Wednesday, January 9, 2019

20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் 'பவர்புல்' பாலகிருஷ்ண ரெட்டி சிக்கியது எப்படி?- ‘இந்து தமிழ்’ நாளிதழ் கணிப்பு பலித்தது

Published : 08 Jan 2019 08:40 IST

ஓசூர்





இரா.வினோத் / எஸ்.கே.ரமேஷ்

பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 20 ஆண்டுகளுக்கு முன் தொடுக்கப்பட்ட வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பிறகு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு குறித்து கடந்த 9.4.2016 இந்து தமிழ் நாளிதழில், ''ஓசூரில் 'வழக்கு' வேட்பாளர்'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் வழக்கின் பின்னணி தகவல்களை குறிப்பிட்டு, பாலகிருஷ்ண ரெட்டியை ஓசூர் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவித்திருப்பதால் உள்ளூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தோம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஜீமங்கலத்தைச் சேர்ந்தவர் கோவிந்த ரெட்டி.

பாஜகவை சேர்ந்த இவர் 1998 ஏப்ரலில் அதே ஊரை சேர்ந்த பட்டியல் வகுப்பினரான‌ முனியப்பன் என்பவர் சாராயம் விற்பதாக புகார் கொடுத்தார். இந்த புகாரை போலீஸார் விசாரித்து வந்த நிலையில் கோவிந்த ரெட்டி தனது உறவினர்களுடன் சேர்ந்து முனியப்பன் மகள் சரஸ்வதியை மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தி உள்ளார்.

இதுகுறித்து சரஸ்வதி போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து, கோவிந்த ரெட்டி மீது எஸ்சி,எஸ்டி வன்கொடுமை வழக்கின் கீழ் புகார் அளித்தனர். இதில் போலீஸார் முனியப்பனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கோவிந்த ரெட்டி தரப்பு கோபமடைந்தனர். மேலும் கோவிந்த ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் 30.6.1998 அன்று பாகலூரில் போலீஸார் சாராய விற்பனைக்கு துணை போவதாக கூறி,

மறியலில் ஈடுபட்டார். இதில் ஜீமங்கலத்தைச் சேர்ந்த தற்போதைய அதிமுக அமைச்சரும், அப்போதைய பாஜக பிரமுகருமான பாலகிருஷ்ண ரெட்டி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது கோவிந்த ரெட்டி, பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் அங்கிருந்த காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் உட்பட 5 காவலர்களை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மேலும் போலீஸ் ஜீப் (டி.என்.29 ஜி 0043), காவல் ஆய்வாளரின் பைக் (டி.என்.01 7461), 3 டிரக்ஸ் வண்டிகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர். சாலையில் நின்றிருந்த அரசு பேருந்துகளின் மீது கல்வீசி தாக்கினர். இதில் போலீஸார் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து 108 பேர் மீது பாகலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டி 94-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனிடையே பாஜகவில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி 2001-ல் அதிமுகவில் இணைந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர் ஆரம்பத்தில் கே.பி.முனுசாமி ஆதரவாளராக இருந்தார்.

2011-ல் ஓசூர் நகராட்சி தலைவரானார். பின்னர் தம்பித்துரை ஆதரவாளராக மாறி 2016-ல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். 22,964 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இவருக்கு, ஜெயலலிதா அமைச்சர் பதவி வழங்கினார். ஓசூர் தொகுதி உருவாக்கப்பட்டு 64 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் முறையாக அமைச்சர் பதவி பெற்றவர் என்பதால் 'பவர்புல்' மனிதராக வலம் வந்தார்.

பெங்களூருவை ஒட்டியிருப்பதால் வேகமாக வளர்ந்து வரும் ஓசூரில் ரியல் எஸ்டேட் தொழில் மும்முரமாக நடந்து வருகிறது.

பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சரான க‌டந்த 3 ஆண்டுகளில் அவர் மீதும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதும் ஏராளமான நில அபகரிப்பு புகார்கள் எழுந்துள்ளன. இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் உடந்தையோடு கோயில் சொத்துக்களை அபகரிப்பது, வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியோடு பொது சொத்துக்களுக்கு ஆவணங்கள் தயாரிப்பது என புகார்கள் வந்தன.

தனியார் கட்டிடங்கள், நிலங்களும் பாலகிருஷ்ண ரெட்டி தரப்பினரால் மிரட்டி பிடுங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓசூரைச் சேர்ந்த அஞ்சனா ரெட்டி என்பவர் தனது 32.87 ஏக்கர் நிலத்தை பாலகிருஷ்ண ரெட்டி மிரட்டி அபகரித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் இருப்பதால், அடுத்த சிக்கலும் பாலகிருஷ்ண ரெட்டிக்கு காத்திருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக அவரது உதவியாளர் சத்யா(எ) சத்தியநாராயணன்(42) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட மசாஜ் நிலையம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சொந்தமானது என அப்போது கூறப்பட்டது. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்காக போலீஸாருக்கு லஞ்சம் தந்து உதவி செய்ததாக பாலகிருஷ்ண ரெட்டி மீது டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதுகுறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் தனது அரசியல் பலத்தால் சாமர்த்தியமாக சமாளித்து வந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 21 ஆண்டுகளுக்கு முன் தொடுக்கப்பட்ட வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தண்டனையால் இதுவரை பதவி இழந்தவர்கள்

மக்கள் பிரதிநிதித்துவச்சட்டப்படி சிறை தண்டனை பெற்றால், எம்.பி., எம்எல்ஏ என மக்கள் பிரதிநிதிகளின் பதவி தானாகவே பறிபோய்விடும். அந்தவகையில், சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழகத்தில் முதலில் பறிக்கப்பட்டது திமுக எம்பியான செல்வகணபதியின் பதவியாகும். 2014 ஏப்.19-ல் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றம் சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் செல்வகணபதிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனால், செல்வகணபதி எம்பி பதவியை இழந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அவருக்கு சிறைத் தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2014 செப்.27ல் எம்எல்ஏ மற்றும் முதல்வர் பதவியை இழந்தார்.

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏவான அசோக் ஆனந்த் மீதான வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில், சிபிஐ நீதிமன்றம் கடந்த நவ. 8-ம் தேதி ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து அவர் எம்எல்ஏ பதவியை இழந்தார்.

இவர்களைத்தவிர, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத யாதவ் உள்ளிட்ட மேலும் பலர் வடமாநிலங்களில் நீதிமன்ற தண்டனையால் பதவியை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...