Thursday, July 4, 2019


இந்தியாவின் கண்டு பிடிப்புகளுக்கு காப்புரிமை பெற தவறி விட்டோம்'

Updated : ஜூலை 03, 2019 06:32 | Added : ஜூலை 03, 2019 06:30



சென்னை: ''இந்தியாவின் கண்டுபிடிப்புகளுக்கு, காப்புரிமை பெற தவறி விட்டோம்,'' என, விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், அறிவுசார் சொத்துரிமை குறித்த, இரண்டு நாள் பயிலரங்கம், நேற்று துவங்கியது. மருத்துவ பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் தலைமை வகித்தார். இதில், விஞ்ஞானியும், மாநில அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில், துணைத் தலைவருமான, மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:




இந்தியாவில், எத்தனையோ கண்டு பிடிப்புகளும், கலைகளும் படைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்துக்கும், காப்புரிமை பெற்று, காப்பாற்ற நாம் தவறி விட்டோம். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர், ஸ்டீவ் ஜாப்ஸ், 299 பொருட்களுக்கு காப்புரிமை பெற்றிருந்தார்.

ஆப்பிள் போன்களுக்கு பயன்படுத்தப்படும், சார்ஜர்களின் முனையில் உள்ள, 'பின்'களுக்கும், அவர் காப்புரிமை பெற்றிருந்தார். அதனால் தான், அந்த வகையான பின்களை, பிற நிறுவனங்கள் தயாரிக்க முடியவில்லை. அதுதான், அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அறிவுசார் சொத்துரிமை என்பது, புதிய படைப்புகளை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, அதை வர்த்தகப்படுத்தவும் வழிவகுக்கும். இதுபோன்ற சட்டங்களும், நடைமுறைகளும், பல நுாற்றாண்டுகளுக்கு முன் இருந்திருந்தால், உலகத்திற்கு நீதி நெறியை போதித்த திருவள்ளுவர், 1,330 குறள்களுக்கும் காப்புரிமை பெற்றிருப்பார்.

இந்தியாவின் முகவரியாக, வரும் காலங்களில், தொழில்நுட்பம் தான் இருக்கும். எனவே, தொழில்நுட்பங்களை, அடுத்த தலைமுறையிடம் சேர்க்க வேண்டுமானால், அதற்கு காப்புரிமை அவசியம் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024