Tuesday, January 15, 2019

தேவை மனநல ஆலோசனை மையங்கள்!

By அ. ஆனந்தன் | Published on : 15th January 2019 01:36 AM |

இன்றைய இந்திய இளைஞர்கள், வேகமாக ஆதிக்கம் பெற்று வரும் மேலைநாட்டு நாகரிக மோகத்தில் மூழ்கியுள்ளதால் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

ராகிங், ஈவ் டீசிங்கில் ஈடுபடுவது, மது-போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, இணையதள-செல்லிடப்பேசி போன்ற தகவல் தொடர்புச் சாதனங்களின் அறிவியல் வளர்ச்சியைத் தவறாகக் கையாளுதல், பெருகிவரும் பாலியல் குற்றங்கள், திரைப்பட காட்சிகளைப் பார்த்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பலவிதமான மோசடிகளில் ஈடுபடுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் எனப் பிரச்னைகள் அதிகரித்துள்ளன.

மேற்கண்ட நிலை மாற, அனைத்துக் கல்வி நிலையங்களிலும், கல்லூரி விடுதிகளிலும், இளைஞர்கள் தங்கும் ஓய்வு விடுதிகளிலும் மனநல ஆலோசனை மையங்கள் தொடங்குவது அவசியம். தகுதியும் தேர்ச்சியும் பெற்ற மனநல மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள், சமூகப் பணியாளர்கள், தன்னார்வ ஆர்வலர்களின் வழிகாட்டுதலுடன் இந்த மையங்கள் செயல்படவேண்டும். 

குறிப்பாக, மாணவ, மாணவியருக்கு பாலியல் உணர்வுகள் துளிர்விடும் பருவத்தில், உடல், மன ரீதியாக ஏற்படும் மாற்றங்களினால் சரியான வழிகாட்டுதல் இன்றி திசை மாறிச் செல்ல தூண்டல்கள் பல ரூபங்களில் இன்று அதிகரித்துள்ளன.

பெற்றோரைச் சார்ந்திருக்கின்ற நிலையிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச் செயல்பட நினைக்கும் காலகட்டம் இளம் வயது. சக நண்பர்களோடு சேர்ந்து கொண்டு தவறான பாதையை சில இளம் வயதினர் நாடிச் செல்வதுண்டு. ஆர்வக் கோளாறால் போதைப் பொருள்களுக்கு அடிமையாதல், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுதல், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படுதல் ஆகிய விளைவுகளைச் சந்திக்கின்றனர். எனவே, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புக்குரிய மாணவர்களின் வயது அளவிலேயே மனநல மையங்கள் செயல்படுவது மிகவும் சிறந்தது. 

சட்டத்தின் கெடுபிடிகள் மூலம் ஈவ் டீசிங் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். இளம் வயதினரைக் கைது செய்வது, போலீஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணை என்பது மற்ற இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக அமையுமே தவிர, ஆரோக்கியமான வழிகாட்டல் அல்ல. பிரச்னைக்குள்ளாகும் மாணவர்களை வகுப்பறையில் ஆசிரியர்கள் கண்டிப்பது, அடிப்பது தவறான அணுகுமுறையாகும். அத்தகைய மாணவர்களைப் பரிவுடன் தனியே அழைத்துப் பேசி மனநல மையத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். உரிய ஆலோசனையை உளவியல் ஆலோசகர்கள் வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர் தன்னுடைய நிலைமையை உணரவும், தான் செய்தது தவறு எனப் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

உடற்பயிற்சி, விளையாட்டு, என்.சி.சி., என்.எஸ்.எஸ். போன்றவற்றில் ஈடுபடுத்துவது போன்று மாணவர்களின் மன நிலையைச் சீர்படுத்த, நல்ல குறிக்கோள்களை அவர்கள் அமைத்துக் கொள்ள பள்ளிகள் உதவ வேண்டும். அதாவது, மன நலம் தொடர்பான பயிற்சி வகுப்புகள், யோகா, தியானம், பிரார்த்தனை, தன்னம்பிக்கை வளர உதவும் பயிற்சிகள் உள்ளிட்டவை அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்களின் குணக் கோளாறுகளையும் நடத்தைக் கோளாறுகளையும் தொடக்கத்திலேயே சரி செய்ய முடியும். உடல் நலத்தையும் மன நலத்தையும் காத்து நல்ல ஒழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கலாம்.

பெற்றோரை கல்வி நிலையங்களின் நிர்வாகிகள் அடிக்கடி அழைத்துப் பேசி ஆலோசனை வழங்கி, குறைகளை நிவர்த்தி செய்யும்போது குடும்பச் சூழல் அமைதியாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைகிறது. இதைத் தொடர்ந்து பெற்றோர், உறவினரிடம் அன்பாகவும் பாசமாகவும் குழந்தைகள் நடந்து கொள்வர்.

பிரச்னை ஏற்படும்போது மாந்த்ரீகம், பில்லி சூனியம், செய்வினைஎன தகுதியற்றவர்களை நாடிச் சென்று பெரும் தொகையை இழந்து ஏமாற்றம் அடைகின்றனர். இறுதியில் பாதிப்பு தீவிரமாக தற்கொலை செய்துகொள்வோரும் உண்டு.

மனநல மருத்துவரையோ அல்லது உளவியல் ஆலோசகரையோ நாடிச் சென்று முறையான ஆலோசனை பெற, சிகிச்சை பெறப் பலர் தயக்கம் காட்டும் நிலை மாற வேண்டும். மனநல பாதிப்பு ஏற்படும்போது, ஆலோசனைகள், தொடர் சிகிச்சை, குடும்ப அங்கத்தினர்களின் ஒத்துழைப்பு மூலம் முழுமையாகக் குணம் பெறலாம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் சிறிய அளவில் மனநல காப்பகங்களை அமைப்பது அவசியம். பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மனநலம், மன நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மனநல ஆலோசனைமையங்கள் மூலம் நடத்தலாம். இதன் மூலம் மூட நம்பிக்கைகளைப் போக்க முடியும்.

திரைப்படங்களில் பெண்கள் கேலி செய்யப்படுவதையும் ராக்கிங் கட்சிகளையும் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளையும் தடை செய்ய வேண்டும். குறிப்பாக, நாகரிக வளர்ச்சிக்கேற்ப கௌரவமான ஆடைகளை கல்லூரி மாணவிகள் அணிவது நல்லது.
தற்கொலை மரணங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் இறங்குபவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவது குறித்து, சமூகநல அக்கறையுடன் ஊடகங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற செய்திகள் மற்றவர்களுக்கு மன ரீதியான தூண்டுகோலாக அமைகிறது. 

பல துறைகளில் புதுமைகளைப் புகுத்தி வரும் தமிழக அரசு, பள்ளிகளில் மன நல ஆலோசனை மையங்களை உடனடியாகத் தொடங்குவது தற்போதைய அவசரக் கடமையாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024