Tuesday, January 1, 2019


மனசு போல வாழ்க்கை 26: உங்களுக்கு நன்றி

Published : 15 Sep 2015 12:01 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்

மறுபதிவு




நன்றி கூறுதல் ஒரு நல்ல பழக்கம் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். “தேங்க்ஸ்” என்பதை மேலோட்டமாக உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, நன்றி பாராட்டுதல் எவ்வளவு பெரிய உளவியல் சிகிச்சை தெரியுமா?

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிறந்து, வளர்ந்து, படிப்பறிவு, வசதி பெற எவ்வளவு பேர் உதவியிருப்பார்கள் என்று பட்டியல் போடுங்கள். பெற்றெடுத்த அம்மா, அப்பா, வளர்த்த பாட்டி, தாத்தா, மருத்துவர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதல் கொண்டவர்கள், அக்கம்பக்கத்தினர், வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர், பயிற்சி கொடுத்தவர், திருமணம் முடிக்க உதவியவர், உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், தூர இருந்து ஆறுதலும், அறிவும், அன்பையும் தரும் எண்ணற்றவர்கள்...!

இவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க முடியாது. இவர்களை எத்தனை முறை நாம் நன்றியோடு நினைக்கிறோம்? மாறாக பல நேரங்களில் இவர்களில் பலரை குற்றம் சொல்கிறோம். எப்படிப்பட்ட நன்றியில்லாத செயல் பாருங்கள்!

பெத்த மனம் பித்து

குறிப்பாக பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள். அதிகமாக தூற்றப்படும் உறவுகள் இவர்கள் எனலாம். ஒரு தாய் படும் வலியும் வேதனையும் எந்த உறவும் பட முடியாது. ஆனாலும் தாயிடம் தான் ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்போம். நமக்கு அள்ளித் தரும் கைகளைத்தான் அதிகம் கடிக்கிறோம். ‘பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி எவ்வளவு செறிவானது என்று உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

“எனக்கு பெரிசா எதுவும் எங்கப்பா செய்யலை!” என்று பேசத் துவங்குவதற்கு முன் அப்பா இல்லை என்றால் இந்த உயிரே இல்லை என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு தகப்பனும் தனக்குத் தெரிந்ததைத் தன்னால் முடிந்ததைத் தன் பிள்ளைக்கு செய்கிறான். தந்தையின் பொருள் உதவி இல்லாமல் யாரும் பிழைத்திருக்க முடியாது.

அதே போல ஆசிரியர்கள். ஒரே நேரத்தில் 50 குழந்தைகளுக்குப் பெற்றோராகவும் போதகராகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் அறிவில் குறை இருக்கலாம். வழிமுறைகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் யாரும் ஒரு பைசா சம்பாதித்திருக்க முடியாது. உங்கள் விரல் பிடித்து முதல் எழுத்து எழுதிய ஆசிரியர், முதல் வேலை சொல்லித்தந்த ஆசிரியர் வரை எத்தனை ஆசிரியர்கள் நம்மைச் செதுக்கியிருப்பார்கள்? ஆசிரியர்களை கேலி செய்த அளவுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

மறைமுக உதவி

செய்கிற வேலை தப்பு என்று எடுத்துரைக்கிற போது வருகின்ற கோபம் இயல்பானதுதான். ஆனால் உங்கள் திறனை நுட்பமாக வடிவமைக்க, உங்கள் தொழிலில் நீங்கள் பிரகாசிக்க உங்கள் மேலதிகாரி தரும் நெருக்கடிகள் அனைத்தும் பாடங்கள்தானே? உங்களை உயரத்துக்கு இட்டுச் செல்லும் முதலாளிகள், மேலாளர்கள், மேலதிகாரிகள் என எத்தனை பேர்? அத்தனை பேரை நினைவுகூருகிறோமா?

பிரிவிலும் மறைவிலும் மட்டும் உணரும் வாழ்க்கைத் துணையின் அருமையை வாழ்கின்ற காலத்தில் உணர்ந்து நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்?

இவர்களைத் தவிர நம் வாழ்க்கையில் முகம் தெரியாத பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியிருப்பார்கள். பிரசவ நேரத்தில் உதவுவார் ஆட்டோக்காரர். வேலை கிடைத்தும் ஒருவர் சேராததால் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கிறது. இப்படி நிறைய நடந்திருக்கும்.

அது மட்டுமா? உங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் நன்றி சொல்ல வேண்டுமே? ஒரு விபத்து நடக்க இருக்கையில் அதைத் தடுத்த ஓட்டுநருக்கு நன்றி சொல்வோம். ஆனால், தினம் ஒழுங்காக ஓட்டிச்சொல்லும் ஓட்டுநருக்கு சொல்வோமா?

பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். எங்கோ வளர்ந்த கீரை உங்கள் தட்டுக்கு வரும் வழியில் எத்தனை கைகளை கடந்து வந்திருக்கிறது? உங்கள் பத்து ரூபாயையும் மீறி எத்தனை பேரின் உழைப்பால் அது உங்களுக்கு கிடைக்கிறது? உங்கள் உணவுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் எத்தனை பேர் இருப்பார்கள் யோசியுங்கள்!

உங்கள் பட்டுப்புடவைக்காக உயிர் தந்த பட்டு பூச்சிகள் முதல் உங்களின் அழகு சாதனங்களைத் தயாரிப்பதற்காகச் செய்யப்படுகிற சோதனைக்காக உயிர் விட்ட எண்ணற்ற பறவைகள், மிருகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல மனிதர்களின் பங்களிப்பு உள்ளது. உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பலர் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். அவர்களை ஒரு முறையாவது நினைக்கிறோமா?

இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய அனைவரையும் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் மானசீகமாக நன்றி சொல்லுங்கள். இத்தனை நாள் நினைக்காததற்கு மன்னிப்பு கேளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள்.

நன்றி கூறுகையில் நீங்கள் கொடுத்தது எவ்வளவு, எடுத்தது எவ்வளவு என்று புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே தனியாக எதையும் செய்து விட முடியாது என்று தெரியவரும். பணிவும் அன்பும் பெருகும். அகந்தை அழியும்.

கடைசியாக இத்தனை பேரை உங்கள் வாழ்க்கையில் இணையச் செய்த அந்த மகா சக்திக்கு நன்றி கூறுவீர்கள்.

பெருங்கடலில் சிறு துளி நாம். கடலை உணர்கையில் துளி தொலைந்து போகும். ஆழ்கடலாய் மனம் அமைதி கொள்ளும்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...