Wednesday, January 9, 2019


சாதனை முகங்கள் 2018

Published : 30 Dec 2018 10:14 IST




சுயத்திலும் சுற்றத்திலும் மாற்றம் ஏற்படுத்த பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து தடம்பதித்த பெண்கள் பலர். அந்தவகையில் இந்த ஆண்டு சாதனைபடைத்த பெண்களைப் பற்றிய தொகுப்பு இது.

விருதால் கிடைத்த அங்கீகாரம்

மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுப் பட்டியலில் 14 பெண்கள் இடம்பெற்றிருந்தார்கள். பத்ம விருதுகளில் பெண்களுக்கான தனிப் பிரிவுகள் இல்லை என்றபோதும் தங்களுடைய திறமையால் இவர்கள் சாதனைபடைத்திருக்கிறார்கள். அவர்களில் பிஹார் நாட்டுப்புறக் பாடகி ஷ்ரத்தா சின்காவுக்கு உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியை நானம்மாள், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், 500-க்கும் மேற்பட்ட மூலிகை மருந்துகளைக் கண்டறிந்த கேரளத்தைச் சேர்ந்த மூலிகைப் பாட்டி லட்சுமி குட்டி, கர்நாடக மாநிலத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தேவதாசிகளைத் தன்னுடைய ‘மாஸ்’ தொண்டு நிறுவனத்தின் மூலம் மீட்டெடுத்த சித்தவ்வா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


விருது பெற்றுத்தந்த மயானம்

பெரும்பாலும் ஆண்களே நிறைந்திருக்கும் மயானப் பணிகளில் பெண் ஒருவர் பணியாற்றுவதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ‘சவாலான துறையில் சாதித்த முதல் பெண்’ என்ற தேசிய விருது சென்னையைச் சேர்ந்த பிரவீனா சாலமனுக்கு வழங்கப்பட்டது.


அங்கீகாரம்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றிவந்த திருநங்கைகள் நேயா, செல்வி ஆகியோருக்குத் தமிழக அரசு இந்த ஆண்டு நிரந்தப் பணி வழங்கியது. அரசு வேலைக்கான வயது வரம்பை இவர்கள் கடந்திருந்தாலும் திருநங்கைகளை ஊக்குவிக்கும்வகையில் இவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது.



‘அழகு’க்கு விருது

சிவங்ககை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகு, மத்திய அரசின் மகிளா கிஸான் விருதுக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். தன்னுடைய 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்வதுடன் மாடு, ஆடு, கடக்நாக் கோழி போன்ற வற்றை வளர்த்தும் வருகிறார். ஆவின் முகவராக இருப்பதுடன் டீக்கடையும் நடத்திவருகிறார்.

முதன்மை அதிகாரி

சென்னையைச் சேர்ந்த திவ்யா சூரியதேவரா அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பெண் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.

தாய் மண்ணே வணக்கம்

ஏழை மாணவர்களின் கல்விக்காக உலக அளவில் பிரச்சாரம் நடத்திவரும் மலாலா யூசஃப்சாய் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டு பல்வேறுகட்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்தவர் மலாலா. சிகிச்சைக்குப் பிறகு லண்டனில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்த மலாலா, பாகிஸ்தானுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.



மாற்றத்தின் அடையாளம்

பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதிவுசெய்திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்த இவரைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை விஜியும் பார் கவுன் சிலில் பதிவுசெய்தார்.

செய்திகள் வாசிப்பவர்...

பாகிஸ்தானின் உள்ளூர் செய்தி சேனலான கோஹினூர், மார்வியா மாலிக் என்ற திருநங்கையைச் செய்தி வாசிப்பாளராகப் நியமித்து உள்ளது. அந்நாட்டிலேயே முதன்முறையாகத் திருநங்கை ஒருவரைப் பணியமர்த்திய பெருமை இந்நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. மார்வியா மாலிக், ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.



தலைமைப் பொறுப்பு

அரசியல் கட்சிகளில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அரிதாகவே உள்ளது. இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக இம்முடிவு எடுக்கப்பட்டது. கட்சியில் பிரேமலதா வகிக்கும் முதல் பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பெண்கள்



உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசை இந்த ஆண்டு மூன்று பெண்கள் பெற் றுள்ளனர். இயற்பியலுக்கான நோபல் பரிசை கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லேண்டு பெற்றிருக்கிறார். 55 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்ற பெண் என்ற அங்கீகாரம் டோனாவுக்குக் கிடைத்துள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கரான ஃபிரான்செஸ் அர்னால்ட் பெற்றிருக்கிறார். ஈராக் நாட்டில் பெண்கள், குழந்தைகளின் உரிமைக்காகவும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகவும் போராடிவரும் 23 வயதான நாதீயே மூராத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.



போர்ப் பறவைகள்

இந்திய போர் விமானத் துறையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி. இவர் Mig-21 Bison என்ற போர் விமானத்தைத் தனியாக ஓட்டிய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவருடன் மோகனா சிங், பாவனா காந்த் ஆகியோரும் போர் விமானப் படைப் பிரிவில் சேர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...