த பத்திரிகையாளர்கள் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். பம்பைக்கு செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் சில பெண் பத்திரிகையாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பம்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கேரளாவில் உள்ள செருதலா என்ற இடத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற 25 வயது இளம்பெண் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன், சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக நேற்று பம்பைக்கு வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். சன்னிதானம் செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்று அவர் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார். அவரது பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பூஜைக்கு பின்னர் நேற்று இரவு 10 மணி அளவில் கோவில் நடை சாத்தப்பட்டது. திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மீண்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பூஜைக்கு பின்னர் இன்று இரவு 10 மணி அளவில் நடை சாத்தப்படும்.

அதன்பிறகு மண்டல பூஜை, மகரவிளக்கு வழிபாட்டுக்காக வருகிற 16–ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். 

இதற்கிடையே, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், சபரிமலை அய்யப்பன் கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்று கேரள அரசுக்கும், முதல்–மந்திரிக்கும் உத்தரவிடவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த கேரள ஐகோர்ட்டு, சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றபோதிலும் பக்தர்களும், பத்திரிகையாளர்களும் கோவிலுக்கு செல்வதை தடுக்கக்கூடாது என்றும், கோவிலின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் உரிமை அரசுக்கு இல்லை என்றும் கூறியது. அத்துடன் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றுவதாக கூறி பக்தர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கூறியது.

கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் பெயர் மற்றும் முகவரியை போலீசார் கேட்டு எழுதுவதற்கும் கண்டனம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024