Thursday, July 4, 2019

"பல்கலைக்கழக முறைகேட்டில் தொடர்புடையவர்கள் அரசியல் செல்வாக்கால் தப்ப முயற்சி' By மதுரை | Published on : 04th July 2019 07:37 AM

  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற முறைகேட்டில் தொடர்புடைய 3 பேரும் அரசியல் பின்புலத்தால் தப்ப முயற்சிப்பதாக தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்புக்குழு புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்புக்குழு விடுத்துள்ள அறிக்கை விவரம்: மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் கடந்த 2014 முதல் 2017 வரை நடந்துள்ள முறைகேடு வெளியே வந்துள்ளது.

500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் மதிப்பெண் பட்டியல்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மாணவர்கள் பட்டப்படிப்பில் சேராமலேயே அவர்கள் படித்தார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் எல்லாத் தகவல்களும் திருத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடைய முகவரிகள், புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவை அவர்களுடைய விண்ணப்பங்களில் இல்லை.

மேலும் மாணவர்கள் யாரும் பதிவுக் கட்டணம் செலுத்தவில்லை என்று வங்கிகளும் தெரிவித்துள்ளன. கேரளத்தில் உள்ள சில பல்கலைக்கழக மையங்கள் மூலமாக இந்த ஊழல் நடத்தப்பட்டு இருந்தாலும், இவை அனைத்திற்கும் மூல காரணமாக கூடுதல் தேர்வாணையரை லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிடுகிறது.

இந்த முறைகேட்டில் ஏறக்குறைய ரூ.50 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூடுதல் தேர்வாணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு கோரியிருந்தது.

அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை நடத்த பல்கலைக்கழக ஆட்சிக்குழு இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்தது. ஆனால் அரசியல் தலையீட்டால் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கவிருக்கிறது. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் அரசியல் பின்புலத்தால் பதவிகளில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்படாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல வேலைகளை செய்து வருகின்றனர்.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேர் மீதும் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024