ஆவின் பால் விற்பனை கத்தார் நாட்டில் துவக்கம்
Added : பிப் 03, 2019 03:11
கத்தார் நாட்டில், ஆவின் விற்பனையை, பால் வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும், ஆவின் பாலுக்கு, வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திரவ உணவை பதப்படுத்தும் முறையில், பாலை கொதிக்க வைத்து பதப்படுத்தி, ஒரு லிட்டர் அளவில், 'பேக்' செய்து, வெளிநாடுகளுக்கு, ஆவின் நிறுவனம், சப்ளை செய்து வருகிறது.இவ்வாறு அனுப்பப்படும் பால், குறைந்தது ஆறு மாதங்கள் வரை கெடாது. இந்தப் பாலை, குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமில்லை.
ஆவின் பால், வெளிநாடுகளில் உள்ள, சூப்பர் மார்க்கெட் மற்றும் பிரபல கடைகளில், விற்பனை செய்யப்படுகிறது.வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், ஆவின் பாலை, ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். ஏற்கனவே, சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில், ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில், ஆவின் பால் விற்பனை துவக்க நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விற்பனையை துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், ''கத்தார் நாட்டு மக்கள், சுவையான பாலை அருந்த, மன்னர் அனுமதி பெற்று, ஆவின் பால் விற்பனையை துவக்கி உள்ளோம். ஆவின் பால் சுவையானது. இதை அருந்துபவர்கள், வேறு பாலை அருந்த மாட்டார்கள். அந்த அளவிற்கு, ஆவின் பால் தரமானது,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், கத்தார் நாட்டிற்கான, இந்திய துாதர் குமரன், துணைத் துாதர் பகத், தமிழக பால்வளத் துறை முதன்மை செயலர் கோபால், ஆவின் வெளிநாடு விற்பனை பொது மேலாளர், புகழேந்தி பங்கேற்றனர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment