Monday, November 19, 2018


வருமுன் காப்போம்


By ந. செந்தில்குமார் | Published on : 19th November 2018 03:46 AM | 

மருத்துவ அறிவியல் வளர்ச்சி அதிகரித்திருக்கும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர் சுகாதாரமான காற்றை சுவாசித்தார்கள். சுத்தமான தண்ணீரைக் குடித்தார்கள். சத்தான உணவுகளை உண்டார்கள். அதனால் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால், நாமோ இன்று அசுத்தமான காற்றை சுவாசித்து, சுத்தமில்லாத தண்ணீரைக் குடித்து, சத்தற்ற உணவை உட்கொள்கிறோம். அதனால்தான் மருத்துவ அறிவியல் வளர்ந்தும் ஆரோக்கியமற்று வாழ்கிறோம்.
நோயற்ற வாழ்வு என்பது சொர்க்க வாழ்வாகும். அது ஒரு சிலருக்கே வாய்க்கிறது. பெரும்பாலானோர் ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகின்றனர்.
நாம் நெடுநாள் உயிர் வாழ முதலில் நம் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். உடலை வளர்ப்பதென்பது உயிரை வளர்ப்பதற்கு ஒப்பானது. இதைத்தான் திருமூலர், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று கூறுகிறார். 
 
இன்றைய காலகட்டத்தில் உடல் நலத்தைப் பாதிக்கும் சில நோய்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம். சில நோய்களின் பாதிப்புக்கு நாம் உண்ணும் உணவு காரணமாகிறது. வேறு சில நோய்களுக்குக் காரணம் நமது முறையற்ற பழக்கங்களாகும்.

முந்தைய காலங்களில் மலேரியா, பெரியம்மை, காசநோய், போலியோ போன்ற நோய்கள் பரவலாக இருந்தது. இப்போது அவை அநேகமாக ஒழிக்கப்பட்டுவிட்டன.

தற்போது, சர்க்ரை நோய், இருதய நோய், கல்லீரல், நுரையீரல் பாதிப்புகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தொற்று நோய் காரணமாகவும் ஆண்டுதோறும் ஏராளமானோர் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, இந்தியாவில் "மலேரியா', "டெங்கு', "ஃபைலேரியா', "சிக்குன் குனியா' போன்ற கொசுக்கடி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். 
 
பருவ நிலை மாற்றம், அதிகரித்த கொசு உற்பத்தி போன்ற காரணங்களால் டெங்கு, வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவற்றை தவிர, என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாத காய்ச்சளுக்கு "மர்மக் காய்ச்சல்' என்று பெயரிட்டு விடுகிறார்கள்.

இவ்வித நோய்கள் பெரும்பாலும் சிறுவர்களையும், முதியவர்களையுமே அதிக அளவில் தாக்குகின்றன. காரணம், அவர்கள் நோயின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்கக் கூடிய அளவுக்கு உடல் திறனோ, நோய் எதிர்ப்பு சக்தியோ உள்ளவர்களாக இருப்பதில்லை.

டெங்கு காய்ச்சல் "ஏடிஸ் எஜிப்டி' என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவின் மூலம் பரவுகிறது. 

டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத ஒருவரைக் கடிக்கும்போது அவருக்கு டெங்கு பரவும். மற்றபடி, தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல், தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது இல்லை. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவாது.
இந்நோய்க்குத் தடுப்பு ஊசியோ மருந்தோ எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே உயிர் இழப்பைத் தடுக்க முடியும்.
பன்றிக் காய்ச்சல் ஆரம்பத்தில் பன்றியில் இருந்து பன்றிக்கு பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பிறகு, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு இந்த காய்ச்சல் பரவுவதில்லை.
தற்போது, "எச்1 என்1 இன்ஃப்ளுயன்சா' வைரஸ் கிருமிகளால் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாத்திரை உட்கொண்டால் இந்த காய்ச்சல் குணமாகிவிடும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாகும்.

நிகழாண்டு, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல்களின் தாக்கம் தொடங்கிவிட்டன. இதனால் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தேசிய அளவில் சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமும், பொது சுகாதாரச் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமும் தமிழகம்தான். இருந்தபோதிலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களைக் கட்டுப்படுத்துவதில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

சுகாதாரத்தை நாம் வசிக்கும் இடத்திலிருந்து தொடங்க வேண்டும். சுகாதாரம், தூய்மை குறித்த விழிப்புணர்வு நம்மிடையே வளர்ந்துவிட்டால் நோய் வராமல் காத்துக்கொள்ளலாம். ஏனெனில், நோய் வந்த பின்பு சிகிச்சைக்கு செல்வதைவிட, முன்பே அதனைத் தடுப்பதே சிறந்தது.
மருத்துவத் துறையின் முக்கியப் பொறுப்பு தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது; மாறும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு வரக்கூடிய நோய்கள் வராமல் தடுப்பது; நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக வருமுன் காப்பது. 

சமச்சீரான உணவை உண்பது, உடற்பயிற்சியைத் தவறாமல் செய்வது, வாரம் ஒருநாள் முழுமையாக ஓய்வெடுப்பது, எந்த சூழ்நிலையிலும் மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல் இருப்பது போன்ற சில விதிகளை கடைப்பிடித்தால் நோயின்றி வாழலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024