Wednesday, January 16, 2019

பிரயாக்ராஜ் கும்பமேளா: லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்

Added : ஜன 15, 2019 22:39



பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலம், பிரயாகராஜில், பிரசித்தி பெற்ற கும்பமேளா, நேற்று துவங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த, லட்சக்கணக்கான பக்தர்கள், புனித நீராடினர்.
அலகாபாத் என அழைக்கப்பட்ட பிரயாக்ராஜில், கும்பமேளா விழா நடக்கிறது. பிரயாக்ராஜில், கடைசியாக, 2013ல் கும்பமேளா நடந்தது. அப்போது, 12 கோடி பேர், புனித நீராடினர்.கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும், பிரயாக்ராஜில் உள்ள கும்ப நகரி பகுதியில், மகர சங்கராந்தியான, நேற்று, கும்பமேளா விழா துவங்கியது. சிவராத்தியான, மார்ச், 4ம் தேதி வரை, 50 நாட்களுக்கு, இந்த திரிவேணி சங்கமத்தில், பக்தர்கள் புனித நீராடுவர். இந்த ஆண்டு, 16 கோடி பேர் வருகைத் தருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மகர சங்கராந்தியான நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு, புனித நீராடும் நிகழ்ச்சி துவங்கியது. சைவ, வைஷ்ணவ, உதாசின மற்றும் சீக்கியர்களுக்கான, 13 மடங்களைச் சேர்ந்த, சாதுக்கள், முதலில் புனித நீராடினர். அதைத் தொடர்ந்து, பக்தர்களும், புனித நீராடினர்.கடும் பனிப்பொழிவில், ஐஸ் கட்டி போல் உறைந்திருந்த நதி நீரில், குளிரைப் பொருட்படுத்தாமல், பக்தர்கள் புனித நீராடினர். 'ஹர ஹர கங்கே' என்ற கோஷத்துடன், பக்தர்கள் புனித நீராடினர். உலகிலேயே, அதிகமானோர் கூடும், மத நிகழ்ச்சியாக, கும்பமேளா விளங்குகிறது.கடும் குளிர் நிலவியபோதும், ஆடைகள் இல்லாமல், உடலில் சாம்பலை பூசியபடி, நாக சாதுக்கள் ஊர்வலமாக, நடனமாடி வந்ததை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

கும்பமேளா விழாவுக்காக, 3,200 ஹெக்டேர் நிலப் பரப்புள்ள, கும்ப நகரி பகுதியில், மாநில அரசு பல்வேறு வசதிகளை செய்திருந்தது. மத்திய ஜவுளித் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானியும், நேற்று புனித நீராடினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024