Thursday, February 6, 2020

கல்வியியல் பல்கலையில் 50 ஆயிரம் பேருக்கு பட்டம்

Added : பிப் 05, 2020 21:26

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது; 50 ஆயிரம் பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு கல்வியியல் பல்கலையின் இணைப்பு பெற்ற, 700 கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., - பி.எட்., சிறப்பு கல்வி ஆகிய பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பல்கலையின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்து, பட்டங்களை வழங்கினார். இதன்படி, 48 ஆயிரத்து, 737 பி.எட்., பட்டதாரிகள்; 2,510 எம்.எட்., பட்டதாரிகள்; 45 எம்.பில்., மற்றும், 72 பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் பட்டங்களை பெற்றனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி விமலா பேசியதாவது:கடின முயற்சி, பெற்றோர், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, ஆசிரியர்களின் சிறந்த பயிற்சி ஆகியவற்றின் காரணமாக, பட்டம் பெற்றுள்ளீர்கள். இதை, ஒவ்வொரு நேரமும் மனதில் நினைத்து, பட்டதாரிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். இன்ஜினியரிங், மருத்துவம், கட்டடக் கலை, கல்வியியல் படிப்பு என, அனைத்து வகை படிப்புகளிலும், நாட்டில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக, தமிழகம் திகழ்கிறது. கல்வியியல் படிப்பை சர்வதேச அளவில், உயர்ந்த அந்தஸ்துக்கு எடுத்து செல்ல வேண்டும்.ஆசிரியர்களால் மட்டுமே, சிறந்த விஞ்ஞானி, மருத்துவர், இன்ஜினியர், அரசியல் அறிஞர், தொழில் வல்லுனர், வழக்கறிஞர் என, பன்முகங்கள் உள்ள அடுத்த தலைமுறையினரை சிறப்பாக உருவாக்க முடியும். பட்டம் பெற்ற பட்டதாரிகள், இந்த பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன், செயலர் அபூர்வா, பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம், பதிவாளர் பாலகிருஷ்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024