Thursday, February 6, 2020

வங்கி கணக்கில் ரூ.3௦ கோடி வரவு: பூ வியாபாரியின் மனைவி அதிர்ச்சி

Updated : பிப் 06, 2020 00:31 | Added : பிப் 06, 2020 00:28 |

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில், பூ வியாபாரி மனைவியின் வங்கி கணக்கில், திடீரென, 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் பெங்களூரில், சையத் மாலிக் புர்ஹான் என்பவர், பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ரெஹானாவின் வங்கி கணக்கில், திடீரென, 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதிர்ந்து போன சையத் மாலிக் கூறியதாவது:என் குடும்பத்தின் மருத்துவ செலவுகளுக்கே பணம் இல்லாமல் தவிக்கும் நிலையில், டிச.,2ம் தேதி வங்கி அதிகாரிகள் சிலர், என் மனைவியின் சேமிப்புக் கணக்கில், 30கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது எப்படி என, கேள்வி எழுப்பினர். ஆதார் அட்டையுடன், வங்கியில் நடைபெறும் விசாரணைக்கு, என் மனைவியை அழைத்து வர வேண்டும் என, அதிகாரிகள் கூறினர். சில ஆவணங்களில் கையெழுத்து கேட்டனர். நான் மறுத்து விட்டேன். என் மனைவியின் வங்கி கணக்கில், 90 ரூபாய் மட்டுமே இருந்தது. இந்த அளவு பணம் எப்படி வந்தது என, எனக்கு தெரியவில்லை. இது குறித்து, போலீசார் மற்றும் வருமான வரித்துறையினரிடம் புகார் அளித்துஉள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

சையத் மாலிக் புகாரின் படி, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், 30 கோடி ரூபாய் வரவு வைத்தது யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024