Tuesday, January 15, 2019

மாவட்ட செய்திகள்

உயர் மின்அழுத்தம் காரணமாக மணலியில் 100 வீடுகளில் டி.வி., பொருட்கள் சேதம்



மணலியில் உயர் மின் அழுத்தம் காரணமாக 100 வீடுகளில் இருந்த டி.வி., பிரிஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் வெடித்து சிதறின.

பதிவு: ஜனவரி 15, 2019 04:15 AM
திருவொற்றியூர்.

சென்னை மணலியில் உள்ள ராதாகிருஷ்ணன் தெரு, எட்டியப்பன் தெரு, பூங்காவனம் குறுக்குத்தெரு, பெரியார் தெரு உள்ளிட்ட தெருக்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த பகுதியில் நேற்று பகல் ஒரு மணி அளவில் திடீரென உயர் மின்அழுத்தம் ஏற்பட்டது. இதன் காரணமாக மின்கம்பங்களில் உள்ள மின்சார வயர் துண்டித்து கீழே விழுந்தது.

அப்போது 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி., பிரிஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் வெடித்து சிதறின. இதனால் பயந்து போன பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்தனர். பின்னர் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று, சேதம் அடைந்த பொருட்களை எடுத்து வந்து மின்சார ஊழியர்களிடம் காண்பித்தனர். உயர் மின்அழுத்தம் காரணமாக அடிக்கடி இதுபோல் நடப்பதாகவும், மின்கம்பம் மூலம் மின்இணைப்பு வழங்குவதை கைவிட்டு, சென்னை மாநகராட்சி பகுதியில் இருப்பது போல புதைவழித்தடத்தில் மின்வினியோகம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக மின் ஊழியர்கள் உறுதி அளித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024