Monday, January 14, 2019

தேவையா இந்தக் கொண்டாட்டங்கள்? 

By எஸ். ஸ்ரீதுரை | Published on : 14th January 2019 02:47 AM |

சென்னையின் பழைய மாமல்லபுரம் சாலை என்னும் "ஓஎம்ஆர்', தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள சாலையாகும்.

அந்தச் சாலையில் உள்ள ஒரு பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் என் நண்பர் ஒருவர், சென்னை நகரக் குடிமக்களின் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் இடையே சிக்கிக் கொண்டு உயிர் பயத்தோடு வீடு திரும்பியதை விவரித்தபோது, இந்தப் புத்தாண்டுக் கேளிக்கைகள் இனியும் தேவைதானா இன்று தோன்றுகிறது.

கடந்த சில மாதங்களாக இரவுப் பணி செய்து வரும் என் நண்பர், தினந்தோறும் அதிகாலை இரண்டு மணியளவில் பணி முடிந்து, தன்னுடைய காரை ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வருவது வழக்கம். சுமார் நாற்பது நிமிஷ நேரத்தில் தன் வீடு வந்து சேர்ந்து, அதற்குப் பிறகு ஏதாவது கொறித்துவிட்டுத் தூங்கும் பழக்கம் உள்ள அவர், என்றும் போல கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று மாலை அலுவலகம் சென்றார்.

மறுநாள், அதாவது புத்தாண்டு தினத்தன்று அதிகாலை பணிமுடிந்து தனது காரைக் கிளப்பிய அவருக்கு அன்றைய தினம் திகிலும் கலவரமும் நிறைந்ததாக ஆகிவிட்டது. அந்த நள்ளிரவு நேரத்தில் "ஓஎம்ஆர்' சாலையில் கட்டுக்கடங்காத வேகத்தில் இளைஞர்கள் பலர் விலையுயர்ந்த இரு சக்கர வாகனங்களில் "ஹேப்பி நியூ இயர்' என்று கூச்சலிட்டபடி சென்னை நோக்கிய சாலையின் இரு வழிகளிலும் விரைந்தனர். எந்த நேரத்திலும் ஏதாவது ஓரு பைக் தமது கார் மீது இடிக்கக் கூடும் என்ற நடுக்கத்துடனேயே நண்பர் மெதுவாக ஓட்டினார்.

சென்னைவாசிகளுக்கு ஏற்கெனவே அறிமுகமான, பல விபத்துகளுக்குக் காரணமான, பைக் ரேஸ் சாகசக்காரர்கள் அன்றைய தினத்தைத் தங்கள் தினமாக எண்ணிக்கொண்டுவிட்டது போல இருந்ததாம் என் நண்பருக்கு.
அன்றைய தினம் அந்தச் சாலையில் பைக் ஓட்டியவர்களில், சாதாரண ஓட்டிகள் யார், பைக் ரேஸ் சாகசக்காரக்காரர்கள் யார் என்று பிரித்தறிய முடியாதபடி அனைத்து பைக்குகளும் தலைதெறிக்க விரைந்தன. பைக்குகள்தான் என்றில்லை. சாலையில் வெறிபிடித்து விரைந்த கார்களுக்கும் குறைவில்லை.

அதுவும், பல பணக்காரவீட்டுப் பிள்ளைகள் "ஆடி' போன்ற விலையுயர்ந்த இறக்குமதி கார்களில் சாலையில் தமக்கு முன்னதாகச் செல்லும் எந்த ஒரு வண்டியையும் தாண்டி விரைந்து முன்னேறும் ஓரே குறிக்கோளுடன், ஒவ்வொரு காரிலும் நான்கைந்து இளைஞர்கள் தலையை வெளியே நீட்டி, காட்டுக் கூச்சலுடன் சென்றனர்.

அவ்வாறு விரைந்த ஒருசில விலையுயர்ந்த கார்களில், "டாப்' எனப்படும் மேற்கூரையைத் திறக்கும் வசதியும் இருக்கிறது. அத்தகைய ஒரு சில கார்களின் கூரையைத் திறந்து, இருக்கையின் மேல் நின்றபடி ஒரு சில இளைஞர்கள் ராக்கெட் உள்ளிட்ட பட்டாசுகளைக் கொளுத்தி வீசியபடி விரைந்து செல்ல, அவற்றின் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் செல்லும் வாகனங்களில் இருந்தவர்களும், இரு பக்கங்களிலும் நடந்து சென்ற பாதசாரிகளும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
என் நண்பரும், தமது காரின் மேல் பட்டாசு எதுவும் விழுந்து தீபற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையில் மெதுவாகப் பயணித்தார்.

ஒருவழியாக "ஓஎம்ஆர்' மரணபயச் சாலையைக் கடந்து நண்பர் வீடு வந்து சேர சுமார் இரண்டு மணி நேரம் ஆகியிருக்கிறது. பயண நேரம் தந்த படபடப்பு, வீடு வந்து சேர்ந்து பல மணி நேரத்துக்குப் பிறகும் அவரை விடவில்லை. விடியற்காலையில் வீடு வந்தவுடன் உறங்கிவிடும் என் நண்பருக்கு, அன்றைய தினம் தூக்கமே வரவில்லை. அவரைப் பொருத்தவரை இந்த ஆண்டு புத்தாண்டு மனப்பிராந்தியுடனே விடிந்தது. அதன் பின்னர், ஒருவார காலம் விடுப்புக்கேட்டு வீட்டிலேயே இருந்தார்.
சென்னை நகரத்தில் மட்டும் புத்தாண்டை ஒட்டிய கொண்டாட்டங்களின் நடுவில் சுமார் 130 சாலை விபத்துகள் நேர்ந்துள்ளன என்றும், அவற்றில் 8 பேர் பலியானதாகவும் தெரிகிறது. மேலும், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டியதாக அன்றைய தினம், சுமார் 250 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டின் பிறப்பை, ஆண்டு தவறாமல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடுகின்றனர்.

நம்பிக்கை ஏற்படுத்துகின்ற ஒன்றை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரவேற்பதில் தவறு இல்லை. ஆனால், அந்தக் கொண்டாட்டங்களை, மதுபோதைக் கேளிக்கைகள், காட்டுக் கூச்சல், புயல் வேக வாகனப் பயணம், கட்டுக்கடங்காத ஆட்டம்-பாட்டம் ஆகியவற்றுடன்தான் கொண்டாட வேண்டும் என எந்த ஒரு விதியும் இல்லை.
அமைதியாக, வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலமும், அவரவர் நம்பிக்கைக்குரிய வழிபாட்டுத் தலங்களில் வழிபடுதல் மூலமும் இன்னும் சிறப்பாக, நயத்தகு நாகரிகத்துடன் கொண்டாட முடியும். அப்படித்தான் இத்தகைய திருவிழாக்களைக் கொண்டாட வேண்டும்.

"பஸ் டே' கொண்டாட்டம் போன்று புத்தாண்டுக் கொண்டாட்டத்தையும் கலவரங்களின் களமாக்கியிருக்கும் இளைஞர்கள், அன்றைய தினம் தாங்கள் ஏற்படுத்திய விபத்துகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயரங்களுக்குத் தாங்களே காரணம் என்பதை ஒரு நொடியாவது எண்ணிப் பார்க்க முன்வர வேண்டும்.
மேலும், அன்றைய தினம் எந்த விபத்திலும் சிக்காவிடினும், பாதுகாப்பாக வீடு போய்ச் சேர வேண்டுமே என்று கலவரமடைந்த மேற்கண்ட நண்பரைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்களின் நிம்மதியைத் தட்டிப் பறித்த இதுபோன்ற அரக்கத்தனமான கொண்டாட்டங்கள் தேவைதானா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிறரது துன்பத்தில் இன்பம் காண்பவர்கள், இந்தச் சமுதாயத்தின் மதிப்பையும் அன்பையும் பெறுவது அரிதினும் அரிதாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024