Monday, November 19, 2018


நாளை மறுநாள் முதல் சென்னையில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்


By DIN | Published on : 18th November 2018 08:50 PM

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட வட தமிழக மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வானிலை நிலவரத்தை கணக்கிட்டு அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தற்போது வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக்கடல் பகுதியில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, நாளை மறுநாள் நவம்பர் 20 முதல் 22 ஆம் தேதி வரை கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரையிலான மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கஜா' புயலால் மழைநீர் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த வட தமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்திலும் நாளை மறுநாள் நவம்பர் 20 முதல் 22 வரை இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நல்ல மழைகிடைக்க வாய்ப்புள்ளது. சில இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு நாளை (நவ.19,20) கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை தொடங்கும் மழை 20 ஆம் தேதி அதிகனமழையாகவும் மாற வாய்ப்புள்ளது. காற்றுக்கு வாய்ப்பில்லை.

சென்னையைப் பொறுத்தவரை 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அவ்வப்போது இடைவெளிவிட்டு மழை இருக்கும். குறைந்தபட்சம் இரு நாட்களுக்குச் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறுவதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகவதற்கே அதிகமான வாய்ப்புள்ளது.

இதனால் வடதமிழகத்தில் உறுதியாக நல்ல மிகச்சிறந்த மழையைக் கொடுக்கும். ஆனால், புயலாக உருவாகும் என்ற வந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024