Saturday, January 12, 2019


அஜித்தின் ‘விஸ்வாசம்’ - திரை விமரிசனம்


By சுரேஷ் கண்ணன் | Published on : 11th January 2019 12:33 PM |

 


சாகசம் + சென்ட்டிமென்ட் என்பது சினிமாவின் அரதப்பழசான கலவை. இந்தக் கலவையையும் அஜித்தையும் வைத்து தொடர்ச்சியாகத் திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருப்பவர் இயக்குநர் சிவா. வீரத்தில் சகோதரர்கள், வேதாளத்தில் தங்கை, விவேகத்தில் மனைவி என்று சென்ட்டிமென்டைப் பிழிந்தவர், ‘விஸ்வாசத்தில்’ தந்தை – மகள் சென்ட்டிமென்டைக் கையில் எடுத்திருக்கிறார். (எனில் மீதிமிருப்பது ‘அப்பா’ சென்ட்டிமென்ட்தான். ‘விநாயகம்’ என்று கதைக்குத் தொடர்பில்லாத தலைப்போடு அதுவும் அடுத்து வரலாம்).


இப்படித் தேய்வழக்கான திரைக்கதைகளில் தொடர்ந்து நடித்தும் அஜித்தின் வணிகச்சந்தையும் ரசிக வரவேற்பும் எப்படி ஏறுமுகமாகவே இருக்கின்றன என்பது தமிழ்ச் சமூகத்தின் புரியாத விந்தைகளுள் ஒன்று.

கொடுவிளார்பட்டி என்கிற கிராமத்தில் ‘திருவிழா நடக்கலாமா, கூடாதா’ என்கிற பழம் பஞ்சாயத்துடன் படம் துவங்குகிறது. அந்த ஊரின் பெருந்தலையான ‘தூக்குதுரை’ (அஜித்) மாவட்ட ஆட்சியரிடம் பேசி திருவிழாவை நடத்தி வைக்கிறார். திருவிழாச் சடங்கின்போது உறவினர்கள் குடும்பம் சகிதமாகக் கலந்துகொள்ள, தன்னந்தனியாக நிற்கும் அஜித்தின் மீது மற்றவர்கள் பரிதாபப்படுகின்றனர். அவர் தன் மனைவி நிரஞ்சனாவை (நயன்தாரா) விட்டுப் பிரிந்திருப்பது தெரியவருகிறது. ‘மும்பையிலிருக்கும் மனைவியைத் திருவிழாவிற்கு அழைத்து வா’ என்று உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார்கள். அதை ஏற்று அங்குச் செல்கிறார் அஜித். மும்பையில் அவருடைய மகளின் மீது கொலை முயற்சித் தாக்குதல்கள் நடக்கின்றன.

அஜித் ஏன் தன் மனைவியைப் பிரிந்தார், மகளுக்கு யாரால் ஆபத்து வருகிறது, அதை அவர் எப்படி முறியடிக்கிறார் போன்ற தகவல்களை அறிந்துகொள்ள மீதமுள்ள திரைப்படத்தை நீங்கள் பார்த்தாகவேண்டும்.

அஜித் வயதான தோற்றத்தில் இளமையாக இருக்கிறார். (எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது!) முரட்டுக் கிராமத்தானாக இவர் செய்யும் அலப்பறைகள் பரவாயில்லை. ஆக்ஷன் காட்சிகள் பொருத்தமாகவும் மிரட்டலாகவும் அற்புதமான வடிவமைப்புடனும் அமைந்திருக்கின்றன. தனக்குப் பிரியமானவர்களுக்குத் தெரியாமல் சண்டை போட்டு அவர்களைக் காப்பாற்றும் விஷயங்கள் இதிலும் தொடர்கின்றன.

சென்டிமென்ட் காட்சிகளில் சமயங்களில் அஜித் நெகிழ வைக்கிறார். ஆனால் அவருக்கு வராமல் அடம்பிடிக்கும் இரண்டு விஷயங்கள் நடனமும் நகைச்சுவையும். ஆரம்பக் காட்சிகளில் அவர் நகைச்சுவைக்கு முயலும்போது, தூக்குதுரை, ‘பழைய ஜோக்’ தங்கதுரையாகி விடுகிறார். முன்பாதியில் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, யோகி பாபுவும் பிற்பாதியில் விவேக்கும் சிரிக்க வைக்க முயன்று எரிச்சலூட்டுகிறார்கள்.

நயன்தாரா ஆரம்பக்காட்சிகளில் நன்றாக துடைத்து வைத்த தங்கக் குத்துவிளக்கு மாதிரி மின்னுகிறார். ‘உன்னால் என் குழந்தைக்கு ஆபத்து வரக்கூடாது’ என்கிற காரணத்தைச் சொல்லி அஜித்தை நிராகரிக்கும் காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். மகள் ஸ்வேதாக அனிகா நடித்திருக்கிறார். ஜெகபதி பாபு பலவீனமான வில்லன்.



இமானின் இசையில் குத்துப் பாட்டுக்களை எளிதில் நிராகரித்து விடலாம். ஆனால் விஸ்வாசத்தின் விசேஷமான அம்சமாக நீடிக்கப் போவது - ராம்ராஜ் வேட்டியின் விளம்பரத் தூதுவர் போல வரும் அஜித்தோ அல்லது கண்ணைப் பறிக்கும் நயனதாராவோ இல்லை, ‘கண்ணான கண்ணே’ என்கிற அபாரமான பாடல். இமானுக்கும் இது புரிந்திருக்கிறது. எனவேதான் பல இடங்களில் அதைப் பின்னணி இசையாகப் போட்டு அசத்தியிருக்கிறார்.

இமானின் இந்த நல்ல மெட்டு, தாமரையின் அற்புதமான வரிகள் (புதைமணலின் நடுவே / புதைந்திடவே இருந்தேன்... / குறுநகையை எறிந்தே / மீட்டாய் என்னை..!) அசத்தலான பாவத்துடன் பாடியிருக்கும் சித் ஸ்ரீராம்.. என இந்தக் கூட்டணி ஜெயித்திருக்கிறது. இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஹிட் மெலடி.

ஒளிப்பதிவாளர் வெற்றியின் உழைப்பு ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் சிறப்புடன் அமைந்திருக்கிறது. துவக்கத்தில் வரும் சலிப்பூட்டும் காட்சிகளால் படம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தடுமாறுகிறது. (இயக்குநரின் வழிகாட்டுதலோடு) எடிட்டர் ரூபன் நினைத்திருந்தால் காட்சிகளை மாற்றியமைத்து துவக்கக் காட்சிகளின் சலிப்பைப் போக்கியிருக்கலாம்.

‘வெற்றி மட்டுமே முக்கியம்’ என்று பெற்றோர்கள் இளம் தலைமுறையினருக்கு நெருக்கடியும் அழுத்தமும் தரக்கூடாது என்கிற ஆதாரமான செய்தியை சொல்ல முயன்றிருக்கும் திரைப்படம் இது. இதைத் தெரிந்து கொள்வதற்குள் பல மனஅழுத்தங்களையும் நெருடிக்கடிகளையும் நாம் தாண்டி வர வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024