Thursday, January 17, 2019

மதுரைக்கு வழி! காட்டுமா 'செம்மொழி' எக்ஸ்பிரஸ் ரயில்... சும்மா நிற்கும் நேரத்தில் இயக்கலாமே!

Added : ஜன 17, 2019 00:17




கோவை:மன்னார்குடியில் இருந்து கோவை வரை இயக்கப்படும், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை, சும்மா நின்றுகொண்டிருக்கும் இடைப்பட்ட நேரத்தில், மதுரை வரை நீட்டித்து இயக்க, பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மன்னார்குடியில் இருந்து தினமும் இரவு, 8:15 மணிக்கு புறப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சை, திருச்சி, ஈரோடு வழியாக மறுநாள் காலை, 4:45க்கு கோவை வந்தடைகிறது. 

கோவையில் இருந்து நள்ளிரவு, 12:30க்கு புறப்படும் ரயில் காலை, 7:40 மணிக்கு மன்னார்குடி சென்றடைகிறது.

காலை, 4:45 மணிக்கு கோவை வந்தடையும் ரயில் இரவு, 12:30 மணி வரை ஸ்டேஷனில் எவ்வித பயன்பாடுமின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது. போத்தனுார் - பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், கோவை - பொள்ளாச்சி, கோவை - பழநி இடையே பயணிகள் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், கோவையில் இருந்து போத்தனுார், பொள்ளாச்சி வழியாக மதுரை, ராமேஸ்வரம் என தென்மாவட்டங்களுக்கு ஏற்கனவே இயக்கிய ரயில்களை, மீண்டும் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், பெட்டிகள் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களைக்கூறி, தெற்கு ரயில்வே தட்டிக்கழித்து வருகிறது.இந்நிலையில், சும்மா நின்று கொண்டிருக்கும், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை, போத்தனுார், பொள்ளாச்சி வழித்தடத்தில், மதுரை வரை இயக்க, கோரிக்கை எழுந்துள்ளது.ரயில் பயணிகள் கூறுகையில்,'காலை, 4:45 மணிக்கு கோவை வந்தடையும் செம்மொழி ரயிலை, காலை, 7:00 மணியளவில் மதுரைக்கு இயக்கினால், பொள்ளாச்சி, பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், மிகவும் பயன் பெறுவர்' என்றனர்.'டீல்' நடக்கிறதா?போத்தனுார், பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, 'அல்வா' கிடைத்ததுதான் மிச்சம் என புலம்பும் பயணிகள், பஸ் உரிமையாளர்களுடன் இது தொடர்பாக, 'டீல்' நடப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024