Thursday, July 4, 2019

பிழைக்குமா ?
பி.எஸ்.என்.எல்., நிறுவனம்   4.7.2019  dinamalar


புதுடில்லி : கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும், பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்களை மீட்கும் வகையில், மத்திய அரசு, 74 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவிக்கான ஏற்பாடுகளுக்காக திட்டமிட்டு வருகிறது.




இத்திட்டத்தில், விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு, 5 சதவீதம் அளவுக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்குவது, 4ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் மூலதன செலவினங்களுக்காக நிதி வழங்குதல் என, பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில், அரசுக்கு, மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல்., முதலாவது இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டின் முடிவில், இந்நிறுவனத்தின் நஷ்டம், 13 ஆயிரத்து 804 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து, 398 கோடி

ரூபாய் இழப்புடன், எம்.டி.என்.எல்., நிறுவனம், மூன்றாவது இடத்தில் உள்ளது. அரசுக்கு அதிக இழப்பை ஏற்படுத்துவதில், இரண்டாவது இடத்தில், ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. இந்நிலையில் இந்த இரு தொலைதொடர்பு நிறுவனங்களையும் மீட்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

இது குறித்து, தொலைதொடர்பு துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., நிறுவனங்களை மீட்டெடுக்கும் திட்டத்தின்படி, 4ஜி ஸ்பெக்ட்ரமுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாயும், விருப்ப ஓய்வூதிய திட்டம் மற்றும் முன்கூட்டிய ஓய்வூதிய சலுகைகள் ஆகியவற்றுக்காக, 40 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

இவைதவிர, இந்த இரண்டு பொதுத் துறை நிறுவனங்களின் மூலதனச் செலவுக்கு, 13 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும். மேலும், நிறுவன ஊழியர்களின் ஓய்வுக்கான வயதை, 60லிருந்து, 58 ஆக குறைத்து, அவர்களுக்கு நியாயமான ஓய்வூதிய சலுகையை வழங்கவும் திட்டமிடப்படுகிறது. இதன் மூலம், நஷ்டத்தில் இயங்கி வரும் இந்நிறுவனங்களின் சுமையை, கணிசமாகக் குறைக்க முடியும் என அரசு கருதுகிறது. அடுத்து, இந்நிறுவனங்களின் சொத்துக்கள், தொலை தொடர்பு கோபுரங்கள், கைவசம் உள்ள நிலம் ஆகியவற்றின் மூலம் நிதியைத் திரட்டுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.


தொலை தொடர்பு துறையினரைப் பொறுத்த வரை, இந்த இரண்டு நிறுவனங்களை மூடுவதை விட, மீட்பு நடவடிக்கையே சிறந்த வழி என, கருதுகிறார்கள். இதற்காக, 1.2 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களில் அதிக நிதி அழுத்தத்தை வைத்துக் கொண்டு, பங்குவிலக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்குவதும் கடினம். தற்போதுள்ள சிக்கல்களிலிருந்து மீள, இந்த இரு நிறுவனங்களும் இணைந்து, ஒரு கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்துவதும் ஒரு வாய்ப்பாக அமையும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024