தைப்பொங்கல்: ஒன்பது கிரஹங்களின் ஆசி நிறைந்த உத்தம திருவிழா!
By - அஸ்ட்ரோ சுந்தரராஜன் | Published on : 14th January 2019 05:47 PM
தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தைமாதம் முதல் நாள் தைப்பொங்கல். சூரியனைப் பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபாடு செய்கிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மாடுகளுக்குப் பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் சிலபகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீர விளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில், உறவினர்களோடு கூடி மகிழும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆறு, கடல் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் கூடி மகிழ்வர்.
உத்தம வாழ்வு தரும் உத்திராயணம்
மக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தக்ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் தை மாதம் என்பது தேவர்களின் சூரியோதய காலமாகிய காலை பொழுதாகும். சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யக்கூடிய தை 1 முதல், ஆனி 30 வரையிலான காலம் உத்தராயண புண்ணிய காலம் எனப்படும்.
இக்காலங்களில் பிறப்பவர்கள் மட்டுமின்றி இறப்பவர்களும் (இயற்கை மரணம்) புண்ணியம் செய்தவர்கள் எனப்படுகிறது. சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம். பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார். தெற்கு நோக்கி சூரியன் சஞ்சரிக்கும் காலமான ஆடி1 முதல் மார்கழி 30 வரையான தட்சிணாயனம் எனப்படுகிறது. உத்திராயணத்திற்கு இணையான சிறப்பு இக்காலத்தில் இல்லை. சுபகாரியங்கள் செய்வதற்கு உத்தராயண காலமே சிறந்தது.
உத்திராயண புண்ணிய காலங்களில் பிறந்தவர் நல்லதை நினைப்பான், நல்லதைச் செய்வான், நல்லதை உண்பான் என்றும் சொல்வார்கள்! சுபகாரியங்கள் உத்திராயண காலத்தில், அதாவது தை முதல் ஆனி வரையிலான மாதங்களில் செய்வது உத்தமமானது என்று கருதப்படுகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் தட்சிணாயனம் எனப் படுகிறது. சங்கராந்தி துவங்கி சூரியன் வடதிசை நகரும் இந்த ஆறு மாதமும் அகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு அற்புதக் காலம்.பாரதப் போரில் பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடந்து புண்ணியமான இந்த மகரசங்கராந்தி வரும் வரை காத்திருந்து பின் பூவுலகு நீங்கினார்.
தீமை போக்கும் போகி
பொங்கலின் முதல் தினமான "போகி"யில் வீடு, வீடுகளுக்கு வெள்ளையடித்து அலங்கரித்து பழைய, தேவையில்லாத பொருட்கள், குப்பைகளை எரித்துத் தூய்மையைக் கொள்வர். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாகப் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்தப் போகி பண்டிகை அமைந்திருக்கும். போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். சுகாதார நோக்கில் இது மிகவும் அவசியமான ஒன்று. இந்தப் பண்டிகை துயரங்களை போக்குவதாக கருதப்படுவதால் அதை ‘போக்கி’ என்றார்கள். அந்த சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது.
ஜோதிடத்தில் இந்தப் போகியின் நாயகர்கள் யாரென்று தெரியுமா உங்களுக்கு? சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும் தான். பழைய, முதிய, கழிந்த போன்ற வார்த்தைகளுக்குக் காரகர் சொந்தக்காரர் சனீஸ்வரர் தான். உழைப்புக்கு சனீஸ்வர பகவானும் அதன் பலனான போக வாழ்விற்கு சுக்கிரனும் காரகமாக அமைந்தது பொருத்தம் தானே! புதிய விடியலான உத்திராயணத்திற்கு முன் தேவையற்ற விஷங்களைப் போக்கி சுத்தமாவதும் சிறப்பு தானே!
