சென்னை:-இதுவரை இல்லாத அனுபவமாக, தமிழகத்தை குளிர் வாட்டி வருகிறது. இது, மேலும் அதிகரித்து, வரும் நான்கு நாட்களில், கடுங்குளிர் நிலவும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை காலம், 2018 டிச., 31ல் முடிந்தது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை காலத்தில், நான்கு புயல்கள் உருவானாலும், 'கஜா' புயல் மட்டுமே, ஓரளவு மழை கொடுத்தது. அதிலும், புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால், மழைக்கான பலன் கிடைக்க வில்லை. அதேநேரம், டிச., முதல், பனிக் காலம் துவங்கியது. ஒன்றரை மாதமாக, தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் குளிர் வாட்டி எடுக்கிறது. தமிழகத்தில், முதன்முறையாக, ஆறு ஆண்டுகளில் இல்லாத குளிர், சென்னையில் பதிவானது.
வால்பாறை, ஊட்டி, குன்னுார், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில், பகலில் மூடுபனியும், இரவு மற்றும் அதிகாலையில், உறைபனியும் நிலவுகிறது.
வால்பாறை, ஊட்டி, குன்னுார், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில், பகலில் மூடுபனியும், இரவு மற்றும் அதிகாலையில், உறைபனியும் நிலவுகிறது.
அங்கு, மலையோர கிராமங்களில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.இரவில் பனிக் காற்று வீசுவதால், பெண்கள், குழந்தைகள், வயதானோர் வெளியே நடமாட முடியவில்லை. அதிகாலையில், மூடுபனி காரணமாக, நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், ஈரப்பதம் இல்லாத, வறண்ட குளிர் நிலவுவதால், பகலில் வெப்ப நிலை மாறுபடுகிறது.
இந்நிலையில், வரும், நான்கு நாட்கள், தொடர்ந்து கடும் குளிர் வாட்டும் என்றும், பின், மெல்ல குறைந்து, பிப்., வரை நீடிக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.இது குறித்து,
இம்மையம் தெரிவித்து உள்ளதாவது:நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், ஊட்டியில், குறைந்தபட்ச வெப்பநிலை, வெறும், 3 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே பதிவானது. அதனால், ஊட்டி மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், உறைபனி உருவானது.
குன்னுார், 8; வால்பாறை, 9; கொடைக்கானலில், 10 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே, வெப்பநிலை பதிவானது.அதேபோல், கோவை, தர்மபுரி, வேலுார், திருத்தணி, 16; நாமக்கல், கரூர், பரமத்தி, 17 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே வெயில் பதிவானது. இந்த பகுதிகளில், இரவிலும், அதிகாலை யிலும் நடுங்க வைக்கும் குளிர் நிலவியது. சென்னையில், முந்தைய நாட்களை விட,
குளிர் குறைந்து, நுங்கம்பாக்கம், 21; மீனம்பாக்கம், 20 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியது. இந்த நிலை, வரும் நாட்களில் மாறுபட்டு, இன்னும் சில நாட்கள், கடுங்குளிர் நிலவும். இவ்வாறு, வானிலை மையம் கூறியுள்ளது.
'வரும் நாட்களை பொறுத்தவரை, இன்னும் நான்கு நாட்களுக்கு, மலையோர பகுதிகளில், கடுங்குளிர் நீடிக்கும். சில இடங்களில், உறைபனி நிலவும்.'மற்ற இடங்களில், மூடுபனியாக இருக்கும். பகலில், மந்தமான வெயிலுடன் குளிர்ந்த காற்று வீசும்' என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், '2018ம் ஆண்டில், குளிர் அதிகரிப்பால், இரவு நேரங்களில், சராசரியாக, 6 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்ப நிலை சரிந்தது. 'சில இடங்களில் மட்டும், மைனஸ், 5 டிகிரி செல்ஷியஸாக சரிந்து, கடும் உறைபனி ஏற்பட்டது' என, கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment