Tuesday, January 15, 2019

பதிவிறக்கம் செய்த தீர்ப்பு நகலை ஏற்க வேண்டும் * அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : ஜன 15, 2019 03:20


சென்னை, பதிவிறக்கம் செய்யப்பட்டு, வழக்கறிஞரால் சான்றளிக்கப்பட்ட, நீதிமன்ற தீர்ப்புகளை அதிகாரிகள் ஏற்று, நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து, அனைத்து துறைகள், அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பும்படி, தலைமை செயலருக்கும் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், குட்டப்பாளையம் கிராமத்தில், ௩.௨௫ ஏக்கர் விவசாய நிலத்துக்கு, மின் இணைப்பு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில், குணசேகர செந்தில் என்பவர், மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வாசுதேவன் ஆஜரானார்.மனுவை விசாரித்த, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:மீட்டர் பெட்டி வரை, மின் இணைப்பு வழங்குவதை, வாரியம் உறுதி செய்ய வேண்டும். அதன்பின், நிபந்தனைகளின்படி, மின்சாரத்தை, மனுதாரர் பயன்படுத்த வேண்டும். விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவுகள் தாமதமாக வழங்கப்படுவதாக, மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.வழக்கறிஞர்களிடம் இருந்து பொதுவாக, சான்றளிக்கப்பட்ட உத்தரவின் நகல், தீர்ப்புகள் வருவதற்கு நீண்ட தாமதம் ஏற்படுவதாக, புகார்கள் கூறப்படுகின்றன. 

நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள், நிலுவையில் உள்ளன. உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வழக்குகள் அனைத்திலும், விரைந்து நகல்கள் வழங்குவது, நடைமுறையில் சிரமாமாக உள்ளது.உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட உடன், அசல் ஆவணங்களில், நீதிபதிகளின் கையெழுத்து இடப்படும். அந்த உத்தரவுகள், உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அவ்வாறு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டால், அவை, பொது தளத்தில் கிடைத்து விடும்.எனவே, தீர்ப்புகள், உத்தரவுகளில் நீதிபதிகள் கையெழுத்திட்ட பின், தாமதம் செய்யாமல், விரைவில், அவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த உத்தரவின் நகலை, உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, வழக்கில் சம்பந்தப்பட்டோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்யப்பட்ட உத்தரவின் நகலில், வழக்கு தொடுத்த வழக்கறிஞர், சான்றொப்பம் செய்ய வேண்டும். வழக்கறிஞரின் பெயர், பார் கவுன்சிலில் பதிவு எண், முத்திரை உடன், சான்றளிக்கப்பட்ட நகல் இருக்க வேண்டும். 

இந்த சான்றளிக்கப்பட்ட நகலை, வழக்கில் சம்பந்தப்பட்டோருக்கு தெரியப்படுத்தலாம்.இப்படி சான்றளிக்கப்பட்ட உத்தரவுகளை, அதிகாரிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த உத்தரவை, உயர் நீதிமன்ற இணையதளத்தின் வழியாக, சோதித்து பார்க்க வேண்டும். பின், உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த உத்தரவு நகல்களை, அதிகாரிகள் நிராகரிக்கக் கூடாது. அவற்றை ஏற்று, உத்தரவுப்படி நடக்க வேண்டும். இதில் மீறல்கள் இருந்தால், பாதிக்கப்படும் நபர்கள், நீதிமன்றத்தை அணுகலாம். எனவே, தலைமைச் செயலருக்கு, இந்த உதத்தரவு பற்றி தெரியப்படுத்த வேண்டும்.பதிவிறக்கம் செய்த, சான்றளிக்கப்பட்ட உத்தரவின் நகல்களுக்கு, முறையாக பதில் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், அனைத்து துறைகளுக்கும், அதிகாரிகளுக்கும், நான்கு வாரங்களுக்குள், தலைமைச் செயலர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இதே நடைமுறையை பின்பற்றும்படி, கீழமை நீதிமன்றங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலும், சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.உத்தரவை அமல்படுத்தியது குறித்து, பிப்., ௧௪ல், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.***

No comments:

Post a Comment

NEWS TODAY 29.09.2024