Tuesday, January 15, 2019

'ஓசி மட்டன்' கேட்டு அடாவடி முதியவரை தாக்கிய போலீசார்

Added : ஜன 15, 2019 01:28

சேலம், சேலத்தில், 'ஓசி'யில் ஆட்டுக்கறி கேட்டு, முதியவரை தாக்கிய, இரண்டு போலீஸ் அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சேலம், பனமரத்துப்பட்டி அடுத்த கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் மூக்குத்தி, 75. இவர், அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே, புதன், ஞாயிறு என, இரண்டு நாட்கள், ஆட்டுக்கறி வியாபாரம் செய்து வருகிறார். உதவியாக, மனைவி பழனியம்மாள், 68, உள்ளார்.அன்னதானப்பட்டி போலீசார் சிலர், முதியவரிடம், அடிக்கடி ஓசியில் இறைச்சி வாங்கி செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, எஸ்.ஐ., பாலசுப்ரமணி, 55, சிறப்பு, எஸ்.ஐ., சிவபெருமாள், 45, ஆகியோர், ஜீப்பில் கறிக்கடைக்கு சென்றுள்ளனர்.முதியவரிடம், 2 கிலோ ஆட்டிறைச்சி தரும்படி சிவபெருமாள் கேட்டுள்ளார். 

முதியவர், 'கடந்த வாரம், 2 கிலோ கறி, ஓசியில் கொடுத்தாகி விட்டது. இம்முறை தர முடியாது' என, மறுத்துள்ளார். இதில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த, எஸ்.ஐ., பாலசுப்ரமணி, முதியவரை தாக்கி, ஜீப்பில் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். அங்கு சக போலீசார் சேர்ந்து, முதியவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கு ஓடி வந்த பழனியம்மாளை, மிரட்டி வெளியேற்றினர்.முதியவரின் மகன் விஜயகுமார், 35, ஸ்டேஷனுக்கு சென்று, நடந்த சம்பவத்தை கேட்டபோது, அவரையும் தாக்கியுள்ளனர். பின், ரேஷன் கார்டை எடுத்து வரச் சொல்லி தந்தை, மகன் இருவரிடமும் வெள்ளைத் தாளில் கையெழுத்து பெற்று, 9:30 மணிக்கு, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.போலீசார் தாக்கியதில், பலத்த காயமடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பரிசோதனையில், விஜயகுமாருக்கு காதில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, கேட்கும் திறன் இழந்து விட்டது தெரிந்தது.இதற்கிடையே, 'வாட்ஸ் ஆப்'பில் பதிவான, 'கறிக்கடை வாக்குவாதம்' வேகமாக பரவியது. நிலைமையை சமாளிக்க, எஸ்.ஐ., பாலசுப்ரமணி, கறிக்கடைக்கு சென்று, பகிரங்கமாக கேட்ட மன்னிப்பும், 'வாட்ஸ் ஆப்'பில் பரவியது. இதன் எதிரொலியாக, இருவரையும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி, கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக, உதவி கமிஷனர் ஈஸ்வரன் நடத்திய முதல்கட்ட விசாரணையில், போலீசார், அதிகார துஷ்பிரயோகம் செய்தது தெரிந்தது. தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024