தித்திக்கும் பொங்கல்
ஆறு மாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள். இந்த நாளையே மகரசங்கராந்தி என்பர். இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும் என்று கூறுவர். சமஸ்கிருதத்தில் "சங்க்ரமன" என்றால், "நகரத் துவங்குதல்" என்று அர்த்தம். நவக்கிரகங்களில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் மூவரும் எப்போதும் ஒன்றாக (சில விதிகளுக்குட்பட்டு) பயணம் செய்வர். எனவே அவர்களை முக்கூட்டுகிரகங்கள் என்பர். சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்னும், பின்னும் எப்பொழுதும் சுற்றி வரும். இவர்களின் இணைவே முக்கிய நிகழ்வுகளெல்லாம் ஏற்படுகின்றன. உலக பயிர்கள் சுபிட்சமாக வாழ மழையைத் தருவது சூரியன்.
போகிக்கு மறுநாளான தை முதல் தேதி பொங்கல் திருநாள். அன்று, புதுப்பானையில் புது அரிசியில் பொங்கலிடுவது தமிழர்களின் வழக்கம். அப்போது மஞ்சள், கரும்பு, நெல், வாழை என்று, வயலில் விளைந்தவற்றை எல்லாம் சூரிய பகவானுக்கு படைப்பார்கள். தொடர்ந்து, பொங்கல் வைத்து, பொங்கி வந்த பொங்கலை தலை வாழை இலையில் இட்டு, முதலில் சூரிய பகவானுக்குப் படைப்பார்கள். தொடர்ந்து, பொங்கலை அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.
தமிழர்கள் பொங்கல் திருநாளாய் இதனைக் கொண்டாடுகின்றனர். கிராமங்களில், புது நெல்லில் பொங்கல் வைத்து அறுவடையின் முதல் படையலை இயற்கைக் கடவுளான சூரியபகவானுக்கே அர்ப்பணிப்பர். பொங்கல் பிரசாதத்தை, குடும்பத்தில், வேலைக்காரர்களுக்கு, பக்கத்து வீட்டினருக்கு என்று அனனவருக்கும் கொடுத்து மகிழ்வர். யஜமானர் எல்லாவற்றையும் தனக்கே எடுத்துக் கொள்ளாமல், தன் வேலையாட்களுக்கும் உணவு, புது உடைகள் கொடுத்து அவர்தம் உழைப்பைக் கௌரவப்படுத்துவர். பகிர்வின் உன்னதத்தை உணர்த்தும் சடங்குகள்.
"புதிய" என்ற வார்த்தையின் நாயகனே நம்ம சுக்கிரன் தான். புத்தாடை, புத்துணர்ச்சி, புது வீடு, புதிய வாகனம். இப்படி புதிய எனத் தொடங்குமிடத்திலெல்லாம் சுக்கிரனின் ஆட்சிதான். ஆக போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருட்கள், பழமையைக் குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தும் விலகி புதிய விடியலை ஏற்படுத்தும் தினம் என்பதால் சுக்கிரனுக்குரிய தினம்தானே! அதிலும் சுக்கிர வாரத்திலேயே அமைந்தது சிறப்பு தானே! பொங்கலன்றும் பாருங்கள். புதிய பானை, புதிய அரிசி ஆக எல்லாம் சுக்கிர மயம்தான். மண்ணின் அதிபதி சனி. அது பானையாகி உருபெற்றால் அதன் காரகன் சுக்கிரன். செந்நெல்லின் அதிபதி சந்திரன். அது விளையக் காரணம் சுக்கிரன். மஞ்சளுக்கும் இனிய செங்கரும்பிற்கும் அதிபதி குரு. அது விளையக் காரணம் சுக்கிரன். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கவும் பானையில் பொங்கல் பொங்கவும் காரணன் சுக்கிர பகவான் தாங்க.
