காட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள்
Added : ஜன 16, 2019 22:30
சிவகங்கை: சிவகங்கை அருகே, பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், காட்டுக்குள் பொங்கல் வைத்தனர்.
வலையராதினிப்பட்டி முத்தரையர் சமூகத்தினர், விஷ்ணு, ராமன், சிவன் என, மூன்று பிரிவினராக உள்ளனர். விஷ்ணு, ராமன் பிரிவினர் பொன்னழகி அம்மன், சிவன் பிரிவினர் பஞ்சநாட்சி அம்மனை வழிபடுகின்றனர். அவர்கள், மாட்டு பொங்கலை, இறைவன் அனுமதி கிடைத்தால் மட்டுமே கொண்டாடுகின்றனர். இதற்காக மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு பிரிவினரும் தலா, ஏழு குழிகள் தோண்டி, தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.ஊருக்கு வெளியே, காட்டுப்பகுதியில் இருக்கும் அவரவருக்கான மாட்டு தொழுவத்தில் மண் பிடி கொடுத்ததும், விழா துவங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு, ஜன., 3ல் விழா துவங்கியது. 14 நாட்களும் இரவில் தொழுவம் அருகிலேயே ஆண்கள் தங்கினர்; வீட்டிற்கு செல்லவில்லை. பெண்கள் வீட்டில் விரதம் இருந்தனர். கை வளையல் உட்பட, எந்த அணிகலனும் அணியவில்லை. நேற்று, மூன்று பிரிவினரும் அவரவருக்கு பாத்தியப்பட்ட தொழுவத்தில் பொங்கல் வைத்தனர்.விஷ்ணு பிரிவில் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், மண் பானையில் வெண் பொங்கல் வைத்தனர். சிவன் பிரிவில் வண்ண ஆடைகள் அணிந்தனர். பொங்கல் வைத்ததும், அதனுடன் காய்கறி, பயறு வகைகளை கலந்து, 21 தலைவாழை இலையில் படையல் வைத்து வழிபட்டனர். புதிதாக பிறந்த கன்றுக்குட்டிகளுக்கு காதறுப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாடுகளுக்கு துண்டு கட்டி, அவிழ்த்து விட்டனர்.
படையல் உணவை, திருமணமாகாத ஆண்கள் மட்டுமே சாப்பிட்டனர்.
ஆர்.மேகலா கூறியதாவது: விரதம் இருக்கும் நாட்களில், ஆடம்பரமாக இருக்க மாட்டோம். குழம்பை தாளிக்க மாட்டோம். பொன்னழகி அம்மனுக்கு வெள்ளை உடை தான் அணிவிப்போம். அதனால், நாங்களும் வெள்ளை சேலை அணிகிறோம். குழந்தை வரம் கேட்டு, வெளியூர்களில் இருந்து, ஏராளமானோர் வருவர். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். அந்த கரும்பை ஏலம் விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.போஸ் கூறியதாவது: பல நுாறு ஆண்டுகளாக, பொங்கலை கோவில் விழா போன்று சிறப்பாக கொண்டாடுகிறோம். நாங்கள் கடந்த காலங்களில், முயல், கவுதாரி போன்றவற்றை வேட்டையாடினோம். அவற்றுக்கு படைக்கும் வகையில் காட்டுக்குள் பொங்கல் வைக்கிறோம். மூன்று கிளையினருக்கும் தனித்தனி சாமியாடி உள்ளனர். அவர்களது பானை தான் முதலில் பொங்கும். இந்த ஆண்டு சில காரணங்களால் ராமர் கிளையினர், பொங்கல் வைக்கவில்லை. அவர்களும், வெள்ளை சேலை உடுத்தி தான் பொங்கல் வைப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment