தன்னிகரற்ற தலைவர்!
By கே. மகாலிங்கம் | Published on : 17th January 2019 01:17 AM |
இன்று தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள். 1972-ஆம் ஆண்டு முதல் 1987 வரை நான் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றியுள்ளேன்.
அந்தக் காலகட்டத்தில் புரட்சித் தலைவர் இல்லம் அமைந்துள்ள ராமாபுரம் பகுதிக்கு நந்தம்பாக்கத்திலிருந்து வரும் கார்களும், பேருந்துகளும் குறுகிய பாதையாக இருந்த சாலையில்தான் இரு மார்க்கத்திலும் செல்ல வேண்டும். அந்தக் காலத்தில் 54ஏ என்ற எண்ணுள்ள சுந்தரம் மோட்டார்ஸ் என்ற பேருந்தும் மற்றும் சில அரசு பேருந்துகளும் அந்த வழியாகத்தான் சென்று வரும்.
மணப்பாக்கம் ஆற்றின் குறுக்கே ஒரு வழிப்பாதையாக பாலம் இருக்கும். அந்தக் குறுகிய பாலத்தில் ஒரு புறம் பேருந்தோ அல்லது கார்களோ வரும் போது மறு பாதையில் வரும் வண்டிகள் நின்று தான் போக வேண்டும். எம்ஜிஆரின் ராமாபுரம் தோட்டத்தில் சாலை மிக குறுகியது. சிறிது ஓரமாக போனால்கூட போகும் வண்டிகள் எடை தாங்காமல் சரிந்து விடும்.
அந்தச் சாலையில் வரும் பேருந்துகள் சில சரிந்து விழுந்து விடும். உடனே அதில் பயணிக்கும் பொதுமக்கள் பேருந்திலிருந்து கீழே விழுந்து விடுவார்கள். பேருந்திலிருந்து விழும் பொது மக்கள் விழும் சத்தம் கேட்டு, தோட்டத்தின் உள்ளே இருக்கும் நானும் மற்றவர்களும் பேருந்தில் வந்தவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு டீ, காபி போன்றவைகள் தந்து ஆசுவாசப்படுத்துவோம். இது போன்ற சம்பவங்கள் மூன்று அல்லது நான்கு முறை நடந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் நடக்கும்போது தோட்டத்தில் எம்ஜிஆர் இருந்தால், அவரே நேரில் வந்து ஆறுதல் கூறுவார்.இவ்வாறு இருந்த சமயத்தில் 1977 ஜூன் 30-ஆம் நாள் தமிழக முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பேற்றார். அவர் முதல்வரான பிறகும் இதே நிலை நீடித்தது.
மணப்பாக்கம் குறுகிய பாலத்தில் எம்ஜிஆரின் கார், மறுபக்கம் வரும் வாகனங்களுக்கு வழி விட்டுத்தான் செல்லும். முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பேற்றதும் போக்குவரத்துத் துறை அமைச்சராக சி. பொன்னையன் பதவி ஏற்றார். அவரிடம் இந்த விவரத்தைக் கூறி, ராமாபுரம் சாலையையும் மணப்பாக்கம் பாலத்தையும் அகலப்படுத்த வேண்டும் என்று கூறினேன். எம்ஜிஆர் அனுமதி கொடுத்தால் உடனடியாக உத்தரவு போடலாம் என்று அவர் கூறி விட்டார்.
எம்ஜிஆரிடம் இரண்டு, மூன்று முறை ராமாபுரம் சாலையைப் பற்றியும், பாலத்தை அகலப்படுத்துவது குறித்தும் அனுமதி கேட்ட போது, அனுமதி தர மறுத்து விட்டார். எனக்காக சாலையை அகலப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சியினர் குறை கூறுவார்கள்; தேவையில்லை என்று கூறிவிட்டார். அமைச்சர் பொன்னையன் கூறியும்கூட எம்ஜிஆர் மறுத்து விட்டார்.
1980-இல் எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று அவர் முதல்வராக பதவியேற்றபோது, போக்குவரத்துத் துறை அமைச்சராக முத்துசாமி பொறுப்பேற்றார். 1982-ஆம் ஆண்டு நந்தம்பாக்கம் முதல் பூவிருந்தவல்லி வரை உள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு திட்டம் போடப்பட்டது. அப்போதுதான் அந்தச் சாலை அகலப்படுத்தப்பட்டது. பாலமும் அகலப்படுத்தப்பட்டது.
முதல்வராக பத்தாண்டுகள் ஆட்சி செய்தாலும் தனக்கென அரசு அதிகாரத்தை அவர் துஷ்பிரயோகம் செய்யவில்லை. தன்னுடைய சொந்தக் காரையே பயன்படுத்தினார். அதற்கான பராமரிப்பு, பெட்ரோல் செலவை தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து செய்தார்.
1977-இல் எம்ஜிஆர் முதல்வரானபோது, தான் பயணிக்கும்போது பொது மக்களுக்கு தன்னால் எந்தவித இடையூறோ, சிரமமோ ஏற்படக் கூடாது என்று தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதே போன்று காரில் செல்லும் போது ஒலி எழுப்பான் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார். இதை அவர் தனது இறுதிக் காலம் வரை கண்டிப்புடன் கடைப்பிடித்து வந்தார்.
தன்னிடம் பணிபுரியும் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை யாரையும் அவர்களின் பெயர்களைச் சொல்லி அன்போடு அழைப்பார். அவர்களின் தொழிலைக் குறிப்பிட்டு யாரையும் அழைக்க மாட்டார்.
அவரிடம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒரு முறை கதிரேசை கூப்பிடு என்றார். நான் அதற்கு டிரைவரையா என்று கேட்க, உடனே அப்படிச் சொல்லக் கூடாது என்று எம்ஜிஆர் கூறினார். மேலும், அவர்களின் பெயர்களையோ அல்லது அடைமொழியோடு அழைப்பதால் அவர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். கார் ஓட்டியை டிரைவர் என்றோ, வாயில் காப்பாளனை வாட்ச்மேன் என்று தொழில் ரீதியாக அழைத்தால் அவர்களுக்குப் பரிவினை ஏற்படுத்துவது போலாகும். இதைத் தவிர்க்கவே நான் எல்லோரையும் அவர்களின் பெயரை வைத்து அழைக்கிறேன் என்று எனக்கு விளக்கம் அளித்து அறிவுரை கூறினார்.
அவர் ஆட்சியில் இருந்தவரை, தன்னிடம் பணியாற்றிய அரசு அதிகாரிகளையோ, அலுவலர்களையோ, ஊழியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளையோ தன்னுடைய சொந்த விஷயங்களுக்கு என்றுமே பயன்படுத்திக் கொண்டதில்லை.
இதுபோன்ற பல உயர்ந்த பண்புகளை அவரிடம் நாம் காணலாம். அவர் மறைந்து 32 ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் வாழ்கிறார்.
No comments:
Post a Comment