Sunday, November 3, 2019

சேமிப்பு கணக்கில் முறைகேடு: ஊழியர் பணி விடுவிப்பு சரியே

Added : நவ 03, 2019 02:53

சென்னை:'சேமிப்பு கணக்குகளில் முறைகேடு செய்த, வங்கி ஊழியரை பணியில் இருந்து விடுவித்தது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின், ஈரோடு கிளையில், சுகந்தி என்பவர் பணியாற்றினார்; சேமிப்பு கணக்குகளை கையாண்டார். அப்போது, 'டாஸ்மாக்' கணக்கு உள்ளிட்ட, பல கணக்குகளில் இருந்த பணத்தை, தன் கணக்கிற்கு மாற்றி, முறைகேட்டில் ஈடுபட்டார். இதுகுறித்து, விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையின் முடிவில், சுகந்தியை பணியில் இருந்து விடுவிப்பது என, முடிவு செய்யப்பட்டது.

வங்கி நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து, மத்திய அரசின் தொழில் தீர்ப்பாயத்தில், சுகந்தி முறையிட்டார். வங்கி நிர்வாகத்தின் முடிவை, தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது.மனுத் தாக்கல்இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம், மனுத்தாக்கல் செய்தது.

மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். வங்கி சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவீந்திரன் ஆஜராகி, ''வங்கியின் நலனை பாதிக்கும் விதத்தில், சுகந்தி செயல்பட்டு உள்ளார். சேமிப்பு கணக்குகள், தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளன,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:ஊழியர்கள் பொதுவாக, நிறுவனத்தின் உள்ளேயும், வெளியேயும், ஒழுக்கமுடனும், நல்ல நடத்தையுடனும் இருக்க வேண்டும். இவ்வழக்கில், வங்கி ஊழியராக இருந்த சுகந்தி, சேமிப்பு கணக்கை தவறாக பயன்படுத்தி உள்ளார். பரிவர்த்தனைகளின் தன்மை, பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையின் அளவை, வங்கி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

குறைபாடு இல்லை

சலுகைகளுடன் கூடிய பணி விடுவிப்பு தான், தண்டனையாக வழங்கப் பட்டுள்ளது. இந்த தண்டனையை, குற்றச்சாட்டுக்கு அதிகமானது எனக்கூற முடியாது. எனவே, சுகந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை, உகந்தது தான்; வங்கி நிர்வாகம் விதித்த தண்டனையில் எந்த குறைபாடும் இல்லை. அதனால், தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024