கள்ளக்குறிச்சியால் தனது அந்தஸ்தை இழந்தது விழுப்புரம் மாவட்டம்
By DIN | Published on : 08th January 2019 03:34 PM |
சென்னை: தமிழகத்தில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானதால், பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வந்த விழுப்புரம் அந்த அந்தஸ்தை இழந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தோடு சேர்த்து ஆற்காடு மாவட்டத்தின் ஒரு அங்கமாக விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பிறகு இது கடலூரில் இருந்து பிரிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி விழுப்புரம் மாவட்டம் உதயமானது.
விழுப்பரையர் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகம் வசித்ததால் விழுப்புரம் என்ற பெயரை இப்பகுதி பெற்றதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. இதனை விழிமா நகரம் என்றும் அழைப்பர்.
விழுப்புரம் மாவட்டம் 13 தாலுகாக்களைக் கொண்டிருந்தது. விழுப்புரம், திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், விக்ரவாண்டி, வானூர், ஜிஞ்ஜி, மரக்காணம், மேல்மலையனூர், கண்டச்சிபுரம் ஆகியவையாகும்.
இது கள்ளக்குறிச்சியோடு சேர்த்து 7,194 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், ஆரணி என 2 மக்களவைத் தொகுதிகளையும், செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டிருந்தது.
தற்போது விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவித்து தமிழக முதல்வர் பழனிசாமி பேரவையில் இன்று அறிவித்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமானது.
No comments:
Post a Comment