Thursday, January 17, 2019


வருமானவரி வரம்பு ரூ. 5 லட்சமாக உயரும்?: பிப்.1-இல் மத்திய பட்ஜெட்

By DIN | Published on : 17th January 2019 04:00 AM 




ரூ.5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கு வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2019-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் வரும் சூழலில், வரி செலுத்தும் தனி நபர்களின் ஆதரவைக் கவரும் வகையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் எனத் தெரிகிறது. 

தற்போதைய நிலையில் ரூ.2.5 லட்சம் வரையில் ஈட்டப்படும் தனி நபர் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு 5 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேலான வருவாய்க்கு 30 சதவீதமும் வரியாக வசூலிக்கப்படுகிறது.
80 வயதுக்கு மேற்பட்டோர் ஈட்டும் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு தற்போது வரி விலக்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ரூ.5 லட்சம் வருவாய் ஈட்டும் ஒரு நபர், மருத்துவ மற்றும் போக்குவரத்துச் செலவினங்களாக தனது வரித் தொகையிலிருந்து ரூ.40,000 வரையில் கழித்துக் கொள்ள வழிவகை உள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் புதிய வரி விலக்கு வரம்பு தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் நிதிச் செயல்பாடுகள் சற்று சுணக்கத்தை அடைந்தன. வரி விலக்கு வரம்பை உயர்த்தும் மத்திய அரசின் திட்டம் சமுதாயத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு பலனளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விலக்கு வரம்பை ரூ.5 லட்சத்துக்கு உயர்த்த வேண்டுமென இந்திய தொழிற் கூட்டமைப்பு (சிஐஐ), பட்ஜெட்டுக்கு முந்தைய தனது பரிந்துரைகளில் ஒன்றாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், சேமிப்பு நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில், பிரிவு 80 சி-இன் கீழ் வரும் செலவினங்களுக்கான வரம்பை ரூ.2.50 லட்சமாக உயர்த்தவும் இந்திய தொழிற் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.

ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு, தனது பொருளாதார தொலைநோக்குக் கொள்கைகளை குறிப்பிட்டுக் காட்டுவதன் மூலமாக, வரும் தேர்தலிலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயலுகிறது. எனவே, அதிக அளவிலான கொள்கை முடிவுகளை மேற்கொள்ளாத வகையில், அந்த அரசு எவ்வாறு இத்தகைய முக்கிய மாற்றங்களை இடைக்கால பட்ஜெட்டில் கொண்டுவரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினரிடையேயும் மேலோங்கியுள்ளது. 

இதனிடையே, நேரடி வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டம் குறித்த அறிக்கை வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிடுவது கண்டனத்துக்குரியதாக இருக்கும்.

நேரடி வரி விதிப்பு குறித்த புதிய சட்டமானது, வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம், வரி செலுத்தும் வரம்புக்குள் அதிகமான மக்களை கொண்டுவரவும், பாரபட்சமில்லாத வகையிலானதாக வரி விதிப்பு அமைப்பை மாற்றுவதற்கும் முயற்சிக்கப்படுகிறது.

அத்துடன், பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் நிறுவனங்களிடையேயான ஆரோக்கியமான போட்டியை அதிகரிக்கவும், சட்ட நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் இதர வரி விலக்கு வரம்புகளை வழக்கொழிக்கவும் இந்த புதிய நேரடி வரி விதிப்பு விதிகள் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...