Tuesday, January 15, 2019

தலையங்கம்

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!




இன்று பொங்கல் திருநாள். தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருவெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் நன்னாள்.

ஜனவரி 15 2019, 04:00

‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்ற நாமக்கல் கவிஞர் பறைசாற்றியதற்கிணங்க, தமிழர் வாழ்க்கை முறையிலும், பண்பாட்டிலும் ஒரு பிரதிபலிப்பாக விளங்குவது இந்த இனியநாள். உழைப்பின் பலனை கொண்டாடி மகிழும் நாள். ‘தைப்பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, விளைந்த பயிர்களை அறுவடைசெய்து, பொருளாதார ரீதியாகவும் கையில் பணம் புழங்கும் நல்ல நாட்கள் பொங்கல் காலம். மழைக்காலம் ஓய்ந்து, பனிக்காலம் குறைந்து, வெயில் காலம் தொடங்கி, இளவேனிலை நோக்கி எட்டுவைக்கும் திருநாள்.

தை பொங்கலை 4 நாட்கள் கொண்டாடுகிறோம். முதல்நாள் போகி பண்டிகை, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப, வேண்டாத பழையவற்றை கழிக்கும்நாள். அடுத்தநாள் பொங்கல் நாள். அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து, வீட்டு வாசலில் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, ‘பொங்கலோ பொங்கல்’ என்று உவகை பெருக்கெடுத்தோட குதூகலிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இந்தநாள் உழைப்பின் மகிழ்ச்சியை கொண்டாடும் நாள். இயற்கைக்கு நன்றி கூறும்நாள். எப்போதுமே நன்றி உணர்வு படைத்த தமிழன், தனக்கு உதவிய மாடுகளை அலங்கரித்து, பொங்கல் வைத்து கொண்டாடும் நன்றி திருநாள்தான், 3-வது நாளான மாட்டு பொங்கல். 4-ம் நாள் காணும் பொங்கல். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று உறவை வலுப்படுத்தும், நட்பை ஆழமாக்கும் நன்னாள். இதுமட்டுமல்லாமல் உற்றார், உறவினர்களோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழும்நாள்.

இந்த ஆண்டு பொங்கல் வளமான பொங்கல். தமிழக மக்கள் அனைவரும் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாட தமிழகஅரசு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடிநீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.1,000 ரொக்கமும் வழங்கியது. தமிழகஅரசின் இந்த பொங்கல் பரிசு நிச்சயமாக பாராட்டுக்குரியது. ஒரு குடும்பம் பாக்கியில்லாமல், அனைத்து இல்லங்களிலும் இன்று பொங்கலிட்டு மகிழ்வார்கள். பொங்கலிட பொருட்களும், கையிலே பணமும் இருக்கும்போது நிச்சயமாக மகிழ்ச்சி பொங்கல்தான். தை பொங்கல் அடிப்படையில் உழவர்களின் திருநாள். இந்த மண் வேளாண்மையை சார்ந்து இருக்கிறது. வேளாண்மை நீர்வளத்தை சார்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டு நீர்வளம் குறைந்த ஆண்டாக கழிந்துபோனது. இந்த ஆண்டும் மழை பொய்த்துவிட்டது. வேளாண்மை தொழில் இந்த ஆண்டு அரசை சார்ந்து நிற்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. அடுத்த ஆண்டும் பொங்கல் மகிழ்ச்சியோடு பொங்குவது என்பது அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. தமிழக அரசு தொலைநோக்கு பார்வையோடு, உழவர்களை மனதில்வைத்து திட்டம் தீட்டவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இருக்கும் குறைந்த அளவுநீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் நீர் மேலாண்மை திட்டங்களை வகுக்கவேண்டும். ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்களிலிருந்து கிடைக்கவேண்டிய தண்ணீரை கேட்டு பெறவேண்டும். குறைந்த அளவுநீரை பயன்படுத்தி பயிரிடுவதற்கேற்ற உணவு பயிர்கள், தானியங்கள், எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்கவேண்டும். ‘பொங்கும் மங்கலம், எங்கும் தங்குக’ என்று ‘தினத்தந்தி’ தன் பொங்கல் வாழ்த்துகளை உவகையோடு, உழவர்கள் வாழ்க! தமிழர்கள் வாழ்க! என்று வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment

Why Stalin-EPS war of words is bad for Vijay

Why Stalin-EPS war of words is bad for Vijay  STORY BOARD ARUN RAM 18.11.2024  James Bond’s creator Ian Fleming said: Once is happenstance. ...