திரை விமர்சனம் - விஸ்வாசம்
Published : 11 Jan 2019 08:03 IST
அடிதடி ஆளாக சொந்தங்களுடன் கொடுவிளார்பட்டியில் வசிப்பவர் அஜித். அங்கு மருத்துவ முகாமுக் காக வரும் டாக்டர் நயன்தாராவுக்கு அஜித் மீது காதல் வருகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். மகள் பிறந்த பிறகு, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிகின்றனர். மகளுடன் மும்பை சென்று வாழ்கிறார் நயன்தாரா. ஊர் திருவிழாவுக்கு நயன்தாரா அழைக்க, மும்பை செல்கிறார் அஜித். அங்கு போனதும், மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிகிறது. அதன் பிறகு அஜித் என்ன செய்தார்? நயன்தாராவுடன் இணைந்தாரா? ஆபத்தில் இருக்கும் மகளைக் காப்பாற்றினாரா? என்பதே ‘விஸ்வாசம்'
அவ்வளவாக வெளியில் தலை காட்டாத அஜித்தை திரையில் பார்ப்பதே, ரசிகர்களுக்கு கொண்டாட்டமான அனுபவம்தான்! அதிலும், ‘தூக்குதுரை’யாக படம் முழுக்க வேஷ்டி, முறுக்கு மீசை, மதுரை வட்டார மொழி என புதுவிதமாக வெளுத்து வாங்குகிறார். ரோபோ சங்கர், தம்பி ராமையாவுடனும், நடுவே யோகிபாபுவுடனும் சேர்ந்து அஜித் செய்யும் அலப்பறைகளுக்கு விசில் பறக்கிறது. படம் நெடுக அவர் பேசுகிற இங்கிலீஷுக்கு தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது. முதல் பாதி முழுக்க அடிதடி, காமெடி, காதல் ரவுசு என அதகளம் பண்ணுபவராகவும், பிற்பாதியில் மகளுடனே இருந்துகொண்டு பாசத்துக்கு ஏங்கி மருகுகிற அன்பான அப்பாவாகவும் நடிப்பிலும் புதியதொரு பாய்ச்சல் காட்டியிருக்கிறார் அஜித்.
தூக்குதுரையின் மனைவி நிரஞ்சனாவாக நயன்தாரா. ஆரம்பத்தில் தூக்குதுரை மீது போலீஸில் புகார் கொடுப்பதும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் புரிந்துகொள்வதும், ஒருகட்டத்தில் கணவ ரைப் பிரிவதும் என கனமான நாயகி வேடம். கிடைக்கும் தருணங்களிலெல்லாம் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
அஜித்துக்கு ‘மாஸ்’ காட்சிகளைக் கொஞ்சம் குறைத்து, முழுக்க குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் சிவா. ஆனால், அதில் பழைய படங்களின் சாயல் அதிகமாகத் தெரிகிறது. டாக்டரான நயன்தாரா, திருமணமானவுடன் மூக்குத்தி போட்டுக்கொண்டு கிராமத்துப் பெண்ணாக வாழ்கிறார். திடீரென மும்பையில் மல்டி மில்லியன் பெண் தொழிலதிபராகவும் அவரை காட்டுகின்றனர். இதெல்லாம் படத்துடன் ஒட்டவில்லை.
‘என்னை அறிந்தால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒளிர்ந்த அனிகா, இப்படத்தில் அஜித்தின் மகளாக நடிக்கிறார். பயம், ஆர்வம், கலவரம், கவலை, கோபம், மரண பீதி என எல்லா உணர்வுகளையும் மிகையின்றி சிறப்பாக வெளிப்படுத்துகிறார். அஜித் - அனிகா வரும் காட்சிகள், படம் பார்க்கும் அப்பா - மகள்களிடம் கண்ணீரை வரவைத்துவிடுகின்றன.
மகளுக்காக வில்லனாக மாறுகிறார் ஜெகபதி பாபு. அவரும் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். இடை வேளைக்குப் பிறகு வரும் விவேக், காமெடி என்ற பெயரில் பண்ணும் விஷயங்கள் எரிச்சல்.
இமான் இசையில் வரும் ‘கண்ணான கண்ணே' பாடல் சரியான இடத்தில் பயன்படுத் தப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் கேட்க சுமாராக இருந்தாலும், காட்சிப்படுத்தியது அருமை. பின்னணி இசையில் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார் இமான். படத்தின் அடுத்த பலம் ஒளிப்பதிவாளர் வெற்றி. கிராமத்து வயல்கள், வாய்க்கால் கள், பாலங்களை அழகாக கேமரா வழியே புகுத்தி, நமக்குள் அந்த அழகைக் கடத்தி விடுகிறார். பிற்பாதியில் மும்பையின் அழகு, ஜன நெரிசல், சாலைகளையும், பர்த்டே கொண்டாட்ட குதூகலங்களையும் வெகு அழ காகப் படமாக்கியுள்ளார். ரூபனின் எடிட் டிங்கும் கச்சிதம். சண்டைக்காட்சிகளில் திலீப் சுப்பராயனின் உழைப்பு தெரிகிறது. மழைச் சண்டை, கழிவறை சண்டைக் காட்சிகள் அதிரடியாக உள்ளன.
கதையில் எவ்வித புதுமையும் இல்லை. அடுத்தடுத்த காட்சிகள் எளிதாக ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றன. இது படத்தின் பெரிய மைனஸ். படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், கிளைமாக்ஸை நல்ல கருத் தோடு, சென்டிமென்ட்டாக முடித் திருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டு மின்றி, அனைவரும் தூக்குதுரையை தலையில் தூக்கிவைத்துக் கொண் டாடுவார்கள். ‘தல’ ரசிகர்களுக்கு ‘தலப் பொங்கல்’!
No comments:
Post a Comment