அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்: மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு
By சென்னை, |
Published on : 14th January 2019 02:18 AM |
டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், அஞ்சல் துறை சார்பில், இன்டர்நெட் பேங்கிங் முறை கடந்த மாதம் 13-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள எல்லா அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்காக இணையவழி வங்கி சேவைகளை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு அஞ்சல் வாடிக்கையாளர், மற்றொரு அஞ்சல் வாடிக்கையாளருக்கு செல்லிடப்பேசி வாயிலாக பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும்.
இது குறித்து அஞ்சல்துறையின் சென்னை மண்டலத் தலைவர் ஆர்.ஆனந்த் கூறியது:
இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில், அஞ்சல்துறையில் இன்டர்நெட் பேங்கிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இளைய தலைமுறையினர் வீட்டில் இருந்தபடியே தொடர்வைப்பு, வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் பணத்தை செலுத்த முடியும். சிறு அறிக்கை பெற முடியும்.
தனது சொந்த சேமிப்புக் கணக்கில் இருந்து தொடர் வைப்பு கணக்கில் வைப்பு செய்ய முடியும். சேமிப்பு கணக்கில் இருந்து தொடர் வைப்பு கடன் கணக்கில் வைப்பு செய்ய முடியும். புதிய வைப்பு கணக்கு தொடங்க முடியும். பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுத்தல், அதில் வைப்பு செய்தல் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும்.
இன்டர்நெட் பேங்கிங்-இல் இணைவது எப்படி? அஞ்சல்துறை வாடிக்கையாளர் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளாரோ அந்த வங்கிக்குச் சென்று, அங்கு இன்டர்நெட் பேங்கிங் வசதிக்காக விண்ணப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கொடுப்பார்கள். அதை நிரப்பி கொடுத்தால், வாடிக்கையாளரின் செல்லிடப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வரும். அதில், " உங்களுக்கு இன்டர்நெட் பேங்கிங் செயல்பாட்டுக்கு வந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். இதையடுத்து, ebanking.indiapost. gov.in என்ற இணையதளத்தில் சென்று, உங்கள் விவரம், ரகசிய எண் அமைத்து, இன்டர்நெட் பேங்கிங் வசதியை ஏற்படுத்தலாம்.
நாடுமுழுவதும் அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்-இல் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை 10,000-க்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளனர். குறிப்பாக, எங்கள் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் அஞ்சல்துறை இன்டர்நெட் பேங்கிங் முறையில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார் அவர்.
No comments:
Post a Comment