எல்லா பொருட்களும் இருந்தாலும் பொங்கல் பொங்க நெருப்பு வேண்டுமல்லவா? ஜோதிடத்தில் ஆண்மையின் காரகராக நெருப்பு கிரகமான செவ்வாயும் பெண்மையின் காரகராகச் சுக்கிரனும் கூறப்பட்டுள்ளது. புதிய மணமகனும் புதிய மணமகளும் சேர்ந்திருக்கும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சியைப் போன்றே இந்த வருடம் செவ்வாய் கிழமையில் சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் சுக்கிர சேர்க்கையில் பொங்கல் திருவிழா அமைந்திருக்கிறது. இந்தச் செவ்வாய் சுக்கிர சேர்க்கை இந்த ஆண்டு திருமணத்திற்காக காத்திருக்கும் காளையருக்கும் கன்னியருக்கும் இந்த ஆண்டு திருமணம் நடந்துவிடும் எனும் செய்தியை கூறும் விதமாக அமைந்திருக்கிறது. பொங்கல் பொங்கும்போது இடும் குலவை சத்தம் என்னும் இசைக்கும் காரகன் சுக்கிரனே.
மாட்டுப்பொங்கல்
பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல். வயலும், வயல் சார்ந்த இடமுமான, மருத நிலத்துக்குரிய தெய்வம் இந்திரன். நிலத்தை உழுவதற்குப் பயன்படுவது மாடுகள். இவர்களை நன்றியுடன் நினைத்து 3 நாட்கள் மக்கள் விழா எடுத்து மகிழ்கின்றனர். உழவுத் தொழில் சிறப்பாக நடைபெற மனிதனுக்கு உதவியாக இருப்பவை மாடுகள். அந்த வாயில்லா ஜீவன்களுக்கு இந்த நாளில் நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதோடு, பசுவையும், அதன் கன்றுவையும் நீராட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றின் கொம்பிலும், கழுத்திலும் சலங்கை, மாலைகள் அணிவித்து அலங்கரித்து பூஜை செய்வார்கள். சுவைமிகு பொங்கலும் உண்ணக் கொடுப்பார்கள்.
பசுவை ஸ்ரீமகாலக்ஷமியின் அம்சம் என்போம். ஆக பால் தரும் பசுவும் சுக்கிரனின் அம்சமே. அனைத்துக் கால்நடைகளும் சந்திர அம்சமாகும். நீர் மற்றும் மழையின் காரகர்களும் சந்திர பகவானும் சுக்கிரபகவானுமே ஆவர். விவசாயத்தின் காரகனும் சந்திரனும் சுக்கிரனுமே! பண்டைய தமிழர்கள் மாட்டை செல்வமாக கருதினார்கள். மாடு என்றால் செல்வம் என்ற பொருளும் உண்டு. இதனால்தான் அவர்கள் மாட்டை ‘ஆநிரை’ என்றும் அழைத்தார்கள். செல்வத்தின் காரகனும் மஹாலக்ஷ்மியின் சகோதரர் மற்றும் ராஜ கிரகமான சந்திரனும் மஹாலக்ஷ்மியை அதிதேவதையாகக் கொண்ட சுக்கிரனுமே ஆகும்.
கனுப்பொங்கல்
பிராமண சம்பிரதாயங்களில் மாட்டுப்பொங்கன்று காலை கனுப்பொங்கல் எனச் சகோதரிகளால் சகோதரர்கள் நலம் சிறக்க கொண்டாடப்படுகிறது. ”பொங்கலன்று அனைவர் இல்லங்களிலும் செய்யப்படும் சிறப்பு உணவு வகை சர்க்கரைப் பொங்கல். அடுத்ததாக கணுக்கூட்டு. காணும் பொங்கல் (அ) கனுப்பொங்கல் அன்று செய்வதால் கணுக்கூட்டு என்ற பெயர் வந்தது. அப்போது பெண்கள், உடன்பிறந்த சகோதரர்கள் நலம் வேண்டி, காக்கைக்கு கனுப்பிடி வைப்பார்கள். சாதத்தில் மஞ்சள்பொடி சேர்த்து மஞ்சள் நிறத்திலும், சாதத்துடன் சுண்ணாம்பு – மஞ்சள்பொடி சேர்த்து சிவப்பு நிறத்திலும், வெறும் சாதமாக வெள்ளை நிறத்திலும் சிறிய உருண்டைகள் செய்வார்கள். இந்த உருண்டைகள் மற்றும் முதல் நாள் செய்த சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை மஞ்சள் இலையில் போட்டு, குளக்கரை அல்லது மொட்டை மாடியில் வைப்பார்கள். பிறகு சாமி கும்பிட்டு, பெரியோர்களிடம் ஆசி பெற்று தேங்காய் சாதம், புளியோதரை, தயிர்ச்சாதம் போன்ற கலந்த சாதத்துடன் கணுக்கூட்டை தொட்டுச் சாப்பிடுவது வழக்கம். ஜோதிடத்தில் சகோதர காரகர் செவ்வாய் பகவான்.
ஏறு தழுவல் எனப்படு ஜல்லிக்கட்டு
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன. வீரம் மற்றும் விளையாட்டின் காரகர் செவ்வாய் பகவான் ஆவார். பல தடங்கல்களுக்கு பின் மீண்டும் ஜல்லிக்கட்டு கம்பீரமாக நடைபெறுவதைக் குறிக்கும் வண்ணம் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா செவ்வாய் கிழமையில் அமைந்திருக்கிறது.
வீர் விளையாட்டிலும் சில விபரீதங்கள் நிகழத்தானே செய்கிறது? காளை மாட்டினால் ஏற்படும் விபத்திற்கு காரகர் ராகு பகவான் ஆவார். திருவிழா சமயங்களில் ஏற்படும் கொத்து கொத்தான மரணங்களுக்குக் காரகர் கேது பகவான் ஆவார். அதே நேரத்தில் நாம் கவனத்தோடு செயல்படும்போது மருத்துவத்தின் காரகர்களாகவும் ராகு-கேதுக்களே பொறுப்பேற்கிறார்கள். எனவே இந்தப் பொங்கல் திருவிழாவில் எல்லாவற்றையும் அளவோடு செய்து மகிழ்வோடு கொண்டாடினால் விபத்துக்களோ விபரீதங்களோ நேராது. அமிர்தம் கூட அளவுக்கு மிஞ்சினால் விஷம் தானே!
காணும் பொங்கல்
பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாள் காணும் பொங்கல். இது உறவினர்களையும், நண்பர்களையும் காணும் நாளாகும். இந்த நாளில் சுற்றுலா செல்வது விருப்பமானதாக மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள வர்கள் கடற்கரை அல்லது ஆற்றங்கரைகளுக்கோ, அந்த வாய்ப்பு இல்லாதவர்கள் வயல்வெளிகளுக்கோ குடும்பத்தோடு சென்று மகிழ்கிறார்கள். காணும் பொங்கலுக்கு ‘கன்னிப் பொங்கல்’, ‘கன்றுப் பொங்கல்’, ‘காளையர் பொங்கல்’ என்ற வேறு பெயர்களும் உண்டு. நவக்கிரகங்களில் பெண்களை குறிப்பவர் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆவர். சில ஊர்களில் ‘மாரியம்மன் பொங்கல்’ என்றும் இதை அழைக்கிறார்கள். தங்களைத் தேடி வரும் எளியவர்களுக்குப் பொருட்களை தானமாக வழங்கி, அதனால் அவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் கண்டு நாமும் மகிழ்வதே காணும் பொங்கலின் நோக்கம். இந்த நாளில் எந்தவொரு ஏழை உதவிக் கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்லாமல் உதவ வேண்டும்.
ஆகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினால் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைவதோடு அனைத்துக் கிரகங்களின் ஆசியும் கிடைக்கும்படியாக அமைந்துள்ளது. என்ன நேயர்களே! இந்தப் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழலாமல்லவா?
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510
No comments:
Post a Comment