Flipkart: `ஆர்டர் செய்த 90 நிமிடங்களில் டெலிவரி!’ - ஃப்ளிப்கார்ட்டின் புதிய திட்டம்
ஃப்ளிப்கார்ட்
``அமேசான் நிறுவனமும் விரைவாக பொருள்களை டெலிவரி செய்து வருகிறது. ஜியோமார்ட் நிறுவனம் உள்ளூர் வாடிக்கையாளர்களை வாட்ஸ் அப் வழியாகத் தொடர்புகொண்டு வருகிறது.”
கொரோனா ஊரடங்கு தொடரும் இந்த நாள்களில் பலரும் ஆன்லைன் வழியாக பெரும்பாலான பொருள்களை ஆர்டர் செய்து வாங்கி வந்தனர். காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தும் பொருள்களையும்கூட மக்கள் முடிந்தவரை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வந்தனர். இதனால், அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோமார்ட் நிறுவனங்கள் இடையே கடுமையான போட்டியும் நிலவி வருகிறது.
ஆன்லைன் வணிகத்தில் போட்டிகள் அதிகரித்து வரும் சூழலில் நிறுவனங்கள் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அவ்வகையில், ஃப்ளிப்கார்ட் நிறுவனமானது ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 90 நிமிடங்களில் மளிகைப் பொருள்களை டெலிவரி செய்வதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தீப் கர்வா வெளியிட்டுள்ளார். அவர் பேசும்போது, ``மளிகைப் பொருள்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மொபைல்கள் ஆகியவற்றை உள்ளூர் அளவில் மிக விரைவாக ஃப்ளிப்கார்ட் டெலிவரி செய்யும்” என்று தெரிவித்தார். மொபைல் டெலிவரி ஆரம்பத்தில் பெங்களூரில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்றும் இந்த ஆண்டின் இறுதியில் ஆறு முக்கிய நகரங்களிலும் இந்த சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமேசான் நிறுவனமும் விரைவாக பொருள்களை டெலிவரி செய்து வருகிறது. ஜியோமார்ட் நிறுவனம் உள்ளூர் வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் வழியாகத் தொடர்புகொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மூன்று நிறுவனங்கள் இடையேயும் கடுமையான போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது. ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் வணிகம் மிகவும் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால், கடைகளின் வழியாக நடைபெறும் வணிகம் அதாவது, ஆன்லைன் தவிர்த்து வெளியில் நடைபெறும் வணிகங்கள் பாதிப்படைந்துள்ளன. கொரோனா ஊரடங்கு மற்றும் ஆன்லைன் வணிக வளர்ச்சி ஆகியவை பிற வணிகர்களையும் ஆன்லைன் பக்கம் இழுத்துள்ளது எனலாம்.
No comments:
Post a Comment