Monday, July 8, 2019

``எங்களை வழிநடத்த அவள் இல்லையே!'' - கண்ணீர் வடிக்கும் மருத்துவர் ரமேஷ்
 
எம்.புண்ணியமூர்த்திகே.அருண்

எனக்கு காலில் பிரச்னை. என்னால் அந்தச் சரிவில் இறங்க முடியாது. என் மகளுக்கும் இறங்கத் தெரியாது. கொஞ்சமும் யோசிக்காமல் திடுதிடுவென அந்தச் சரிவில் இறங்கிய என் மனைவி, அந்தப் பறவையைப் பக்குவமாய் எடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்து பராமரித்தாள்.
மருத்துவர் ரமேஷ் ( கே.அருண் )


டாஸ்மாக்கால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தமிழகம் முழுக்க எத்தனையோ கண்ணீர் சாட்சியங்கள் இருக்கின்றன. சமீபத்திய சாட்சியம் மருத்துவர் ரமேஷ். கோவையை அடுத்த ஆனைக்கட்டி பகுதியில் மது அருந்திய இளைஞர்கள் இருவர் கண்மூடித்தனமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் தன் மனைவியை பறிகொடுத்துள்ளார், மருத்துவர் ரமேஷ். தன் மகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவந்த ரமேஷின் மனைவி சம்பவ இடத்திலேயே மரணத்தைத் தழுவ, மகளுக்கும் பலத்த அடி... அந்த ரணமான சூழலில் தன் மனைவியின் சடலத்தோடு, விபத்துக்குக் காரணமான டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி மருத்துவர் ரமேஷ் நடத்திய போராட்டம் தீராத் துயரமாக மக்கள் மனதில் படிந்திருக்கிறது. ஓரளவுக்கு இயல்புநிலைக்குத் திரும்பிய மருத்துவர் ரமேஷை அவரது வீட்டில் சந்தித்தோம்....


``யாராலும் எளிதில் கடந்துவிட முடியாத வலி... உங்கள் மனைவி இல்லாத நாள்களை எப்படிக் கடக்கிறீர்கள்?”


மருத்துவர் ரமேஷ்கே.அருண்


``நான் டாக்டருக்குப் படிச்சு முடிச்சதும் மலைவாழ் மக்களுக்குத்தான் வேலை செய்யணும்’னு முடிவெடுத்துட்டேன். அதனாலதான் கோயம்புத்தூர் சின்ன தடாகம் பகுதியில் கிளினிக் ஆரம்பிச்சேன். என்னுடைய கிளினிக்குக்கு செவிலியரா வந்தவங்கதான் ஷோபனா. கேரளாவில் சபரி மலைக்குப் பக்கம் அவங்களுக்குச் சொந்த ஊர். ஒருகட்டத்தில், இருவருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சுப் போக... காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டோம். ஆர்ப்பாட்டமில்லாத அழகான வாழ்க்கை. அதையெல்லாம் நொடிப்பொழுதில் விவரிச்சிட முடியுமா என்ன? எங்கள் அன்பின் அடையாளமாய் ஒரே பொண்ணு, பேரு.. சாந்தலா!

என் பொண்ணு ஒரு போட்டோகிராபர். கடந்த பல ஆண்டுகளாக இந்தச் சுற்றுவட்டாரப் பகுதியிலிருக்கும் தாவரங்களையும் செடி கொடிகளையும் அலைஞ்சு, திரிஞ்சு போட்டோ எடுக்குறதும், ரசிக்கிறதும், அதைப் பற்றி விவாதிக்கிறதும்தான் எங்க மூணு பேரோட வேலையே. எங்க பொண்ணுகூடவே நானும் என் மனைவியும் டிராவல் பண்ணோம். ஐந்தாம் வகுப்பிலிருந்து எங்க பொண்ணு உயர் ரக கேமராக்களை ஹேண்டில் பண்றா. நூற்றுக்கணக்கான தாவரங்களையும் பூச்சிகளையும் ஆயிரக்கணக்கான படங்கள் எடுத்து வெச்சுருக்கா. எனக்குத் தாவரங்களைப் படமாகத்தான் தெரியும். உயிருள்ளதா தெரியாது.


`அவர் புதைக்கப்படவில்லை; டாஸ்மாக்குக்கு எதிராக விதைக்கப்பட்டுள்ளார்” - தீரா சோகத்திலும் மருத்துவர் ரமேஷ் எடுத்த முடிவு



ஆனா, என் மனைவிக்கு எல்லாம் அத்துப்படி. அவள் வளர்ந்ததே வனப்பகுதியிலதான். என் மகளையும் என்னையும் எல்லா இடங்களுக்கும் அழைச்சுட்டுப் போய் ஒவ்வொரு தாவரத்தைப் பற்றியும் மலர்ந்த முகத்தோடு சொல்லிக்கொடுத்து வழி நடத்திக்கொண்டிருந்தாள். அவள் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எனக்கும் என்னுடைய பொண்ணுக்கும் மிகப்பெரிய இழப்பு'’ என்றவர், சட்டனெ தனது நினைவிலிருந்து ஒரு சம்பவத்தை உருவினார்...

ஒருமுறை ஈஷாவுக்கு அருகில் இருக்கும் ஓர் ஏரியில் பூச்சிகளைப் படமெடுத்துவிட்டு நாங்கள் திரும்பிவந்தபோது... ஒரு மரத்தின் அடியில் சரக்... சரக்கென்று ஏதோ ஒரு சத்தம். `வெய்ட்’னு சொல்லிவிட்டு ஓடினாள் ஷோபனா. நாங்களும் அவள் பின்னே ஓடினோம்... அங்கே ஒரு மூங்கில் கூடைக்குள்ள ஒரு குயில் சிக்கிக்கொண்டு தவித்தது. `அதை லாகவமா எடுக்கணும். இல்லேன்னா... குயிலின் உயிருக்கு ஆபத்தாகிடும்' என்றவள், பத்திரமாக அந்தக் குயிலை மீட்டுப் பறக்கவிட்டாள். பறந்துபோன குயில் மீண்டும் ஒரு சரிவில் முள்ளுக்குள் போய்ச் சிக்கிக்கொண்டது.


தனது மனைவி ஷோபனாவுடன் மருத்துவர் ரமேஷ்.

எனக்குக் காலில் பிரச்னை. என்னால் அந்தச் சரிவில் இறங்க முடியாது. என் மகளுக்கும் இறங்கத் தெரியாது. கொஞ்சமும் யோசிக்காமல் திடுதிடுவென அந்தச் சரிவில் இறங்கிய என் மனைவி அந்தப் பறவையைப் பக்குவமாய் எடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்து பராமரித்தாள். அதனுடைய காயங்கள் சரியான பிறகு பறக்கவிட்டாள். இப்போ அடிபட்ட பறவையைக் காப்பாற்றுவதற்கும், எங்களை வழிநடத்திச் செல்வதற்கும் அவள் இல்லை... அவள் இல்லை.” தன் மனைவியின் நினைவுகளில் மூழ்கிய ரமேஷின் குரலில் துயரம் பெருக ஆரம்பிக்கிறது.

``அன்று என்ன நடந்தது?"

எம் பொண்ணு ஆனைக்கட்டியில உள்ள ஒரு பள்ளியில 11-ம் வகுப்பு படிக்கிறா. சேர்ந்து ஒருவாரம்தான் ஆச்சு. எங்க வீட்டிலிருந்து அந்தப் பள்ளிக்கு 20 கிலோ மீட்டர். நேரத்துக்குப் பேருந்து வசதி கிடையாது. ஆகையால், நாங்கதான் கொண்டுபோய் விட்டுவிட்டு, பிறகு அழைச்சுட்டு வருவோம். அன்னைக்கு காலையில நானும் என் மனைவியும் காரில்போய் விட்டுட்டு வந்தோம். மாலை, `நான் போய்க் கூப்பிட்டுட்டு வர்றேன்’னு என் மனைவி ஸ்கூட்டரில் போனாள். `4.30-க்கு ஆக்சிடென்ட்'னு எனக்கு போன் வந்தது. `பின்னால இருக்கவங்களுக்குக் காலில் பயங்கரமா அடிபட்டிருக்கு’னு சொல்றாங்க... ஆனா, ஓட்டினவங்கள பற்றிச் சொல்லவே இல்லை. ஏதோ... அசம்பாவிதம் நடந்துபோச்சுனு என் மனசுல ஓடுது. என்னுடைய நர்ஸ் ஒருவரை அழைச்சுக்கிட்டு நான் அவசரமா ஓடுறேன்... வழியில் போகும்போதே போன் வந்துகிட்டே இருக்கு... `உங்க பொண்ணை ஒரு கார்ல ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வெச்சிருக்கோம்... அந்த கார் ஹெட் லைட்டை ஆன் பண்ணிட்டு வருவாங்க. வழியில பாருங்க’னு சொல்றாங்க. பாப்பா வந்த காரை வழிமறிச்சு ஏறி, நான் பாப்பாவைப் பார்த்துட்டேன். அவளுக்கு இடது தொடை எலும்பு உடைஞ்சிருக்கு... வலி தாங்க முடியாமல் கத்துறா... எனக்கும் எதுவும் புரியலை. அவளை ஹாஸ்பிட்டல்ல கொண்போய்ச் சேர்த்துட்டு.... `என் மனைவிக்கு என்னாச்சுனு தெரியலை. பாப்பாவைப் பார்த்துக்கோங்க’னு டாக்டர்கிட்ட சொல்லிட்டு, மீண்டும் அங்க ஓடுனேன்" என்றவர் சற்று இடைவெளிவிட்டுப் பேசத் தொடங்கினார்.


மனைவியின் சடலத்தோடு டாஸ்மாக்கிற்கு எதிராக மருத்துவர் ரமெஷ் போராடியபோது

``அஞ்சே கால் மணி இருக்கும். அங்கே நான் எதிர்பார்த்தபடி, ரோட்டோட நடுவில் என் மனைவி கிடக்குறா... அவ கிடக்குற கோலத்தைப் பார்த்ததும் உயிர் இல்லைனு எனக்குத் தெரிஞ்சிருச்சு. கிட்டப்போய் உட்கார்ந்து கையைப் பிடிச்சுப் பார்த்தேன். கழுத்த ஓரளவுக்குத்தான் திருப்ப முடியும். ஆனா, இடது பக்கமாக என் மனைவியின் கழுத்து முழுமையாகத் திரும்பியிருந்துச்சு... மேவாய்ப் பகுதி உடைஞ்சு முன்னால் தள்ளியிருந்தது. கண்கள் மூடாமல் எதையோ பார்த்துட்டு இருக்கா... விட்னஸ் மாதிரி! அதற்கு மேல் எதுவும் யோசிக்க வேண்டாம், she is gone! வேதனையை உணர்வதற்கு முன்னாலேயே அவள் உயிர் பிரிந்துவிட்டதுனுதான் நான் ஃபீல் பண்ணேன்.''

``கால் எலும்புகள் உடைந்து ரத்த வெள்ளத்தில் மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்; மனைவி சடலமாகக் கிடக்கிறார். அந்த அசாதாரண சூழலிலும், உங்களை டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடத் தூண்டியது எது?"


Also Read

`மருத்துவர் ரமேஷ் மனைவி மீது வாகனத்தில் மோதியவர்கள் எங்கே?' - கொளத்தூர் மணி கேள்வி



``என் மனைவியின் வெறித்த அந்தக் கண்களைப் பார்த்த சில நிமிஷங்களுக்குப் பிறகு, எனக்குள் நினைவுகள் படிய ஆரம்பித்தன. அந்தச் சாலையில் இரண்டரை ஆண்டுகளாகப் பயணித்ததும், 25 ஆண்டுகளாக அந்த வனத்தில் சுற்றியதும் என் நினைவில் சுழல ஆரம்பித்தன. என்னைச் சுற்றிப் பார்க்கிறேன்.... எல்லாம் எனக்குத் தெரிந்த பழங்குடியின மக்களின் முகங்கள். ஏதோ கனவு உலகத்தில் இருக்கிற மாதிரி ஃபீல் எனக்கு. கொஞ்ச நேரத்தில் போலீஸ் வர்றாங்க... அவங்களோட அதட்டல் சத்தமும், என்னை ஒரு மருத்துவனாகப் பார்த்து என்னிடம் ஆறுதல் பெற்ற மக்களின் அரற்றல் குரலும்... பூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள்ளிருந்து கேட்டால் எப்படி இருக்கும். அப்படி எனக்குக் கேட்டது. ஆனால், நான் நினைவோடத்தான் இருக்கிறேன். மீண்டும் பழைய நினைவுகள்...

ஆறு மாதங்களுக்கு முன்பு, ஒரு மழைக்காலம். அதிகாலை ஆறு மணி... நான், என் மனைவி, மகள் மூன்று பேரும். இப்போது விபத்து நடந்த அதே சாலையில்... ஆலமர மேட்டிலிருந்து ஒரு பள்ளமான பகுதியை நோக்கி வந்தோம். அது ரொம்ப அழகான பள்ளத்தாக்கு! எங்களால் நம்பவே முடியவில்லை. கருமையான அந்த தார்ச் சாலையை மழை ஈரமாக்கி மேலும் கறுப்பாக்கியிருந்தது. தூரத்தில் ஏதோ பெரிய பஞ்சுப் பொதியல் மாதிரி ஒரு காட்சி. அந்த பஞ்சுப் பொதியலுக்குக் கீழே சிவப்புக்கலர் சாயம், ஆறுபோல ஓடிக்கொண்டிருந்தது. என்னவாக இருக்குமென்று அருகில் சென்று பார்த்தோம்...

சாராயம் குடிச்சிட்டு லாரி ஓட்டிட்டு வந்த ஒருத்தர், அந்தச் சாலையைக் கடந்த ஆடுகள் மீது மோதியதால ஐம்பது, அறுபது ஆடுகள் ரத்த வெள்ளத்தில் மிதந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு காட்சியை உங்களால் பாக்கவே முடியாது. இதுபோன்று அந்தப் பகுதியில பல ஆக்ஸிடெண்டால மனிதர்களும் செத்துப்போயிருக்காங்க. காரணம் சாராயம், போதை!மருத்துவர் ரமேஷ்

ஒரு மருத்துவராக நான், பல நோயாளிகளுக்கு ட்ரீட்மென்ட் பண்ணியிருக்கேன். பாதிபேர்கிட்ட காசு இருக்காது; பாதி பேருக்கு ட்ரீட்மென்டே இருக்காது. ஆனாலும், அரவணைப்போட அவங்களுக்கு நான் வைத்தியம் செய்யணும். ஒண்ணு ரெண்டு இல்லை, டெய்லி கேன்சர் பேஷன்ட்ஸ் வருவாங்க, அவங்க கையில் காசு இருக்காது. வேதனை தாங்க முடியாம இருக்கும். கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்து.... ராஜா... எப்போ வேணும்னாலும் வாய்யா... உன் வேதனைக்கு என் ஹாஸ்பிட்டல்ல மருந்து போட்டுக்கலாம்’னு சொல்வேன். அந்த மாதிரி ஒரு சூழல்தான். கையறு நிலை. இதுபோன்ற கையறு நிலையில எப்படிச் செயல்படணும்’னு ஒரு கிராமப்புற மருத்துவனுக்கு, அதுவும் நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறவனுக்குத் தெரியும்.சின்னதம்பி (யானை) இருக்கான்ல. சின்னதம்பியோட வனப்பகுதி அது. அவனுடைய அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி எல்லோருக்கும் சொந்தமான வனப்பகுதி அது.

என் மனைவி செத்துட்டா.. அவளைக் காப்பாத்த முடியாதுனு தெரியுது. அடுத்து என்ன பண்ணணும்? என் மனைவிபோல இன்னொருத்தவங்க அந்தப் பகுதியில செத்துப் போகாம இருக்க ஒரு சொல்யூஷன் வேணும். அதுக்கு அந்த டாஸ்மாக் கடையை மூடணும்! அதுதான் ஒரே வழி. அதனாலதான், `ஐயா... தயவு செஞ்சு மூடுங்கய்யா... வாழ்க்கையைக் காப்பாத்துங்கய்யா... இப்படிச் சாகுறதுக்கு இல்லையா வாழ்க்கை... டாஸ்மாக்கை மூடிட்டுப் போங்கய்யா'னு என் மனைவியின் சடலத்தோட போராடினேன்.

சின்னதம்பி (யானை) இருக்கான்ல. சின்னதம்பியோட வனப்பகுதி அது. அவனுடைய அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி எல்லோருக்கும் சொந்தமான வனப்பகுதி அது.மருத்துவர் ரமேஷ்



மருத்துவர் ரமேஷ்கே.அருண்


அந்த டாஸ்மாக் கடை இருந்தா இன்னும் பல கொலைகள் நடக்கும். மனிதர்களுக்கு மட்டுமல்ல... மிருகங்களுக்கும் நடக்கும். சின்னதம்பி (யானை) இருக்கான்ல. சின்னதம்பியோட வனப்பகுதி அது. அவனுடைய அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி எல்லோருக்கும் சொந்தமான வனப்பகுதி அது. சாராயம் குடிச்சிட்டு அந்தப் பாட்டிலை உடைச்சு வனப்பகுதியில் குத்தி வெச்சுட்டுப் போயிடறாங்க. சின்னதம்பியும் அவனுடைய அக்கா தங்கச்சிகளும் நடந்து போகும்போது காலில் சாராயப் பாட்டில்கள் குத்தி காலெல்லாம் புண்ணாகி சீழ்பிடிச்சுப் போனதில் அப்படி நிறைய யானைங்க செத்துருக்கு. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கத்தான் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில சாராயக்கடை இருக்கக் கூடாதுனு கேரள அரசு தடை பண்ணியிருக்காங்க. நான் கையறு நிலையில் இருந்தாலும் ட்ரீட்மென்ட் இஸ் பாஸிபிள்! "


``குடிச்சிட்டு வண்டி ஓட்டுறவங்களால தினமும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நடக்கின்றன. ஆனால், அவையெல்லாம் சாதாரண விஷயமாகக் கடந்துபோகிறதே?”


``என் மனைவியே கடைசி பலியாக இருக்கட்டும்!” - மருத்துவர் ரமேஷ் உருக்கம்


``இது தொடர்ச்சியா நடந்துகிட்டே இருக்கு. ரோட்டில் யாராச்சும் செத்துட்டாங்களா? மோதினவன் தண்ணி அடிச்சுருக்கானா.... அவனை ஹாஸ்பிட்டல்ல சேர்த்து காப்பாத்தறதுக்கு மாஃபியா கும்பல் ஒருபக்கம் உட்கார்ந்திருக்கு. இதைப் பற்றிய செய்தி பத்திரிகையில் வராமல் பாத்துக்கறதுக்கு ஒரு கும்பல் உட்கார்ந்துருக்கு. ஆனால், பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்படுகிறவர்களும் கையறு நிலையிலேயே இருக்குறாங்க. நான் ஒரு மருத்துவன் என்பதால, என்னைப் பலருக்குத் தெரிந்ததால அல்லது நான் என் மனைவியின் சடலத்தோடு உட்கார்ந்த நிலையைப் பார்த்து தாங்க முடியாத வலியை உணர்ந்தால, மக்களிடம் இது பேசுபொருளா மாறியிருக்குது. இதை வெச்சாவது இந்த மதுக்கடைகளை மூடணும். இந்த டாஸ்மாக் வேணாம். இது தேவையே இல்லை".

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024